TNPSC Thervupettagam

பாலஸ்தீனர்களுக்கு இந்தியா ஆதரவில்லையா?

October 20 , 2024 6 hrs 0 min 21 0

பாலஸ்தீனர்களுக்கு இந்தியா ஆதரவில்லையா?

  • காஸா நிலப்பரப்பில் விவரிக்க முடியாத கொடுந்தாக்குதல்களில் சிக்கிவிட்ட பாலஸ்தீனர்களுக்கு - இந்தியர்களிடம் அனுதாபம் வற்றிவிட்டதா? பாலஸ்தீன விவகாரத்தில் அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? ஹெசபுல்லா இயக்கத் தலைவர் ஹலன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்க, ஷியாக்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, லக்னோ நகரம் ஆகியவற்றில் நடந்த ஆர்ப்பாட்டங்களைத் தவிர பிற பகுதிகளில் அமைதி காப்பது ஏன்?
  • இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள், முஸ்லிம்களுடைய வாக்குகளை அதிகம் நம்பியிருக்கும் சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள்கூட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பெரிய ஊர்வலங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடத்தவில்லை, கண்டன அறிக்கைகளை வெளியிடவில்லை - ஏன்? இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த சில அறிவுஜீவிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு வாரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அதற்கு ஆதரவு இருந்தது.
  • ஹமாஸ் இயக்கத்தின் திடீர் தாக்குதலுக்குப் பிறகு பதிலடியாக இஸ்ரேல் தனது ராணுவம் மூலம் பெருந்தாக்குதலை நடத்தியபோது மதச்சார்பற்ற சில அரசியல் கட்சிகள் அதைக் கண்டித்துப் பேசின. ஆனால், பெரும்பாலான இந்தியர்களிடையே இஸ்ரேலுக்கு எதிர்ப்போ – பாலஸ்தீனர்களுக்கு ஆதரவோ கிளம்பாத நிலையில் மேற்கொண்டு இதில் தீவிரம் காட்ட வேண்டாம் என்று அவை முடிவெடுத்துவிட்டன.
  • எல்லா விவகாரங்களையும்போல இதிலும் காங்கிரஸ் முதலில் ஒரு கருத்தை வெளியிட்டுவிட்டு, பிறகு மற்றவர்கள் மூலம் அதைத் திருத்தியது. பிரியங்கா காந்தி மட்டும், இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டார். மொத்த வாக்காளர்களில் 40% முஸ்லிம்களாக இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அடுத்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி.

எதிர்க்கட்சிகள் கலக்கம்

  • பாஜக அல்லாத பிற கட்சிகளுக்கு இப்போது புதிய கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உடனுக்குடன் அறிக்கை வெளியிடுவார்கள். இப்போது அது இந்துக்களால் எப்படிப் புரிந்துகொள்ளப்படும் என்று ஆராய முற்பட்டிருக்கிறார்கள். ஏதோவொரு நாட்டில் நடக்கும் விவகாரம் என்று முஸ்லிம்களை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு, அதை இந்தியாவின் இந்துக்களில் கணிசமானவர்கள் விரும்பாவிட்டால் தேர்தலில் வாக்குகள் குறைந்துவிடுமே என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
  • கல்நெஞ்சர்களா இந்தியர்கள், பிற நாடுகளில் ஆயிரக்கணக்கில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதை இரக்கமே இல்லாமல் வேடிக்கை பார்க்க? எல்லா வல்லரசுகளையும்போல எந்தவொரு நிகழ்வையும் ‘அரசியல் கண்ணோட்டத்தில்’ பார்க்கும் வழக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுவிட்டதா? இந்துக்கள் இதை ‘யூதர்கள் எதிர் முஸ்லிம்கள்’ விவகாரமாகத்தான் பார்க்கிறார்களா? அப்படித்தான் என்று சிலர் வாதிடலாம், ஆனால் தேசிய நலனைச் சார்ந்த கண்ணோட்டம் இதில் இருக்கிறது.

ஹமாஸ் தாக்குதல்

  • யூதர்களின் பண்டிகை நாள் 2023 அக்டோபர் 7இல், இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள் சில நாள்களுக்கு முன்னால் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் நிலை குறித்து நாம் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

பாஜக வளர்ச்சியாலா?

