TNPSC Thervupettagam

பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன?

December 28 , 2019 1846 days 1512 0
  • பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் 20 முதல் 30 வயதுக்குள் இருப்பது கவலை அளிக்கிறது. இளவயதினர் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களது மனங்கள் சிதைந்து விகாரப்பட்டுப் போனதே. அதற்கான காரணிகளை ஆராய்வது மிகவும் அவசியம்.

திரைப்படங்களில்...

  • திரைப்படங்கள் பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கின்றன. ஒரு பெண் நடந்து சென்றால், அவள் பின்னால் ஆண்கள் கூட்டம் பல்லிளித்துக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டு போவதாகவும், அதை அந்தப் பெண் ரசிப்பதாகவும் காலங்காலமாகக் காட்டி வருகிறார்கள்.  இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நடனங்கள், இயற்கைக்கு முரண்பாடான உறவுகள் என்று இளைய தலைமுறையை திரைப்படங்கள் சீரழித்து விட்டன.
  • திரைப்படங்களின் அடியை ஒற்றி, சமூகச் சீரழிவுக்கு தொலைக்காட்சி துணை செய்கிறது. "பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பது குற்றம்' என்று சட்டம் சொல்கிறது. அதற்குத் தண்டனையும் உண்டு. ஆனால், "கீழ்த்தரம்' என்பதன் அளவீடு மாறிவிட்டதாகத் தெரிகிறது.
  • அழகு என்பதைத் தாண்டிக் கவர்ச்சி வந்தது; கவர்ச்சி என்பதைத் தாண்டி  ஆபாசம் வந்தது; இன்று ஆபாசம் என்பதைத் தாண்டி அருவருப்பு வந்திருக்கிறது. திரையில் பார்க்கும் அருவருப்பான ஆடைகளையும் உறவுகளையும் பார்த்து மக்களின் மனங்கள் விகாரப்பட்டுப் போனதன் நேரடி விளைவே பாலியல் வன்முறைக்கு பெண்கள் உள்ளாவது.
  • வலைதளங்கள், இணையதளம், செல்லிடப்பேசி  மூலமாக எளிதில் கிடைக்கும் தடையற்ற ஆபாச விஷயங்கள் இளைஞர்களை மட்டுமின்றி எல்லா வயதினரின் மனங்களையும் சிதைத்து விட்டன. ஆண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமையில் ஈடுபடுகிறார்கள்;

பாலியல் வன்முறை

  • பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். ஆண்கள் மனது எவ்வளவு விகாரப்பட்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகளைக் குற்றம் எனத் தெரிந்திருந்தும், அவற்றைப் படம் பிடித்துத் தைரியமாக வலைதளங்களில் வெளியிடுவார்கள்? இன்னும் கொடுமை கூட்டுப் பாலியல் வன்முறைகள். 
  • இத்தகைய நிலைக்கு மதுவும் காரணம். மது அருந்துவது அந்தஸ்தின் அடையாளம் எனும் எண்ணம், கையில் தாராளமாகப் புழங்கும் பணம், தாங்கள் போற்றும் திரை நட்சத்திரங்கள் திரையில் குடிப்பதை முன்னுதாரணமாகக் கொள்ளும் போக்கு, உல்லாசமாகத் திரிய எளிதில் கிடைக்கும் இரு சக்கர வாகனங்கள், வெட்டி நண்பர்கள் கூட்டம், இருண்டு கிடக்கும் சாலையோரங்கள்,பாதுகாப்பற்ற பணியிடங்கள் - இவையாவும் பெண்களுக்கு எதிராகத் திரண்டு நிற்கின்றன.
  • எந்தவித வருத்தமும் தெரியாமல், எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் இளைஞர்கள் தினவெடுத்துக் கிடக்கிறார்கள். இவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த நமது கல்வித் திட்டமோ,அரசோ, ஆன்மிகவாதிகளோ, அரசியல்வாதிகளோ, தலைவர்களோ முனையவில்லை. பெற்றோர்கள் இவர்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை.

கலாச்சாரம் மற்றும் பண்பாடு

  • நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் நாம் மறந்ததும் ஒரு காரணம். அமைதியும் அடக்கமும் கூடிய நம் விழாக்கள் எல்லாம் இப்போது ஆர்ப்பாட்டமும் களியாட்டமுமாக மாறிவிட்டன. காதலர் தினமும், புத்தாண்டுக் கேளிக்கைகளும், திருமண விழாவில் "சங்கீத்' என்ற பெயரில்  பாட்டும், ஆட்டமும், குடியும், கூத்தும் நமது கலாசாரம் அல்லவே.
  • இத்தகைய வெறியாட்டங்களில் எல்லாம் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்வது தீங்கைத் தாங்களாகவே வரவழைத்துக் கொள்வதாக அல்லவோ ஆகிறது? திரை நட்சத்திரங்களைப் பார்த்துத் தாங்களும் அவர்களைப் போலவே அரைகுறை ஆடை அணிந்து, ஆணும் பெண்ணும் கட்டுப்பாடின்றிப் பழகுவது, போகக்கூடாத இடத்துக்கு போகக்கூடாத நேரத்தில் போவது- இவை ஆண்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை; பெண்களுக்கே தீங்கு விளைவிக்கின்றன.
  • குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருவதும் ஒரு காரணி என்றே கூற வேண்டும். நம் கலாசாரத்தில் குடும்ப அமைப்பு என்பது முக்கியமான அங்கம் வகிக்கிறது. இளையவர்களை வழிநடத்த பெற்றோர்களும், வீட்டுப் பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில சமயம் கசப்பாக இருந்தாலும், தங்கள் நன்மைக்கே என்பதை இளைஞர்கள் உணர்ந்தால் நல்லது. இளையவர்கள் தங்களை முன்மாதிரியாகக் கொள்ளும் வகையில் தங்கள் நடவடிக்கைகளை பெரியவர்களும் அப்பழுக்கில்லாத வண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
    அரசின் மெத்தனமும், பொதுமக்களின் சமூக அக்கறையின்மையும், சட்டம் மிக மெதுவாகச் செயல்படுவதும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கக் காரணம். நிர்பயா குற்றவாளிகள் இன்னும் தூக்கில் போடப்படாமல் இருக்கிறார்கள்.

காரணங்கள்

  • காரணங்கள் எவையாக இருப்பினும் அவற்றுக்குத் தீர்வு காண நாம் முயற்சிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மீதான குற்றங்களுக்குக் காரணங்களை மதுரை உயர்நீதிமன்றம் ஆராய்ந்து, அவற்றைப் பட்டியலிட்டு, அவற்றை எதிர்கொள்ளத் தகுந்த வழிமுறைகளையும் அறிக்கையாகச் சமர்ப்பிக்க அரசுக்கு அறிவுறுத்தியது; அதன் நிலை தெரியவில்லை.
  • பெண்கள் மீதான பார்வை மாறவேண்டும். பெண்களை இழிவாகக் காட்டுவதை திரைப்படங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அப்படிச் செய்யாத நிலையில், அரசு தலையிட்டு மிகக் கடுமையான தணிக்கை விதிகளைச் செயல்படுத்த வேண்டும். தணிக்கைக் குழுவில் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களை மட்டும் உறுப்பினர்களாக்குவது சரியன்று.

பெண்ணுரிமை

  • பெண்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், ஓய்வு பெற்ற நேர்மையான குடிமைப் பணி அதிகாரிகள், பெண்கள் பிரச்னைகளை அலசும் ஊடகவியலாளர்கள், சமுதாயத்தில் போற்றும் நிலையிலுள்ள ஒழுக்கசீலர்கள் ஆகியோரையும் சேர்த்து நியமித்தால் திரைப்படங்களின் தரம் உயரும்.
  • ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்லூரியில் பயில்வதும், பணி நிமித்தம் நேரம் காலம் பார்க்காமல் ஒன்றாக வேலை செய்வதும், பயணம் செய்வதும் இன்று அவசியமாகிவிட்ட நிலையில், இருவருமே ஓர் எல்லை வகுத்துக் கொண்டு பழக வேண்டியதும் அவசியமாகிறது. ஆண்கள் சட்டென்று அணுக முடியாதபடி பெண்கள் ஒரு நெருப்பு வளையத்தை அணிந்து கொள்வது நல்லது. பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்களும் செய்வது சரியல்ல.
  • ஆண், பெண் இருவருக்குமே ஆடைக் கட்டுப்பாடு தேவை. ஆதிமனிதர்கள் அரைகுறை ஆடை அணிந்து திரிந்தார்கள்; நாகரிக மனிதர்களாகிய நாமும் அப்படிச் செய்யலாமா? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் கூடாது. இது பல சமயம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாய் அமைந்துவிடுகிறது.
  • பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், எல்லாவற்றிலுமே வேலை நேரம் மிக அதிகமாய் உள்ளது. குடும்பத்தினரோடு செலவிடும் நேரம் குறைந்து விட்டது. இதனால், குழந்தைகளின் பிரச்னைகள் குறித்துப் பெரியவர்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். கூடா நட்பில் விழுகிறார்கள்.

நன்றி: தினமணி (28-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories