- குஜராத் மாநில அரசின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டில் பால் பொருள்கள் விற்பனையையும் தாண்டி பால் கொள்முதலில் இறங்க விருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதில் பாஜகஅரசியல்ரீதியாக எதிர்பார்க்கும் லாபம்என்ன எனத் தெரியவில்லை. ஆனால், கர்நாடகத்தில் இது போன்ற முயற்சிகள், சமீபத்திய தேர்தலில் அக்கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை நினைவுகூர்வது அவசியம்.
சலனம் ஏற்படுத்திய அறிவிப்புகள்:
- கடந்த மார்ச் மாதம், தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் ‘தஹி’ எனக் குறிப்பிட வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நேரம் என்பதால், காங்கிரஸ் அதைக் கையிலெடுத்துக் களமாடியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அமுல் விவகாரம் தலைதூக்கியது. அதாவது ஏற்கெனவே, புகைந்துகொண்டிருந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
- 2022 டிசம்பர் 30 அன்று மாண்டியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா,அமுல் நிறுவனமும் கர்நாடகத்தின் நந்தினி நிறுவனமும் இணைந்து கர்நாடகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பால் விற்பனையில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்தார். சித்தராமையா முதல் குமாரசாமி வரை பலரும் இதைக் கண்டித்தனர். இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று சொல்லப்பட்டாலும், ஒருகட்டத்தில் நந்தினியை அமுல் விழுங்கிவிடும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.
அமுலுக்கு எதிரான அணி:
- இதற்கிடையே ஏப்ரல் 5 அன்று அமுல் நிறுவனம், பெங்களூரு நகரில் பால் - தயிர் விற்பனையில் ‘புத்துணர்வின் புதிய அலை’ வரவிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டது. கர்நாடக இணையவாசிகள் அதைக் கடுமையாக விமர்சித்தனர். ஏற்கெனவே, கர்நாடகத்தின் விஜயா வங்கியை குஜராத்தின் பரோடா வங்கியுடன் இணைத்ததையும், கர்நாடகத்தின் விமானநிலையங்களும் துறைமுகங்களும் பராமரிப்புக்காக அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி சித்தராமையா விமர்சித்தார்.
- அமுல் தயாரிப்புகளைப் போலவே நந்தினி பால் பொருள்கள் சென்னை, மும்பை, புணே, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் கிடைக்கவே செய்கின்றன. இதைக் குறிப்பிட்ட சித்தராமையா, “அங்கெல்லாம் தேவை இருப்பதால்தான் நந்தினி பால் பொருள்கள் விற்கப் படுகின்றன. ஆனால், கர்நாடகத்தில் நந்தினிக்குப் பதிலாக அமுல் முன்வைக்கப்படுவதுதான் பிரச்சினை” என்றார். கர்நாடக மாநில உணவகங்களும் நந்தினி பால், தவிர வேறு எதையும் வாங்கப்போவதில்லை எனச் சூளுரைத்தன.
- இப்படி ஒட்டுமொத்தமாக அமுலுக்கு எதிராகக் கர்நாடக மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அணிதிரண்டனர். ஆனால், பிரச்சினையின் தீவிரத்தை உணராத அப்போதைய முதல்வர், “நந்தினி பால் பொருள்கள் பிற மாநிலங்களிலும் விற்கப்படுகின்றன. அமுலை நினைத்து அஞ்ச வேண்டியதில்லை. இரு நிறுவனங்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” என்று பேசிக்கொண்டிருந்தார். அதன் விளைவு தேர்தலில் எதிரொலித்தது.
அறுவடை செய்த காங்கிரஸ்:
- பெல்காம், தும்கூர், ஹாஸன், மைசூரு, மாண்டியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் பால் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் இவை. அமுலை வைத்து நந்தினியை நசுக்க பாஜக திட்டமிடுவதாகக் காங்கிரஸ் முன்னெடுத்த பிரச்சாரம், அக்கட்சிக்கு நல்ல அறுவடையைக் கொடுத்தது.
- இந்த மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செல்வாக்கு நிறைந்த அந்தத் தொகுதிகளில் அக்கட்சி பெரும் இழப்பைச் சந்தித்தது. ஒட்டுமொத்தத் தொகுதிகளின் கணக்கில் இது பாஜகவின் தோல்விக்கு வழிவகுத்தது.
- இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவே, கேரளத்தில் விற்பனை மையங்களைத் தொடங்கி நந்தினி தயாரிப்புகளை விற்கும் முயற்சியில் கர்நாடகப் பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு இறங்கியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள அரசுக்குச் சொந்தமான பால் உற்பத்தி நிறுவனமான மில்மா (Milma) இதனால் பாதிக்கப்படும் எனக் கேரளத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன; பால் அரசியல் தொடர்கிறது!
நன்றி: தி இந்து (01 – 06 – 2023)