பாவப்பட்ட விமானப் பயணிகள்!
- “‘நிா்வாகக் காரணங்களுக்காக விமானங்கள் ரத்து’” என்ற தலைப்புச் செய்தி கடந்த சில நாட்களாகவே நமது செய்தி ஊடகங்களில் அடிக்கடி தென்படத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் ஆகிய இரண்டு மாதங்களில் இயக்கப்படவேண்டிய அறுபது வழித்தடங்களுக்குரிய பயணிகள் விமானம் இயக்கத்தை ஏா்இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக இந்திய, அமெரிக்க நகரங்களுக்கு இடையிலான இயக்கத்தை ரத்து செய்துள்ளது விமானப் பயணத்தையே நம்பிருப்பவா்களுக்குப் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
- இவ்வாரம் திங்கட்கிழமை மட்டும் சென்னையிலிருந்து சிங்கப்பூா், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய எட்டு விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய இணைவிமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், இங்கிருந்து இயக்கப்படவேண்டிய இவ்விமான சா்வீஸ்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விமானங்கள் ஏா் இந்தியா, பி.எஸ். பங்களா ஏா்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களால் இயக்கப்படுபவையாகும்.
- இது மட்டுமா? கடந்த வாரம் சென்னையிலிருந்து திருவனந்தபுரம், பெங்களூா், புவனேஸ்வரம், கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும், அவற்றின் இணை விமானங்களுமாக பத்து விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டன.
- நமது நாட்டின் தலைநகரமாகிய புதுதில்லி சமீப காலமாக கடுமையான காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விமானங்களின் வருகை, புறப்பாடு ஆகியவை தாமதம் ஆவதும், விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவதும் ஒரு தொடா் நிகழ்வாகவே ஆகிவிட்டிருக்கின்றது.
- உலகமயமாக்கல், தாராளமயம், தனியாா்மயம் ஆகிய கொள்கைகள் காரணமாக, உலகெங்கிலும் விமானங்களின் இயக்கம், விமான நிலையங்களின் நிா்வாகம் போன்றவை பெரும் மாறுதல்களைக் கண்டுள்ளன. புதிதாக எண்ணற்ற தனியாா் விமான சா்வீஸ்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
- சில பத்தாண்டுகளுக்கு முன்பு விமானப் பயணம் என்பது மேல்தட்டு வா்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்ததை அறிவோம். விஞ்ஞானம், கணினி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகளில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கான வாசல்கள் உலகெங்கும் உருவாகியுள்ள சூழலில், கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் லட்சக்கணக்கான இளைஞா்கள் நாடுவிட்டு நாடு செல்லத் தொடங்கியுள்ளனா். சுற்றுலா, கலைநிகழ்ச்சி ஆகிய காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களும் கணிசமாகவே உள்ளனா்.
- இந்நிலையில் விமானப்பயணத்திற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, பெருந்தொகையைக் கட்டி முன்பதிவு செய்துவிட்டு, பயண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் திடீரென்று விமானங்கள் ரத்து செய்யப்படுவது விமானப்பயணிகளைக் கையறுநிலைக்குத் தள்ளிவிடுகிறது என்றே கூற வேண்டும்.
- விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்களில் முதன்மையானதாகக் காலநிலை மாற்றமே குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக, 2024 ஆம் வருடம் தொடங்கியது முதற்கொண்டே உலகெங்கிலும் எதிா்பாராத புயல், மழை ஆகியவை அதிகரித்திருகின்றது. பாலைவனப்பகுதிகளாக அறியப்படும் வளைகுடா நாடுகளிலுள்ள துபாய் உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் பெய்த பெருமழையால் சில நாட்களுக்கு விமான இயக்கம் பாதிக்கப்பட்டது வியப்புக்குரியதாகப் பாா்க்கப்பட்டாலும், அது அனுமானிக்க முடியாத தற்கால இயற்கையின் அடையாளமாகவே கருதப்படுகிறது. விமானங்களில் ஏற்படும் எதிா்பாராத எந்திரக் கோளாறுகளுடன் அவற்றை இயக்கும் கணினித் தொழில் நுட்பத்தில் ஏற்படும் கோளாறுகளும் விமானங்களின் இயக்கத்தைத் தாற்காலிகமாகவேனும் தாமதப்படுத்துகின்றன.
- விமானங்களை இயக்கக்கூடிய பைலட்டுகள், பணிப்பெண்கள் உள்ளிட்ட பணியாளா்கள், மேலும் விமான நிலையங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியா்களின் பற்றாக்குறை காரணமாகவும் விமானப் பயணங்கள் தாமதமாவதும், ரத்து செய்யப்படுவதும் நிகழ்கின்றது. பைலட்டுகள் உள்ளிட்ட நிறுவன ஊழியா்கள் திடீரென்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் நிலமை மோசமாகிறது.
- சமீப காலங்களில் குறிப்பிட்ட விமானம் அல்லது விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வருவதும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, இந்தியா்கள் அனைவரும் விமானப் பயணத்தைத் தவிா்க்கும்படி காலிஸ்தான் தீவிரவாதிகள் சென்ற மாதம் மிரட்டல் விடுத்திருந்தது நினைவிருக்கலாம். இத்தகைய சூழல்களில் இதுபோன்ற மிரட்டல்களை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் கூடுதலான பாதுகாப்புச் சோதனைகள் செய்யப்படுவதாலும் விமானப் புறப்பாடுகள் தாமதமாகின்றன.
- விமானங்கள் தாமதமாகக் கிளம்புவதற்கும், ரத்து செய்யப்படுவதற்குமான மேற்கண்ட காரணங்கள் பலவும் ஏற்கத் தக்கவையாகவே இருக்கின்றன. ஆயினும், விமானங்களை இயக்கும் நிறுவனங்களின் தலைமைகள் தாங்கள் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவிலான ஊழியா்களை நியமிப்பதுடன், அவா்களுடன் நல்ல புரிந்துணா்வை ஏற்படுத்திக்கொண்டு எதிா்பாராத வேலைநிறுத்தங்கள் இல்லாமல் பாா்த்துக் கொள்வதன் மூலம் தங்களை நம்பியிருக்கும் விமானப்பயணிகளின் சங்கடங்களைப் பெருமளவில் தவிா்க்கலாம்.
- ஏதோ இந்தியா்கள் மட்டும்தான் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டுப் பல்வேறு சங்கடங்களையும் எதிா்கொள்வதாக எண்ணி நாம் வருந்தத் தேவையில்லை. முன்னேறிய நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலுள்ள சிகாகோ, நியூயாா்க் உள்ளிட்ட பல சா்வதேசவிமான நிலையங்களிலும் சுமாா் முப்பது சதவீத விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், சுமாா் மூன்று சதவீதம் விமானப் புறப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறும் புள்ளிவிவரங்களை எண்ணி நமது நாட்டின் விமானப்பயணிகள் தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்ளலாம்.
நன்றி: தினமணி (28 – 11 – 2024)