TNPSC Thervupettagam

பாலையாக மாறும் பூமி!

September 13 , 2019 1955 days 1119 0
  • உலக அளவில் பூமி தனது உயிர்ப்பை இழந்து வருகிறது. பாலைவனமாக மண் மாறிக்கொண்டு வருகிறது.  உலகம் பாலைவனமாதலைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சபையில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
  • அந்த அமைப்பில் ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த அமைப்பின் 14-ஆவது மாநாடு தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் அண்மையில் கூடியது.
  • சமீபத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் நரேந்திர மோடி, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தரிசு நிலங்களை வளப்படுத்தும் தனது இலக்கை எட்டும் என்று அறிவித்திருக்கிறார்.
  • கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான இரண்டாண்டுகளில் இந்தியாவின் வனப்பரப்பு 80 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நிலங்களின் பரப்பளவு

  • இப்போது இந்தியாவில் தரிசாகக் கிடந்து மீட்டெடுக்கப்பட்டு வளப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களின் பரப்பளவு 2.18 கோடி ஹெக்டேராக இருப்பதாகவும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அதை 2.60 கோடி ஹெக்டேராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
  • இது குறித்து ஆய்வு ஒன்றை இஸ்ரோ நடத்தியிருக்கிறது. பாலைவனமாதல், நிலம் தரிசாக மாறுதல் குறித்த வரைபடம் ஒன்றை செயற்கைக்கோள் உதவியுடன் இஸ்ரோ தயாரித்திருக்கிறது.
  • அதன்படி, இந்தியாவிலுள்ள மொத்த நிலப்பரப்பில் 30% அளவில் தரிசாக இருப்பதாகத் தெரிகிறது. நிலம் தரிசாக மாறுவதைத் தடுப்பதும், அவற்றை மீண்டும் வளப்படுத்துவதும் எளிதல்ல. அதற்கு அடிப்படையில் நீர் மேலாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், மண் வளம் அதிகரித்தல் என்று மூன்று விதமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. 
  • பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து விவசாயம் செய்யப்பட்டு வருவதால் மண் தனது உயிர்ப்புச் சத்தை இழந்துவிட்டிருக்கிறது. அதை ஈடுகட்ட அதிக அளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால் இந்தியாவின் விளைநிலங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது என்கிற கூற்றை மறுப்பதற்கில்லை.

பருவநிலை மாற்றம்

  • கடல் மட்டம் அதிகரித்தல், கடல் சீற்றம், பருவநிலை மாற்றத்தால் சீரற்ற மழைப் பொழிவு, புயல் - சூறாவளிகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகள், வறட்சி காரணமாக உருவாகும் புழுதிப் புயல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மண் வளம் பாதிப்பதற்கான காரணங்கள்.
  • தரிசு நிலங்களை வளப்படுத்துதல் என்று திட்டமிடும்போது, போதிய பாசன வசதி அத்தியாவசியமாகிறது. 
  • ஏற்கெனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகள், கோடையில் காணப்படும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன.
  • நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்வது, மழை நீர் வீணாவதைத் தடுப்பது, மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பது என மண் வளத்துடன் நீர் வளத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. 
  • சூழலியலை பெரிய அணைகள் பாதிக்கின்றன என்பதால் தடுப்பணைகள் மூலம் மட்டுமே நதிநீரை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  • அதிகமான தடுப்பணைகள் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்து மண் வளத்தையும், நீர் வளத்தையும் மேம்படுத்தும். 

வனப் பாதுகாப்பு

  • வனப்பரப்பை அதிகரிக்கச் செய்வது என்பது, நிலம் பாலைவனமாகாமல் தடுக்கும் முயற்சியில் மிக முக்கியமான கூறு. விண்வெளி தொழில்நுட்பமும், தொலையுணர்வு தொழில்நுட்பமும் வனப்பரப்பை கச்சிதமாகக் கணித்து தெரிந்துகொள்வதற்கு வழிகோலுகின்றன.
  • அதில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. 
  • இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் வனப்பரப்பின் அளவு ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • பிரதமர் அந்த மாநாட்டில் தெரிவித்திருப்பதுபோல, ஏனைய நாடுகளுக்கும் நமது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் வனப் பரப்பைக் கணக்கிட இந்தியாவால் வழிகாட்ட முடியும்.

 காடுகள் அழிப்பு

  • உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய வனங்கள் ஆய்வு மையம் (ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா) என்கிற அமைப்பு செயல்படுகிறது.
  • இந்த அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வனப் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • ஒருபுறம் காடுகள் அழிக்கப்படுவதும், வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் வனப் பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதும் நடந்து கொண்டிருந்தும்கூட இந்திய வனங்கள் ஆய்வு மையத்தின் அறிக்கையில், வனப் பரப்பு அதிகரித்து வருவதாகக் கூறுவது முரணாகத் தெரிகிறது.
  • அந்த ஆய்வு மையம் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் வனப்பரப்பை நிர்ணயிப்பதில்தான் தவறு நேர்கிறது.
  • செயற்கைக்கோள் படங்கள் இயற்கை வனங்களுக்கும், தோட்டப் பகுதிகளுக்கும், சாலையோர மரங்களுக்கும் வேறுபாடுகளைக் காட்டுவதில்லை. அதனால், அந்த ஆய்வின் அடிப்படையில் வனப்பரப்பை நிர்ணயிக்க முடியாது.
  • நிலம் தரிசாக மாறுவதைத் தடுக்க வேண்டுமானால், இயற்கை வனப் பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளையும் அனுமதிக்கக் கூடாது.
  • நீர் மேலாண்மைக்கும், இயற்கை விவசாயத்திற்கும் ஊக்கமளித்து, தரிசு நிலங்களில் இஸ்ரேல் போன்ற நாட்டின் உதவியுடன் சொட்டு நீர்ப்பாசன விவசாயத்திற்கு ஊக்கமளிப்பது, பிரதமர் நிர்ணயித்திருக்கும் இலக்கை இந்தியா எட்டுவதற்கு வழிகோலும். 
  • தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதன் மூலம், இந்தியாவின் 60% மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும். அந்த இலக்கை நோக்கிய நமது பயணம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories