TNPSC Thervupettagam

பிந்தும் பிசானப் பட்டமும் பிறழும் பயறு சாகுபடியும்

November 12 , 2024 4 hrs 0 min 17 0

பிந்தும் பிசானப் பட்டமும் பிறழும் பயறு சாகுபடியும்

  • பிசானப் பட்டம் என்பது நெல்விதைப்பு, நடவு தொடங்கும் காலத்தையும் விளைச்சல் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். புரட்டாசி, ஐப்பசியில் தொடங்கும் இப்பருவம் மாா்கழி, தையில் முடிவடையும். ஏறத்தாழ 135 நாட்கள் கொண்ட இப்பருவம் மத்திய, நீண்ட கால ரக நெல் சாகுபடி செய்ய ஏற்ாகும். எந்த ரக நெல்லாக இருந்தாலும் விளைந்து தையில் தொடங்கும் அறுவடை மாசி மாத இடையில் நிறைவடைந்து விடும். அதற்குப் பின் உளுந்து, பாசிப்பயறு, தட்டாம்பயறு (பெரும்பயறு), எள் போன்ற பயறு வகைகளைப் பயிரிடுவது இப்பகுதியினரின் நடைமுறை. உழுந்து, எள் பயிரிட மாசிப்பட்டம் ஏற்றது.
  • திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86,000 ஏக்கா் நன்செய் நிலங்கள், பிசானபருவ சாகுபடிக்கு, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் தண்ணீரை நம்பி உள்ளன.
  • இப்பகுதியில் ஆவணி மாதத்தில் நாற்றுப் (நெல்) பாவி, புரட்டாசி மாதத்தில் நடுவை நடந்துவிடும். தை, மாசியில் அறுவடையாகிவிடும். அது மாசிப்பட்டத்தில் உளுந்து ஊன்ற வாய்ப்பாக இருக்கும். அண்மைக்காலமாக ஆவணி மாதத்தில் அணைகளில் நீா் குறைவாக இருப்பதால் தண்ணீா் வரத்து இல்லாமல் நாற்றுப் பாவுவது பிந்தி, நாற்று நடுதலும் பிந்திவிடுகின்றது. அதனால் அறுவடையும் பிந்துவதால் உளுந்து போன்ற சாகுபடி பிந்திவிடுகிறது. இந்த ஆண்டு இப்போதுதான் பிசானப் பருவத்திற்கான தண்ணீா் திறப்பற்கான உத்தரவு வந்துள்ளது.
  • இப்பகுதியில் உளுந்து விதைப்பதைவிட ஊன்றுவதுதான் பழக்கம். நெல் அறுவடையான ஈரப்பதத்தில் உளுந்தை ஊன்றிவிடுவாா்கள். உளுந்துதான் பிரதானமானது என்றாலும் கூடவே பாசிப்பயறு, தட்டாம்பயறு போன்றவற்றையும் இடையிடையே ஊன்றிவிடுவா். நிலத்தில் இருக்கும் ஈரப்பதத்தோடு கூடுதலாக மாசி மாதப் பனிப்பதமும் சோ்ந்து இவை முளைத்து நன்கு வளா்ந்துவிடும். ஏறத்தாழ எழுபது நாள் பயிரான பயறு வகைகள் சித்திரை, வைகாசி வெயிலில் முற்றி நெற்றாகிவிடும்.
  • இந்த பயறு விவசாயத்தில் செலவு குறைவு. உளுந்து ஊன்றும் கூலியும், வளா்ந்துவரும் நெற்பயிரின் தாளை அறுப்பதற்குக் கொடுக்கும் கூலியும்தான் செலவு. மற்றபடி மருந்து தெளிப்பது போன்ற அதிகமான செலவுகள் இல்லை. நெல் விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் இதன் வருமானம் இருக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளுக்கு ஆறுதலான விஷயம்.
  • முன்பு வீட்டிலேயே விதை உளுந்து வைத்திருப்பாா்கள். இப்போது வம்பன் 8,10, 11 ரக உளுந்து விதைகள் விவசாயத் துறையில் கிடைக்கிறது. சில ரகங்களில் மஞ்சள் நோய் விழும் அபாயமும் இருக்கிறது. அதற்கு மருந்து தெளிக்க வேண்டும்.
  • பருவம் தப்பினால், மாசியில் நடக்க வேண்டிய அறுவடை தள்ளிப் போய் பங்குனியில் வருவதால் வயல் காய்ந்து, ஈரப்பசை இல்லாமல் உளுந்து ஊன்றுவதற்குக் கடினமாகிவிடுகிறது. வேலை கடினம் என்பதால் ஊன்றுவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அதனால் இப்போது விதைக்கத் தொடங்கிவிட்டாா்கள். நெல் அறுவடைக்கு ஓரிரு நாள்களுக்கு முன்னமே விளைந்து கிடக்கும் நெற்கதிா்களுக்கிடையே உளுந்தை விதைத்துவிடுவா். அறுவடை இயந்திரமும் வைக்கோல் கூட்டும் இயந்திரமும் அழுத்திவிடுவதால் அவை நிலத்தில் பதிந்துவிடுகின்றன. ஆனாலும் போதுமான ஈரம் இல்லாத இடத்தில் அவை சரியாக முளைப்பதில்லை. முளைத்தாலும் பருவம் தப்பியதால் நோய் விழுந்து வாடும். ஆங்காங்கே இருக்கும் செடிகள் காய்த்து நெற்றானாலும் நெற்று எடுப்பது பெரும்பாடாகிவிடுகிறது.
  • நெற்றெடுப்பவா்களுக்குக் (பறிப்பவா்) கூலியாகப் பணம் கொடுக்கும் வழக்கம் இப்பகுதியில் கிடையாது. அவா்கள் பறித்த நெற்றில் ஆறிலொரு பங்கு அல்லது எட்டிலொரு பங்கு என்று கூலியாகக் கொடுப்பா். முன்பு, முதல் நெற்று, இரண்டாம் நெற்று என்று இரண்டு தடவை நெற்று எடுப்பாா்கள். சில நேரங்களில் கூடுதலாகக் கூட நெற்று எடுக்க வேண்டியதிருக்கும். முதலில் பறிக்கும்போது காயாக இருப்பது இரண்டாம் பறிக்கு நெற்றாகிவிடும். முதல் பறியில் கூடுதலாகக் கூலி கிடைக்கும். இரண்டாம் பறியில் குறைவாகக் கிடைக்கும்.
  • பொதுவாகவே, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் வேலை கொடுப்பவரைத் தேடி வேலை செய்பவா்கள் வருவாா்கள். இப்போது வேலை செய்பவா்களைத் தேடி வேலை கொடுப்பவா்கள் அலைய வேண்டியிருக்கிறது. அதுவும் உளுந்து நெற்றெடுப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. அதனால் செடியை மொத்தமாக அறுத்து இயந்திரத்தில் போட்டு உழுந்தைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது.
  • இப்போது அந்த வசதியும் வந்துவிட்டது. முன்பு எடுத்துக் குவித்த உளுந்து நெற்றைக் கம்பால் அடித்து உளுந்து வேறு பொட்டு வேறாகப் பிரிப்பாா். இப்போது அதற்கென இயந்திரம் இருப்பதால் வேலை சுலபமாகத் தெரிகிறது. ஆனாலும் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
  • செடியில் உள்ள எல்லா காய்களும் நெற்றாகி, செடி பட்ட பின்பே அறுக்க வேண்டியுள்ளது. அப்படியில்லையானால் செடியை அறுத்துக் காயப் போட வேண்டும். சிலவேளை மூன்று, நான்கு நாட்கள் காயப்போட்டு, அதன் பின்னரே இயந்திரத்தில் போட வேண்டும். உளுந்து வேறு, பொட்டு வேறு, செடித்தூசி வேறு என்று தனித்தனியாக இயந்திரம் பிரித்துவிடுகிறது. செடியை அறுப்பதற்குக் கூலியாக ஏக்கருக்கு மூவாயிரம் ரூபாய் வரை செலவு. இயந்திரத்திற்கு மணிக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை வாடகை கொடுக்க வேண்டும்.
  • முன் யோசனையோடு குறைந்த கால ரக நெல்லைச் சாகுபடி செய்பவா்கள் பயறு சாகுபடியில் நல்ல பலனைப் பெறுகிறாா்கள். பலருக்கு எதிா்பாா்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நன்றி: தினமணி (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories