TNPSC Thervupettagam

பாலஸ்தீனம் - இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

December 2 , 2023 405 days 341 0
  • ஐ.நா. என்பது இஸ்ரேல் இல்லை. ஆனால், ஐ.நா. என்பது அமெரிக்கா வும் இல்லை என்று யோசிக்காமல் சொல்லிவிட முடியாது. ஐ.நா. பகுதி அளவேனும் நியாய தருமத்துக்குக் கட்டுப்படக்கூடிய ஓர் அமைப்புதான். என்ன சிக்கல் என்றால், ஐ.நா. எடுக்கக் கூடிய சில முக்கிய முடிவுகளை அமெரிக்காதனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்துவிடும். அப்போது உலகப் பொதுவான நியாயம் என்பதை அமெரிக்க நியாயம் என்பது எடுத்து விழுங்குவதாகும். காலம் தோறும் இது பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளின்போது நடந்து வந்திருப்பதுதான். பாலஸ் தீனமும் இதற்கு விலக்கல்ல.
  • ஐ.நா.வின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாகப் பார்த்தோம். ஆனாலும் ஏன் அதுநடக்கவில்லை என்றால், இதுதான் காரணம். அமெரிக்க முட்டுக்கட்டை. நீ தனி நாடாகிவிட்டால் நான் செய்துகொண்டிருக்கும் பொருளாதார உதவிகளை உடனடியாக நிறுத்திவிடுவேன். அவ்வளவுதான்.
  • அமெரிக்க உதவி இல்லாமல் பாலஸ்தீனம் பிழைக்க முடியாதா என்றால், கஷ்டம்தான்.ஏனென்றால் அமெரிக்க உதவி என்பதுஅமெரிக்கா செய்யும் உதவிகள் மட்டுமல்ல. அமெரிக்காவின் அடிப்பொடிகளும் பின்னணியில் இருப்பார்கள். தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி அல்லவா? இவை அனைத்தையும் மீறித்தான்ஐ.நா.வின் உறுப்பினர் ஆவதற்கான பாலஸ்தீனத் தரப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • பாலஸ்தீனம் 194 என்பது திட்டத்தின் பெயர். அதாவது, உறுப்பினராகிவிட்டால், 194-வது ‘நாடு’ என்ற பெயர்கிடைக்கும். பாலஸ்தீனத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இதுதான். 1967-ம் ஆண்டு நடைபெற்ற 6 நாள் யுத்தத்துக்கு முன்பாகப் பாலஸ்தீனநிலப்பரப்பு எவ்வளவு இருந்ததோ, அவ்வளவு போதும். கிழக்கு ஜெருசலேத்தைத் தலைநகரமாகக் கொண்டுநாங்கள் ஆண்டுகொள்கிறோம். எங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் மிக நேரடியான அர்த்தம், 1967-க்குப் பிறகு மேற்குக் கரை மற்றும் காஸாவில் நிறுவப்பட்ட இஸ்ரேலியக் குடியேற்றங்களை அகற்றச் சொல்லுங்கள் என்பது.
  • இஸ்ரேல் எப்படி இதனை ஏற்கும்? இஸ்ரேல் ஏற்க இயலாத ஒன்றை அமெரிக்கா எப்படி ஒப்புக்கொள்ளும்? விளைவு, பாலஸ்தீனத்துடன் எந்தவிதமான அமைதிப் பேச்சும் இனி இல்லை என்று இஸ்ரேல் அரசு கதவை மூடியது. நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் உரிமையைக் கேட்கக் கூட அனுமதி இல்லையா என்றார் மம்மூத் அப்பாஸ்.
  • 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பாலஸ்தீனம் சார்ந்த பிரச்சினைகள் முக்கியமான விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக, அரபு லீக் என்கிற மத்தியக் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து தந்து, ஐ.நா.வின் உறுப்பினராக்க தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. மம்மூத் அப்பாஸ் முறைப்படி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்ததை அடுத்து ஆதரவு நாடுகள், எதிர்ப்பு நாடுகள் என்ற இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
  • ரஷ்யா, நார்வே போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக அறிவித்தன. ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் அமெரிக்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன. சரி, வாக்களியுங்கள் என்றார் ஐ.நா. பொதுச் செயலாளர். அதுவும் நடந்தது. ஆனால், ‘உறுப்பினர்களால் ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை’ என்று அறிவித்துவிட்டார்கள்.
  • பிறகு வேறு வழியில்லாமல், உறுப்பினரல்லாத - பார்வையாளராகவாவது ஓரிடம் கொடுங்கள் என்று மம்மூத் அப்பாஸ் மறு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். நவம்பர் 29, 2012-ம் ஆண்டு ஐ.நா.அக்கோரிக்கையை ஏற்றது. விளைவு, கவுரவ உறுப்பினர் என்போமல்லவா? அம்மாதிரி ஓரிடம். கூட்டங்களுக்கு வரலாம். உட்காரலாம். வாய்ப்பு வரும்போது பேசவும் செய்யலாம். ஆனால் எந்தப் பொதுப் பிரச்சினையிலும் ஓட்டுரிமையெல்லாம் இருக்காது. ஒப்புக்கு ஒரு நாற்காலி.
  • உண்மையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால், இஸ்ரேல் அரசும் பாலஸ்தீன அத்தாரிட்டியும் உட்கார்ந்து பேசித்தான் தீர வேண்டும். மாட்டேன் என்று இரு தரப்பில் யார் முறுக்கிக்கொண்டாலும் ஓரடி கூட மேலே எடுத்து வைக்க முடியாது. ஆனால் இஸ்ரேலுடன் தங்களது பிரதிநிதிகள் இதுவரை நடத்திய எந்தப் பேச்சுவார்த்தை குறித்தும் பாலஸ்தீனர்களுக்கு முழுத் திருப்தி வந்ததில்லை. அது ஒரு பயனற்ற செயல் என்றஎண்ணமே அவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது.
  • ‘மிதவாத பாலஸ்தீனர்களுக்குக் கூடஅமைதிப் பேச்சில் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் ஒரு சமயம் எழுதியது. முன்னறிவிப்பின்றி இன்றைக்கு ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தபோது மேற்குக் கரை, காஸா என்ற பேதமின்றி எங்குமே மக்கள் அதை விமர்சிக்காமல் இருந்ததன் பின்னணி இதுதான்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories