TNPSC Thervupettagam

பாலூட்டிகளுக்கு ஐந்து விரல்கள் இருப்பது ஏன்?

May 23 , 2024 229 days 165 0
  • மனிதர்களுக்குக் கைகளிலும் கால்களிலும் ஐந்து விரல்கள் இருப்பதுபோல, பூனைகள், நாய்கள் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளின் கால் பாதங்களில் ஐந்து விரல்கள் அமைந்திருப்பது ஏன் என்னும் கேள்விக்கு நீண்ட காலமாக அறிவியலாளர்களுக்கு விடை தெரியாமல் இருந்துவருகிறது. விலங்குகளின் கால் பாதங்களில் சில விரல்கள் சுருங்கியிருக்கலாம் அல்லது இடம் மாறியிருக்கலாம். ஆனாலும் ஐந்து என்னும் எண்ணிக்கையில் மாற்றம் இருப்பதில்லை. முற்றிலும் வேறுபட்ட சூழலில் பரிணாம வளர்ச்சிபெற்றுவந்த மனிதர்களுக்கும், மயிருள்ள விலங்குகளுக்கும் இப்படி ஓர் ஒற்றுமை இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?
  • இதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு முன்பு முதுகெலும்பும், எலும்புக்கூடும் கொண்ட நான்கு கால் விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஊர்வன, பறப்பன, தவளைகள், தேரைகள் போன்ற சிறிய முதுகெலும்பு கொண்ட விலங்குகளும் நான்கு கால் விலங்குப் பிரிவில் அடங்கும். இதே பிரிவில் பாலூட்டிகள் மேன்மைப்பிரிவைச் சேர்ந்தவையாகும். வழக்கமான கால்கள் இல்லையென்றாலும்கூட திமிங்கலங்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் ஆகியவற்றிற்கு அவற்றின் துடுப்புக்களில் ஐந்து விரல்கள் உள்ளன.
  • சில விலகல்களும் உள்ளன. குதிரைகளுக்கு ஒருவிரல் மட்டுமே உள்ளது. பறவைகளின் இறக்கைகளின் ஓரத்தில் ஒரு இணைந்த விரல் எலும்பும் உள்ளது. இந்த விலங்குகளும்கூட கருவில் ஐந்து விரல்களுடன் உருவாகி, பிறப்பதற்கு முன்பாக சில விரல்கள் சுருங்கிவிடுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உயிரியலில், விரல்களை முடிவுசெய்வது ‘ஹாக்ஸ்’ மரபணுக்கள். ‘ஹாக்ஸ் மரபணுக்கள்’ உடலின் வடிவத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்துபவை. உயிரிகளின் பரிணாம வளர்ச்சித் துறையின் உயிரியியலாளர் தாமஸ் ஸ்டீவர்ட், ஹாக்ஸ் மரபணுக்கள், மற்ற மரபணுக்களின் செயல்களை ஒழுங்குபடுத்தும் புரோட்டின்களில் தேவையான கட்டளைகளைப் பதிவுசெய்கின்றன என்று சொல்கிறார். எந்த ஒரு விலங்கின் உடலிலும், உடல் உறுப்புக்கள் சரியான இடங்களில் முடிவடையவேண்டும் என்பதற்குக் கரு உருவாகும்போதிலிருந்தே இம்மரபணுக்கள் உதவுகின்றன.
  • எடுத்துக்காட்டாக கைகள், கால்கள் எத்தனை நீளம் இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யும் மரபணுக்களும் ஆகும். பிறகு கைகள், கால்கள் முடியும் இடத்திற்கு அருகில் உள்ள செல்கள் தனித்தனி விரல்களை உருவாக்குகின்றன. இதன்படி விரல் மொட்டுக்கள் வளர்கின்றன. விலங்குகளைச் சார்ந்து இவ்விரல் மொட்டுக்கள் முழுமையான விரல்களாக வளர்வதும் உண்டு, திரும்பவும் உட்கவரப்படுவதும் உண்டு. இது விளக்குவதற்கு மிகவும் சிக்கலான நடைமுறை என்று ஸ்டீவர்ட் கூறுகிறார்.
  • கால் பாதங்களில் ஐந்து விரல்கள் உருவாகும் உயிரியல் வினை எப்போது முதன்முதலாகப் பரிணாமம்கொண்டது என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது. 360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக எட்டு விரல்களுடன் பரிணாமவளர்ச்சிபெற்ற உயிரினம், மீன்கள். பெரும்பாலான முதுகெலும்பு கொண்ட உயிரினங்களில் காணப்படும் ஐந்து விரல் அமைப்பு, ஒரு பொது மூதாதையரிடமிருந்து வந்திருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதன் காரணமாக, ஒரு மரபணு அல்லது உடல் கட்டமைப்பு, பொது மூதாதையரிடம் இருந்து பிரிந்துவந்த பல உயிரினங்களுக்கும் பொதுவாக அமைந்துவிடுகிறது. இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து நான்குகால் முதுகெலும்பு உயிரினங்களுக்கும் பொதுமூதாதையர் ஏதோ ஒருவிதத்தில் ஐந்து விரல்களுக்குப் பரிணாம மாற்றம் கண்டு, அதன்பிறகு அந்த அமைப்பை அதனிலிருந்து பிரிந்துவந்த மற்ற உயிரினங்களுக்குக் கடத்தியிருக்கிறது என்றும் ஸ்டீவர்ட் கூறுகிறார்.
  • பாலூட்டிகளுக்கு ஐந்து விரல்கள் இருப்பதற்கு ஒரு பொதுமுன்னோர் இருக்கவேண்டும் என்பது சரியான விளக்கமாக இருந்தாலும், ஏன் ஐந்து விரல்கள் என்னும் கேள்விக்கு விடை இல்லை. கால ஓட்டத்தில், ஒரு மரபணு மாற்றம் கொள்ளாமல் நிலைத்திருக்கும் பண்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதுகெலும்பும், கழுத்தும் கொண்ட பாலூட்டிகளைச் சான்றுகளாக ஸ்டீவர்ட் கூறுகிறார். பாலூட்டிகளின் முதுகெலும்பில் பெரும்பாலும் ஏழு எலும்புத்துண்டுகள் உள்ளன. இந்தக்கொள்கையின் அடிப்படையில், ஏன் ஏழு துண்டுகள் என்னும் கேள்வி எழக்கூடும். ஆனால் அதனையும் கடந்து சிந்தித்தால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே ஏழு முதுகெலும்புத் துண்டுகள் சூழலுக்கு ஏற்றவாறு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்றும் கொள்ளலாம். அப்படியானால் அதனை மாற்றுவதற்கான தேவை ஏற்படவில்லை என்றும் ஆகிறது. இக்கொள்கை விளக்கம் ஏன் ஐந்து விரல்கள் என்பதற்கும் பொருந்தும்.
  • என்றாலும் அனைத்து ஆய்வாளர்களும் இந்தக் கொள்கையை ஏற்பதில்லை. மனிதர்கள் உள்ளிட்டு பல பாலூட்டி விலங்குகளிடம் ஐந்துக்கு மேற்பட்ட விரல்கள் இருப்பதைக் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தின் மரபணு ஆய்வாளர் கிம்பர்லி கூப்பர் சுட்டிக்காட்டுகிறார். ஒன்றிற்கு மேற்பட்ட மரபணுத் திரிபுகள் காரணமாக ஐந்துக்கு மேற்பட்ட விரல்கள் தோன்றக்கூடும். ‘இயற்கை’ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக்கட்டுரை ஒன்று சோனிக் ஹெட்கிஹாக் மரபணுவில் திரிபு ஏற்படும்போது ஐந்துக்கும் மேற்பட்ட விரல்கள் தோன்றக்கூடும் எனச் சொல்கிறது.
  • கூப்பர் அக்கருத்தை ஏற்கவில்லை. ஐந்துக்கு மேற்பட்ட விரல்கள் குறிப்பிட்ட மரபணுத் திரிபால் உருவாகிறது என்றால், அப்படி ஓர் இனம் ஏன் இயற்கையில் உருவாகி நிலைபெறவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். என்றாலும் அதற்கான உறுதியான கோட்பாட்டை யாரும் தரவில்லை என்றும் ஸ்டீவர்ட் கூறுகிறார். ஐந்துக்கு மேற்பட்ட விரல்களைக்கொண்டவர்களை அரிதினும் அரிதாகவே காணமுடிகிறது. எனவே ஐந்து விரல்கள் ஏன் என்னும் கேள்விக்கு விடைகாண்பது மிகவும் சவாலானதும், கிளர்ச்சியூட்டுவதும் ஆகும் என்றும் ஸ்டீவர்ட் கருத்துரைக்கிறார்.

நன்றி: தினமணி (23 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories