- சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல் காஸா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் முன்வந்திருப்பது முக்கியமான திருப்புமுனை.
- இது இஸ்ரேலுக்குத் தார்மிக அழுத்தத்தையும், பாலஸ்தீனத்துக்கு அதன் எதிர்காலம் குறித்த சிறு நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது. அதேவேளையில், இதன் மூலம் பாலஸ்தீனத்துக்கு முழுமையான விடிவுக்காலம் பிறந்துவிட்டதாகவும் நம்பிவிட முடியாது.
- 2023 அக்டோபர் 7இல் இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து - கடந்த ஏழு மாதங்களாக – காஸா மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்திவருகிறது; பாலஸ்தீனர்கள் உயிர் பிழைக்க இறுதி நம்பிக்கையாக இருக்கும் ரஃபா நகர் மீதும் தாக்குதலைத் தொடர்கிறது.
- இதையடுத்து, இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, பாதுகாப்புத் துறை அமைச்சர் யுவாவ் கலான்ட் ஆகியோர் மீது கைது வாரன்ட் பிறப்பிக்கக் கோரவிருப்பதாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் ஏ.ஏ.கான் மே 20இல் அறிவித்தார்.
- போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், ரஃபா நகர் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றமும் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
- இந்தச் சூழலில், அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கத் தீர்மானித்திருப்பது இஸ்ரேலுக்குத் தார்மிகரீதியில் நெருக்கடி கொடுத்திருக்கிறது. ஏராளமான குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோரை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனம், இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது.
- அதேவேளையில், இந்த நகர்வுகள் இஸ்ரேலை முழுமையாகக் கட்டுப்படுத்திவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எந்தப் பலனையும் தரவில்லை என்பதே இதற்கு உதாரணம்.
- தவிர, இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் அமெரிக்கா, இதுபோன்ற நகர்வுகளை வீரியமிழக்கச் செய்துவிடுகிறது. இஸ்ரேல் தலைவர்கள் மீதான கைது வாரன்ட் தொடர்பான கரீம் ஏ.ஏ.கானின் அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிராகரித்திருப்பது ஓர் உதாரணம்.
- அதேபோல், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் மூலம்தான் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும் அமெரிக்கா தடுத்து நிறுத்திவருகிறது.
- ஏற்கெனவே, 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. எனினும், ஒரு பிரதேசத்துக்குத் தனி நாடு என்னும் அந்தஸ்தை வழங்குவதற்குச் சர்வதேசச் சட்டங்கள் அவசியம். உலக நாடுகள் அங்கு தத்தமது தூதரகங்களை அமைத்துத் தூதரக உறவைத் தொடங்குவதும் முக்கியமானது.
- இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் இருப்பதால், காஸா, ரமல்லா, கிழக்கு ஜெருசலேம் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்ட பிரதிநிதித்துவ அலுவலகங்கள் வழியேதான் பாலஸ்தீனத்துடனான உறவைப் பல நாடுகள் பேணிவருகின்றன. இந்நிலையில், மூன்று ஐரோப்பிய நாடுகளின் இந்தத் தீர்மானம் ஓரளவு நம்பிக்கை அளித்தாலும், பாலஸ்தீனத்துக்கு முழுமையான நீதி கிடைக்கச் சர்வதேசச் சமூகம் இன்னும் நெடுந்தூரம் பயணித்தாக வேண்டும் என்பதே நிதர்சனம்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 05 – 2024)