TNPSC Thervupettagam

பி.எம்.டபிள்யூ. கார் வாங்குவதால் பணக்காரராக முடியாது

December 30 , 2024 9 days 39 0

பி.எம்.டபிள்யூ. கார் வாங்குவதால் பணக்காரராக முடியாது

  • ஒரு சமீபத்திய நேர்காணலில், நடிகர் அரவிந்த்சாமி ‘தி சைக்காலஜி ஆஃப் மணி’ (THE PSYCHOLOGY OF MONEY) என்ற நூலை, இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு, தமிழ் கூறும் நல்லுலகில் இந்த நூல் பற்றிய தேடல் அதிகரித்து இருக்கிறது.
  • மார்கன் ஹவ்சல் (MORGAN HOUSEL) எழுதிய இந்த நூலை முழுவதும் படிக்க சிரமப்படுபவர்களுக்காக, இதில் எடுத்தாளப்பட்ட, சில முக்கியமான, சேமிப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களை இங்கு தொகுத்து தந்துள்ளோம்.
  • பணக்காரன் என்பவன் யார் தெரியுமா? நிறைய பொருள்களை வைத்திருப்பவன் அல்ல.. தனது தேவைகளை எவன் குறைத்துக் கொள்கிறானோ, அவனே பணக்காரன் ஆவான்.
  • பணத்தைச் சேமிப்பதற்கு அறிவை விட, பழக்கமே முதலில் முக்கியமானது.
  • பணத்தை இளமையிலேயே சேமிக்கத் தொடங்கி விட்டால், அது அதிக பலன்களைத் தரும். ஒருவன் தனது 40-வது வயதிலிருந்து 60-வது வயது வரை ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், 8% வட்டியில் சேமிக்கத் தொடங்கினால், அவனது 60-வது வயதில் ரூ.45.75 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கும். ஆனால், அவன் தனது 20-வது வயதில் இருந்தே இந்த சேமிப்பைத் தொடங்கி இருந்தால், அவனது 60-வது வயதில் ரூ.1.24 கோடி கிடைத்திருக்கும். இதற்கு ‘கூட்டு வட்டி’ (COMPOUND INTEREST) என்று பெயர்.
  • வெளியில் காட்டுகிற வசதியைவிட, வெளியில் காட்டாத சேமிப்புகளே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும். ஆம்! பெரிய பங்களா, பி.எம்.டபிள்யூ. கார் போன்றவற்றை வாங்குவதால் நீங்கள் பணக்காரராக முடியாது. உங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு பணத்தை சேமித்தால்தான் உண்மையிலேயே கோடீஸ்வரர் ஆக முடியும்.
  • கடன் வாங்கும்போது ஆட்டோ-டெபிட் (AUTO-DEBIT) முறையில் இ.எம்.ஐ. செலுத்துகிற நீங்கள், சேமிப்புக்கும் அதே ஆட்டோ-டெபிட் முறையைப் பின்பற்றுங்கள். உதாரணமாக மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமியுங்கள்.
  • பணத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு முதலீடா? சேமிப்பா? என்ற கேள்வி அடிக்கடி எழக்கூடும். முதலீடுதான் சிறந்தது என்றாலும் கூட, அதில் கிடைக்கும் லாபத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அதற்காக நீங்கள் செலவழிக்கிற நேரம், அதன் மூலம் நீங்கள் பெற இருக்கிற மன அழுத்தம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால், பல நேரங்களில் அந்த முதலீட்டை விட சேமிப்பே சிறந்தது என்று கூடத் தோன்றலாம்.
  • பணக்காரராவது என்பது வேறு. பணக்காரராகவே நிலைத்து நிற்பது என்பது வேறு. பணக்காரராவது பலராலும் முடியும். ஆனால் அதில் நிலைத்து நிற்பது, சேமிக்கும் பழக்கம் உள்ள சிலரால் மட்டுமே முடியும்.
  • ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆவது, குறுகிய காலத்தில் பணத்தை அள்ளுவது என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை. நீண்ட கால நோக்கில் சேமிப்பதே புத்திசாலித்தனம்.
  • உங்கள் ஈகோவையும், தற்பெருமையையும் குறைத்துக் கொண்டாலே பாதி செலவுகள் மிச்சமாகும்.
  • போதும் என்கிற மனம் உள்ள ஒருவரால் மட்டுமே பணத்தை சேமிக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories