TNPSC Thervupettagam

பிஞ்சுக் கரங்களுக்கு உழைப்பு ஏன்?

July 30 , 2019 1947 days 1532 0
  • குழந்தைப் பருவம் என்பது மகிழ்வுக்கும் உற்சாகத்துக்கும் உரியது. ஆனால், காலையில் நாம் வீட்டு வாசல் கதவைத் திறக்கும்போது தெருவில் சாக்குப் பையுடன் குப்பை சேகரிக்கும் சிறுவர்களையும் பால் பாக்கெட், நாளிதழ் போடும் சிறுவர்களையும் பார்க்கிறோம். இந்தக் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்க்கும்போது நமக்கு குற்ற உணர்வு கிஞ்சித்தும் எழுவதில்லை.

வரையறை

  • ஒரு குழந்தையானது, கூலிக்காக வேலை பார்த்தாலும் குடும்பத்தினருடன் பணிபுரிந்தாலும், அந்த வேலையானது குழந்தையின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் இடையூறாக இருந்தால் அந்தக் குழந்தையை குழந்தை தொழிலாளி என்கிறது உலக தொழிலாளர் அமைப்பு.
  • நம் நாட்டில் நேரடி குழந்தை தொழிலாளர் முறை ஒருபுறம் என்றால், மறைமுக குழந்தை தொழிலாளர் முறை மற்றொருபுறம்; இதில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத இடங்களில் குழந்தைகளை வேலை செய்ய வைத்தல் என்பது, மறைமுக குழந்தைத் தொழிலாளர் முறை என்கின்றனர்.
  • வேலைவாய்ப்புக்காக தங்கள் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்து செல்லும் குடும்பங்களிலுள்ள குழந்தைகளில் பலர், பெற்றோர் பார்க்கும் வேலைகளையே செய்கின்றனர்.
  • வீட்டு வேலைகளுக்கு சிறுமிகளை அனுப்புவதை இன்றும் காண முடிகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பத்தை விட்டு வெளியே ஓடிவந்த குழந்தைகள் பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர்களாவது உண்டு. பெற்றோர் வாங்கிய கடனுக்கு ஈடாக செங்கல் சூளை போன்றவற்றில் பெற்றோருடன் குழந்தையும் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் உண்டு. இவர்களை கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் என்கிறார்கள். இது மிகக் கொடூரமானது.
  • உலகளவில் சுமார் 20 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 1.1 கோடி குழந்தைத் தொழிலாளர்களும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 2.3 கோடி குழந்தைத் தொழிலாளர்களும் உள்ளனர். அதாவது 11 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை, தொழிலாளியாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் 5 கோடிக்கும் குறையாமல் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்கிறார்கள் சமூகச் செயல்பாட்டாளர்கள்.
  • ஆபத்தான தொழில்களில் வேலை செய்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் பீடி, சிகரெட் தொழில், பட்டாசு தொழில், கட்டட வேலை, கண்ணாடி தயாரிப்பு வேலை போன்றவற்றில் 53 சதவீத குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவசாயத் தொழிலாளர்களில் ஏறத்தாழ 9 சதவீதம், குழந்தைத் தொழிலாளர்கள் என்பது அதிர்ச்சியானது. விவசாயப் பணியின்போது பூச்சிக் கொல்லிகளையும் பிற வேதிப் பொருள்களையும் நுகர்ந்து அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தக் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்.

வறுமை

  • பெரும்பாலான பெண் குழந்தைகள் வேலை செய்யும் இடங்களில் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
  • வறுமை தொடரும் வரை குழந்தை உழைப்பை முற்றிலுமாக அகற்றுவது கடினம் என்று 1981-ஆம் ஆண்டில் குருபாதசுவாமி தலைமையிலான குழு கூறியது. தங்கள் குழந்தை உடல் உழைப்பில் ஈடுபடுவதை எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. குழந்தைகளும் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை.
  • குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் கட்டாயச் சூழலை வறுமையே உருவாக்குகிறது. வெளி மாநில முறுக்கு மிட்டாய் கம்பெனிகளில் வேலைக்கு தங்கள் குழந்தைகளை தாரைவார்க்கும் பெற்றோர்கள் இருக்கின்றனர். சுமங்கலித் திட்டம் என்னும் பெயரில் பஞ்சாலைகளுக்கு தங்கள் பெண் குழந்தைகளை அனுப்பி சித்திரவதையை அனுபவிக்க வைப்பது இன்றும் தொடர்கிறது.

புள்ளிவிவரம்

  • நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,20,000 கோடி கருப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று குழந்தைகள் உரிமை நல அமைப்பான பச்பன் பச்சாவ் அமைப்பின் வெளியீடான கேப்பிட்டல் கரப்ஷன் சைல்ட் லேபர் இண்டியா கூறுகிறது. குறைந்த கூலிதான் அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
    குழந்தைகளிடம் கேட்டால் எங்களுக்கு வேலை வேண்டாம். நாங்கள் பள்ளிக்குப் போகிறோம் என்றுதான் கூறுவார்கள். குழந்தைகளை உழைப்பிலிருந்து மீட்டு பள்ளிகளுக்கு அனுப்பும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பும் ஊதியமும் கணிசமாக உயரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
    குழந்தை உழைப்பை ஒழிப்பதற்கு பெற்றோரின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவேண்டும். குழந்தை தொழிலாளர் பிரச்னைகள் குறித்து பெற்றோருக்குப் புரியும் வகையில் தேவையான விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
  • எந்தத் தொழிலிலும் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவதைக் கண்டால் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆனாலும், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை அறிவிக்க இயலாத நிலையில் இருக்கிறோம் என்பதுதான் பெரும் துயரம்.
  • குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இன்னும் வலுவான சட்டம் அவசியம் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரும் சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளர்ச்சி என்பது குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்குகிறது என்கிறார் அவர்.
  • இதைதான் இடதுசாரி அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பெண்கள் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
    குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் இருக்கிறது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. நமது தேசத்தின் எதிர்கால வலிமை என்பதே குழந்தைகள்தான். ஆனால், அவர்கள் உடல் உழைப்பில் நசுக்கப்படுவது நமது நாகரிகத்துக்கு விடப்படும் சவாலாக உள்ளது. இதை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவது அவசியம்.

நன்றி: தினமணி(30-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories