- ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக 2022 இல் பதவியேற்ற கதலின் நோவேக், தனக்கு இருந்த மன்னிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக் குற்றவாளிகள் சிலரை விடுதலைசெய்தார். அவர்களில், சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு நபரும் அடக்கம்.
- இச்செய்தி வெளியானதும், பொதுச்சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து அதிபர் கதலினும், அப்பட்டியலை அங்கீகரித்த அன்றைய சட்ட அமைச்சர் யூடித் வார்காவும் பதவிவிலகினர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஐரோப்பிய சமூகம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.
- உலகெங்கும் வாழும் சிறார்களில் 18% பெண் குழந்தைகளும், 8% ஆண் குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறார் மீதான பாலியல் வன்கொடுமை என்பது அக்குழந்தைகளின் உடல், மன நலன் சார்ந்த ஒன்று மட்டுமல்ல; அது சமூகவியல் பிரச்சினையும்கூட. பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள் வாழ்நாள் முழுக்க மன அழுத்தத்துடனும், உடல்நலம் சார்ந்த சிக்கல்களோடும் வாழ நேர்கிறது.
- இவற்றின் பலனாக வெறுப்பும், குற்றவுணர்வும், இயலாமையும் மேலோங்க, அவர்களில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இது ஒரு சங்கிலித்தொடர்போல் நீடிக்கும்போது சமூகச் சமநிலை தொடர்பாதிப்புக்கு உள்ளாகிறது.
வீட்டிலும் பாதுகாப்பில்லை:
- இந்தியாவில், 2012ஆம் ஆண்டில் இக்குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பாலியல் குற்றங்களில்இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO, 2012) இயற்றப்பட்டது. அரசின் புள்ளிவிவரங்களின்படி 2013 முதல் 2022 வரையிலான காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தே வந்துள்ளன.
- விதிவிலக்காகக் கரோனா பாதிப்புகள் தீவிரமடைந்த 2020இல் மட்டும் அக்குற்றங்கள் சற்றே சரிவடைந்துள்ளதைக் காணலாம். அதேவேளையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பெரிய சரிவு ஏற்படவில்லை. குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்லாதபோது பிறரால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளான தாக்குதலுக்கு உள்ளாதல், கடத்தப்படுதல், கொலை செய்யப்படுதல் ஆகியவற்றுக்கான சாத்தியங்கள் குறைகின்றன என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
- அதேநேரம், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உறவினராகவோ, நன்கு அறிமுகமானவராகவோதான் இருப்பார்கள் என்பதால், குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த சூழலிலும் அவர்கள்மீது நிகழ்ந்த பாலியல் தாக்குதல்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதாவது, நம் குழந்தைகள் அவரவர் வீடுகளில்கூடப் பாதுகாப்பாக இல்லை.
- இந்திய அரசு வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான குற்றக்கணக்கீட்டு அறிக்கையின்படி (Crime in India - 2022), அந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,62,449 குற்றங்கள் சிறார்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில் 63,414 நிகழ்வுகள் போக்சோ சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ளன. அதாவது, குழந்தைகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 10 குற்றங்களில் நான்கு பாலியல் வன்கொடுமை தொடர்பானவை.
- ஒட்டுமொத்த போக்சோ வழக்குகளில் கிட்டத்தட்ட சரிபாதியானவை உத்தரப் பிரதேசம் (8,136), மகாராஷ்டிரம் (7,572), மத்தியப் பிரதேசம் (5,996), தமிழ்நாடு (4,968), ராஜஸ்தான் (3,731) ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன. அடுத்த இடங்களில் கேரளமும் (3,334), கர்நாடகமும் (3,155) உள்ளன. தென் மாநிலங்களில் தமிழ்நாடுதான் இத்தகைய குற்றங்களில் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
- தமிழ்நாட்டில் நடைபெறும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் நான்கில் மூன்று பங்கு நிகழ்வுகள் அவர்கள் மீதான பாலியல் தாக்குதலுடன் தொடர்புடையதாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாடு அளவிலான விகிதத்துடன் (39%), ஒப்பிட்டால் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் (76%). தமிழ்நாட்டில் நடைபெற்ற போக்சோ குற்றங்களில் 5,106 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- போக்சோ சட்டத்தின் பல்வேறு உட்பிரிவுகளின்கீழ் பதிவான வழக்குகளையும், அவற்றால் பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கையையும் பார்க்கும்போது, ஒரே குற்ற நிகழ்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
- ஒப்பீட்டளவில் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றக்கணக்கீட்டு அறிக்கை தெரிவிக்கிறது. ஆண் குழந்தைகளும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவார்கள், குற்றவாளிகள் பெண்களாக இருக்கக்கூடும் என்பதையும் வியப்பாகக் காணும் நிலையே இன்றுள்ளது.
- ஒட்டுமொத்தமாக இந்தத் தரவுகள், கல்வி, பொருளாதார வளர்ச்சியில் முன்வரிசையில் இருக்கும் முற்போக்கான மாநிலமான தமிழ்நாடு சிறார் நலனில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதையே காட்டுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்துவது, குழந்தைகள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கான மருத்துவத் தீர்வுகள், ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள், சட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்க வேண்டியது அரசின் கடமை. மாநில அளவில் இதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கினால்தான் அக்குழந்தைகளை மீட்டெடுத்துப் பொதுநீரோட்டத்தில் கலக்கச்செய்ய இயலும்.
பாலியல் குற்றங்களைத் தவிர்க்க...
- பலவந்தமான பாலியல் தாக்குதல் (Penetrative sexual Assault), எல்லைமீறிய பலவந்தமான பாலியல் தாக்குதல் (Aggravated penetrative sexual assault), எல்லைமீறிய பாலியல் தாக்குதல் (Aggravated Sexual Assault), பாலியல் தொந்தரவு (Sexual Harassment) என்பன உள்ளிட்டவற்றைக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என வகைப்படுத்தி, அவற்றுக்கான தண்டனைகளையும் சட்ட வழியிலான தீர்வுகளையும் போக்சோ சட்டம் முன்வைக்கிறது. அத்துடன் ஊடகங்கள், மருத்துவர்கள், காவலர்கள், நீதித் துறையினர் இப்பிரச்சினைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
- வேறு யாரிடமும் அதிகாரத்தைச் செலுத்த இயலாத சிலர் தங்களைவிடப் பலவீனமாக இருக்கும் குழந்தைகள்மீது பாலியல் தாக்குதல் தொடுப்பது உண்டு. முறையான பாலுறவுக்கான வாய்ப்பற்றோர், பாலுணர்வுக் குறைபாடு கொண்டோர், போதை அடிமைகள், மனநல பாதிப்புகொண்டோர், பிறவியிலேயே குழந்தைகள்மீது காமம்கொள்ளும் நிலை கொண்டோரும் (born pedophile) இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் ‘வாடிக்கைக் குற்றவாளி’களாக (habitual offender) இருக்கின்றனர்.
- இது மிகச் சிக்கலான நிலை என்றாலும், இந்த வாடிக்கைத்தனம்தான் அவர்களைக் கண்டறியவும், கட்டுப்படுத்தவும் காரணியாக அமைகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளானோரைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது, குற்றவாளிகளைத் தனிமைப்படுத்தி, குழந்தைகளிடம் இருந்து வெகுதூரம் விலக்கிவைப்பது, அவர்கள் குறித்த பகுதிவாரியான பதிவேடுகளைப் பராமரிப்பது, சிறைத்தண்டனை முடிந்து விடுதலையாகும் குற்றவாளிகளைக் கண்காணிக்க முறையான அமைப்புகள், முறைமைகளை உருவாக்குவது ஆகியவற்றுடன் அவர்களுக்கு உளவியல், மருத்துவச் சிகிச்சைகள் அளிப்பதும் அவசியம். இதன்மூலம் அவர்கள் மீண்டும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க முடியும்.
- அதேபோல், அதிகார அழுத்தங்களைப் பயன்படுத்தி இக்குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடாமல் இருக்க மேற்கத்திய சமூகங்களின் சட்ட, சமூக நடவடிக்கைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
குழந்தைகளைக் காப்போம்:
- முதற்கட்டமாக இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் தனிநபர் சார்ந்த தகவல்கள் (personal information), அவர்களுடைய சமூக, பொருளாதாரப் பின்னணி, குற்றம் நிகழ்ந்த இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிப்பதன் வழியே இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகளை நம்மால் உருவாக்க முடியும்.
- தரவுகளையும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் இணைத்து இத்தகைய குற்றங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கவும் இயலும். அதுசார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பது இன்றைய காலத்தில் கட்டாயம். ஆனால், அதற்கான தரவுக் கட்டமைப்போ, ஒருங்கிணைப்போ, ஒத்துழைக்கும் மனநிலையோ அரசு இயந்திரத்திடம் இல்லை.
- குழந்தைகளுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்கள், அவர்களுக்குத் துணைநிற்பவர்கள் அனைவருமே சமூகத்துக்கு எதிரான பிறழ் மனநிலை கொண்டவர்கள்; அது மட்டுமல்ல - அவர்கள் அறம் பிறழ்ந்தவர்களும்கூட. ஜனநாயக அமைப்பில் அறத்தைக் கூற்றாக்கி, நீதியை நிலைநாட்டுவது மக்களாகிய நம் கைகளில்தான் உள்ளது. மானுடகுலத்தின் விதை நெல்களான குழந்தைகளைக் காப்பதுதான் நம் தலையாய கடமை. அதற்கான முயற்சிகளை இன்றே, நமது மாநிலத்தில் இருந்து தொடங்குவோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 05 – 2024)