  • இந்துத்துவக் கட்சியான பாஜக ஆளுங்கட்சியாக இருப்பதாலும் மக்களிடையே இந்து மத ஆதரவு உணர்ச்சி அதிகரித்துவருவதாலும் இந்த நிலைமை என்று எளிதாக முடிவுசெய்துவிடலாம்.
  • மோடி அரசின் எல்லாச் செயலும் இந்துத்துவ நோக்கில், இந்துத்துவ நலன் சார்ந்தே இருக்கும், உலகத்தைப் பார்க்கும் இந்திய அரசின் பார்வையும் அப்படியே என்றும் எளிதாகக் கூறிவிட முடியும். இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்ய யாருக்குத்தான் துணிச்சல் வரும்? இதற்கான விடை அவ்வளவு எளிதானதல்ல.

பாலஸ்தீனம் = காஷ்மீர்?

  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவைக் கூட்டத்தில் சில வாரங்களுக்கு முன் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பாலஸ்தீனர்கள் அனுபவிக்கும் தாக்குதல்கள் குறித்துப் பேசியபோது, “காஷ்மீரிலும் முஸ்லிம்கள் அதே அளவுக்கு கொடுந்தாக்குதல்களைச் சந்தித்துவருவதாக” சாடினார். “பாலஸ்தீனத்துக்கும் காஷ்மீரத்துக்கும் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
  • ஷாபாஸ் ஷெரீஃப் மட்டுமல்ல பாகிஸ்தானின் நட்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, துருக்கி அதிபர் ரெஷுப் தய்யீப் எர்துவான் ஆகியோரும் 2019லேயே, காஷ்மீரைத் தனி நாடாக பிரித்துத் தர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருந்தனர். ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு’ (ஓஐசி) பாலஸ்தீனத்தையும் காஷ்மீரையும் ஒப்பிட்டே, ‘காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவைக் கூட்டத்தில் 2016இல் பேசியபோது, அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலஸ்தீனப் பிரச்சினையுடன் காஷ்மீர் பிரச்சினையையும் ஒப்பிட்டுப் பேசி, காஷ்மீரில் அரசுப் படைகள் மீது இளைஞர்களைவிட்டு தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்த முக்கிய காரணமாக இருந்த புர்ஹான் வாணியைப் பெரும் புரட்சிக்காரராகப் புகழ்ந்தார்.

ஈரான் அதிபர்

  • மியான்மரில் ரோங்கியா முஸ்லிம்கள் சந்தித்துவரும் ஒடுக்குமுறைகள் குறித்து கடந்த மாதம் பேசிய ஈரானிய அதிபர் அலி கமேனி, இந்தியாவின் காஷ்மீரிலும் முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதாகக் கண்டித்தார். இவ்வளவுக்குப் பிறகு ஈரானியர்களுக்காகவும் ஈரானியர்களின் பிரதிநிதிகளாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்காகவும் இந்திய மக்கள் அனுதாபம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?
  • ஒரு காலத்தில் நாம் அப்படிப்பட்ட ‘முட்டாள்களாகவும்’ இருந்திருக்கிறோம், இப்போது உணர்ந்துவிட்டோம்.

காஷ்மீர் பற்றிப் பேசக் கூடாது

  • ‘காஷ்மீர் விவகாரத்தையும் எங்களுடைய பிரச்சினைகளையும் எப்போதும் இணைத்தே பேசாதீர்கள்’ என்று பாகிஸ்தான், ஈரான், துருக்கி, மலேசியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு ஆகியவற்றிடம் பாலஸ்தீனம் தெளிவாகக் கூற வேண்டும்; இரண்டும் ஒன்றுதான் என்றால் இந்தியா ஏன் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்?
  • காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக. பாலஸ்தீனத்துடன் அதையும் சேர்த்துப் பேசுமாறு எல்லா அரங்குகளிலும் வலியுறுத்திய பாகிஸ்தானின் முட்டாள்தனமான அணுகுமுறைதான் இந்தியாவின் பாலஸ்தீன மௌனத்துக்கு முக்கியக் காரணம். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலையைப் பெரும்பாலான இந்தியர்கள் வெறுக்கிறார்கள்.
  • காஷ்மீர் பள்ளத்தாக்குத் தவிர நாட்டின் வேறெங்கு சென்று காஷ்மீர் பிரச்சினை என்று சொல்லிப்பாருங்கள், ‘காஷ்மீருக்கு என்ன பிரச்சினை?’ என்றுதான் மக்கள் கேட்பார்கள். 2019 ஆகஸ்ட் 5இல் காஷ்மீரத்தின் தனி அந்தஸ்தை நீக்கி, அதையும் பிற இந்திய மாநிலங்களுக்கு இணையாக சேர்த்துவிட்ட பிறகு அதில் பேச என்ன இருக்கிறது? இப்போது நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவாகியிருப்பது, ஒன்றிய அரசின் முடிவுக்கு அங்கீகாரம் அளிக்கும் செயலாகிவிட்டது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் முஸ்லிம்கள்கூட, பாகிஸ்தானின் ‘காஷ்மீர் விவகார கண்ணோட்டத்திலிருந்து’ மாறுபடுவதால் அதற்கான ஆதரவு குறைந்துவருகிறது. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற அடிப்படையில் ‘முஸ்லிம்களுக்கு எதிரி யூதர்கள்’ என்பதால் இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கிறது என்ற முடிவுக்கு வருவது தவறாகும். இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான விவகாரமாகிவிட்டது இது.

இஸ்ரேல் விரும்பப்படுவது ஏன்?

  • சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகு, இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் நட்பு நாடு இஸ்ரேல். வெளியுறவுத் துறை இணையத்தில் இந்திய – இஸ்ரேல் உறவு குறித்த தகவல்கள் உள்ளன, படித்தால் விளங்கும். ராணுவ உத்திகளில் நாம் கூட்டாளியாக இருக்கிறோம்.
  • நாம் மட்டுமல்ல, இஸ்ரேலைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு சிற்றரசு, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய வலிமையான இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகளாக இருக்கின்றன. ஈரானின் ஏவுகணைகளைத் தடுத்துத் தகர்க்கும் வேலைகளையும் அவை இஸ்ரேலுக்காகச் செய்கின்றன.

தேசிய நலனே முக்கியம்

  • ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதம் அல்ல, பிற அம்சங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. இதை முஸ்லிம் நாடுகளின் செயல்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ‘முஸ்லிம் பிரதர்ஹூட்’ என்ற அமைப்புடன் தொடர்புள்ள ஈரான், பல நாடுகளுக்கு இப்போது அச்சுறுத்தலாகிவருகிறது. ஈரான் என்பது ஷியாக்கள் ஆதிக்கமுள்ள நாடு.
  • பல முஸ்லிம் நாடுகளே பாலஸ்தீனர்களின் பிரச்சினைகளை - முஸ்லிம்களின் பிரச்சினையாகப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டன. ‘யூதர்கள் எதிர் முஸ்லிம்’, ‘ஷியாக்கள் எதிர் சன்னிகள்’ என்றெல்லாம் இப்போது நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள் பார்க்கப்படுவதில்லை. மதம், இனம், மூன்றாவது உலக நாடு என்ற அம்சங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு - நம்முடைய நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததா, எதிரானதா என்று மட்டுமே மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பாக உலக நாடுகள் முடிவெடுக்கின்றன.

ஜோர்டான், சவூதி உதவி

  • அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இருபெரும் வல்லரசுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்ட – பனிப்போருக்குப் பிந்தைய – காலத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. எல்லா நாடுகளுமே தங்களுடைய நலன் சார்ந்து மட்டுமே செயல்படுகின்றன. 1981இல் ஈராக்கின் ஒசிராக் அணு உலையைத் தகர்க்க ஜோர்டானும் சவுதி அரேபியாவும் இஸ்ரேல் விமானப்படைக்கு உதவின.
  • சோவியத் ஆதரவு பெற்ற ஈராக்கின் அதிபர் சதாம் உசைன் குறித்து அரபு நாடுகளே அச்சத்தில் இருந்தன, ஈராக்கிலிருந்து ‘பாத்’ சித்தாந்தம் தங்களுடைய நாடுகளுக்குப் பரவிவிடும் அதனால் தங்களுக்கும் ஆபத்து என்று அஞ்சியதால் ஈராக்குக்கு எதிராகச் செயல்பட்டன. அதற்காக நாடுகள் மதம், அரசியல் கொள்கை, தார்மிக நெறிகள் ஆகியவற்றுக்கு எதிராகக்கூட செயல்படத் தயாராகின்றன.
  • பாலஸ்தீனர்களைக் கைவிட்டுவிட்டோமா என்று நாம் ஏன் விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்முடைய மத்திய கிழக்கு – இஸ்ரேல் கொள்கையானது அனேக ஆண்டுகளாக பனிப்போர் கால உத்திகளின் அடிப்படையிலேயே தொடர்ந்தது. அரபு நாடுகளை நமக்குத் தொல்லை தரும் நாடுகளாக அப்போது கருதினோம், மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகள் என்றும், பாகிஸ்தானின் புரவலர்கள் என்றும் சாடினோம். ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் ஏன் 34 ஆண்டுகளாகப் போகவில்லை என்பதற்கு என்ன காரணம் சொல்ல முடியும், மோடி தான் 2015இல் அந்த நாட்டுக்குச் சென்றார்.

நேருவுக்கு ஐன்ஸ்டீன் கடிதம்

  • இஸ்ரேல் என்ற நாடு உதயமான விதம், அதை இந்தியா அங்கீகரித்த கதை ஆகியவற்றில் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டதையும் ‘அணிசாரா நிலை’ என்று பாசாங்கு செய்ததையும் அறியலாம். 1947இல் பாலஸ்தீனப் பிரிவினையை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வாக்களித்தது. ‘சுயநல நோக்கில் நாடுகள் சில கொள்கை முடிவுகளை எடுத்தாக வேண்டியதும் கட்டாயம்’ என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 4 பக்க கடிதத்துக்கு எழுதிய பதிலில் அதை நியாயப்படுத்தியிருந்தார் நேரு.
  • பிறகு 1950 செப்டம்பர் 17இல் இஸ்ரேலை அங்கீகரித்தது இந்தியா. இது முரண்பாடாகவோ கபடநாடகம்போலவோ தெரிகிறதா? “இஸ்ரேலை எப்போதோ அங்கீகரித்திருப்போம், இல்லாவிட்டாலும் அது உருவானது உருவானதுதானே; எங்களுடைய அரபு நண்பர்களுக்குக் கோபம் வந்துவிடக் கூடாதே என்று சில ஆண்டுகள் எங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டோம்” என்று அதையும் நியாயப்படுத்தியிருந்தார் நேரு.
  • காலம் செல்லச் செல்ல பிரச்சினைகள் ஏற்பட்டபோது, பல அரபு நாடுகள் (1960களில்) பாகிஸ்தான் பக்கமே மத அடிப்படையில் சாய்வதை இந்தியா அதிர்ச்சியுடன் பார்த்தது. 1971 போரின்போது பாகிஸ்தான் விமானப்படைக்கு ஜோர்டான் சில எஃப்-104 ரக நவீன போர் விமானங்களை கடனாகக் கொடுத்தது. ஈரானை ஆண்ட மன்னர் ஷா, பாகிஸ்தான் விமானங்களுக்கு 1965இல் இந்தியா தாக்கிவிடாமலிருக்க பாதுகாப்பு அளித்தார்.

இஸ்ரேல் உதவி

  • இப்படிப்பட்ட ஆபத்து காலங்களில் எல்லாம் இந்திய ராணுவத்துக்கு இஸ்ரேல்தான், உதவிகளைச் செய்தது. இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இஸ்ரேல் மீது இந்தியர்களுக்கு மதிப்பு உயர்ந்தது. கார்கிலில் மலைச் சிகரங்களை ஆக்கிரமித்துவிட்ட பாகிஸ்தான் ராணுவத்தை விரட்ட இந்திய விமானப்படை முயன்றும் முதலில் முழுப் பலன் கிடைக்கவில்லை.
  • இஸ்ரேல் அப்போது லேசர் கதிர் வழிகாட்டலில் இலக்குகளைத் துல்லியமாக அழிக்க இந்திய குண்டுவீச்சு விமானங்களுக்கு உதவியது. அதன் பிறகுதான் மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் கார்கில் இலக்குகளைத் துல்லியமாக துவம்சம்செய்து பாகிஸ்தானைத் தோற்கடித்தது. அதற்குப் பிறகு அரபு நாடுகளும் இஸ்ரேலுமே நெருங்க ஆரம்பித்தன. ஆப்ரஹாம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்றும் ஆப்ரஹாமிய மதங்கள்).
  • இவ்வாறு இஸ்ரேலுடன் முஸ்லிம் நாடுகளே ராணுவக் கூட்டுவைத்துக்கொள்ளும் அளவுக்குக் காலம் மாறிய பிறகும், பனிப்போர் காலத்திய வெளியுறவு – ராணுவக் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவது முட்டாள்தனம். நீண்ட காலமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ‘மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பு’ என்ற ஒரே கண்ணோட்டத்தையே கொண்டிருந்தது. இன்றைய காலகட்டமானது தேசிய நலனை மட்டுமே அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுப்பது. மக்களுடைய கருத்துக்களும் அதை ஒட்டியே அமைகின்றன.

நன்றி: அருஞ்சொல் (20 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories