TNPSC Thervupettagam

பின்னடைவல்ல, பாடம்! சந்திரயான் 2

September 9 , 2019 1904 days 1157 0
  • நிலவை ஆய்வு செய்ய "இஸ்ரோ' விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட "சந்திரயான் 2' விண்கலம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதால் துவண்டுவிடக் கூடாது என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் ஆறுதல் வார்த்தைகள், அந்த விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பிரதமர் வழங்கியிருக்கும் தேறுதல் மொழி. "இந்தியாவுக்குப் புதிய விடியல் காத்திருக்கிறது' என்கிற அவரது கூற்று உண்மையிலும் உண்மை.
  • "சந்திரயான் 2' தந்திருக்கும் அனுபவங்களிலிருந்து கிடைத்திருக்கும் பாடங்களின் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டின் கடைசியில் திட்டமிடப்பட்டிருக்கும் "சந்திரயான் 3' நிலவின் பயணம் மகத்தான வெற்றியாக அமையும் என்று நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

சந்திரயான் 2

  • சந்திரயான் 2' முழுமையான தோல்வி என்று தள்ளிவிடவும் முடியாது. திட்டமிட்டபடி நிலவை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாகத்தான் நடத்தியது "சந்திரயான் 2'. ‘சந்திரயான் 1' ஏவப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி அறிவியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன் ஜூலை 22-ஆம் தேதி 
  • சந்திரயான் 2' விண்கலத்தை அனுப்பியது இஸ்ரோ. அதன் நிலவு நோக்கிய பயணம் தடையின்றித்தான் நடந்தது.
  • லேண்டர், ரோவர் என்கிற இரண்டு பகுதிகளைச் சுமந்து கொண்டு விண்ணில் பயணித்த "சந்திரயான் 2' விண்கலம், பூமியை அதன் நீள்வட்டப் பாதையில் சுற்றி கடந்த ஆகஸ்ட் 
    20-
    ஆம் தேதி நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. திட்டமிட்டது போலவே, நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அதன் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து நிலவைப் படம் பிடித்து அனுப்பிய வண்ணம் இருக்கிறது "சந்திரயான் 2'-வின் ஆர்பிட்டர் விண்கலம்.
  • இந்த ஆர்பிட்டரிலிருந்து லேண்டரும், ரோவரும் தங்களை விடுவித்துக் கொண்டு சந்திரனில் இறங்குவது என்பதுதான் திட்டம். "லேண்டர்' என்பது சந்திரனில் பத்திரமாக இறங்கும். பிறகு அதிலிருந்து "ரோவர்' பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றிவந்து தகவல்கள் அனுப்ப வேண்டும். சனிக்கிழமை (செப்.7) அதிகாலை ஆர்பிட்டரிலிருந்து லேண்டரும் ரோவரும் பிரிவது வரை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது.
  • ஆனால், நிலவிலிருந்து 2.1 கி.மீ. தூரத்தில் லேண்டரின் பயணப் பாதை திட்டமிட்டிருந்த விசை வீச்சுப் பாதையிலிருந்து விலகியது. கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து அதன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.

வெற்றி

  • பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகம் சந்திரன்தான். பூமிப் பந்திலிருந்து 3,94,400 கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனுக்கு மிக அருகில், இரண்டு கி.மீ. அருகில் வரை "சந்திரயான் 2' சென்றிருக்கிறது என்பதே நமக்கு மிகப் பெரிய வெற்றி. இதற்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.978 கோடி மட்டும்தான். "இண்டர்ஸ்டெல்லர்' என்கிற விண்வெளி ஆய்வை மையமாகக் கொண்ட ஹாலிவுட் திரைப்படத்தின் தயாரிப்புச் செலவைவிடக் குறைவு. இவ்வளவு குறைந்த செலவில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப இந்திய விஞ்ஞானிகளால் முடிந்திருக்கிறது என்பதைப் பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.
  • விண்வெளி ஆய்வு முயற்சிகளில் தோல்வி என்பது மிக மிக சகஜம். 1958 - 60-ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா நடத்திய எட்டு விண்கலன் முயற்சிகளில் ஏழு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவர்களுடைய "ரேஞ்சர்' விண்கலன்களில் பாதிக்கு மேல் வெற்றியடையவில்லை. மனிதன் நிலவில் கால் பதித்த அப்போலோ 11, அப்போலோ 12-க்குப் பிறகு அப்போலோ 13 தோல்வியைத் தழுவியது. 
  • சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பிய 40 விண்கலன்களில் 15 முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் / ரஷியா நடத்திய முயற்சிகளில் 35 தோல்வியடைந்து 20 மட்டுமே வெற்றியடைந்திருக்கின்றன. சீனா, இஸ்ரேல் என்று பல நாடு
    களும் விண்வெளி முயற்சிகளில் தோல்வி அடைந்திருக்கின்றன.
  • என்னதான் முன்னெச்சரிக்கையும், உழைப்பும், தொழில்நுட்ப மேதாவித்தனமும் இருந்தாலும்கூட, கடைசி விநாடியில் தவறுகள் ஏற்படவும், வெற்றி நழுவுவதும் விண்வெளி ஆய்வில் மிக மிகச் சாதாரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சி

  • விண்வெளி ஆராய்ச்சியில், ஏனைய வல்லரசு நாடுகளைப் போல பல்லாயிரம் கோடி ரூபாயை நாம் ஆய்வுக்காக ஒதுக்குவதில்லை. மேலை நாட்டு விஞ்ஞானிகளைப்போல அல்லாமல், நமது "இஸ்ரோ' விஞ்ஞானிகள் அரசு ஊழியர்களைப்போல நடத்தப்படுகிறார்கள் என்கிற வேதனைக்குரிய உண்மையை இந்த வேளையில் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
  • மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகளின் திறமையும், அனுபவமும், பணிமூப்பு அடிப்படையில் பயன்படாமல் போகும் நிலைமை இருந்தும்கூட, நமது "இஸ்ரோ' விஞ்ஞானிகள் சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்  கூடாது.
    "சந்திரயான் 1' முயற்சி சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல, பல விலைமதிப்புள்ள கனிமங்களும் இருக்கின்றன என்கிற செய்தியை 2008-இல் உலகுக்குத் தெரிவித்தது. "சந்திரயான் 2' மிகக் குறைந்த செலவிலும் விண்வெளிக் கலன்களை அனுப்ப முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. முதன்முறையாக, சந்திரனின் தென் துருவத்தில் இறங்கும் முயற்சியாகவும் இது அமைந்தது. இனி அடுத்த முயற்சிக்குத் தயாராவோம். 
  • விண்வெளி ஆய்வுக்கு முடிவு ஏது? தொலைநோக்குக் கண்ணாடி (டெலஸ்கோப்) கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், கோள்களைத் துல்லியமாக ஆய்வு செய்து, அவற்றின் நிறங்களைக்கூடத் தெரிந்து வைத்திருந்த பாரம்பரியம் பாரதத்துக்கு உண்டு. அதனால் "சந்திரயான் 2' இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுக்கான பாய்ச்சல் என்றுதான் கொள்ள வேண்டும்!

நன்றி: தினமணி (09-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories