- ‘ஜி.சுப்பிரமணிய ஐயர், டாக்டர் நாயர், வி.கிருஷ்ணசாமி ஐயர், ஆனந்தாச்சார்லு போன்ற பலரும் காங்கிரஸ் மேடைகளில் அடிக்கடி பேசுவர். இளம் வயதில் நானும் என் நண்பர்களும் பல சமயம் அந்தக் கூட்டங்களுக்குச் செல்வோம். வீடு திரும்பும்போது அவர்கள் பேசிய ஆங்கிலத்தின் சுவையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருவோம்’ - இந்தப் பொருள் கொண்ட ஒரு நினைவுக் குறிப்பு, திரு.வி.க.வின் வாழ்க்கை வரலாற்றில் உண்டு.
- இது 1900களைப் பற்றியதானாலும் ஏறக் குறைய 1930கள் வரை ஆங்கிலமே தமிழ்நாட்டின் அரசியல் பொது மேடைகளில் கோலோச்சியது. ‘ஹோம் ரூல்’ காலத்தில் அன்னி பெசன்ட், ஜார்ஜ் ஜோசப், பி.வி.நரசிம்மையர் போன்றோர் மேடைகளை ஆங்கிலத்தாலேயே அலங்கரித்தனர். 1919இல் ரெளலட் சட்ட எதிர்ப்பு சென்னைக் கடற்கரையில் நடந்தபோது தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகளில் பிரச் சாரம் நடைபெற்றது.
மேடையில் தமிழ்
- ஆரம்பத்தில் ராஜாஜி போன்ற தலைவர்கள் மேடையில் ஆங்கிலத்தில்தான் பேசினர். பிறகுதான் தமிழுக்கு மாறினர். அதைப் பெரியார் ஒருமுறை நினைவுகூர்ந்தார். ‘ஆச்சாரியாருக்குக்கூட அந்தக் காலத்தில் சரியாகத் தமிழில் பேச வராது. ‘வீடு பிரித்துப் போட்டிருக்கு என்று சொல்லத் தெரியாமல், வீடு அவுத்துப் போட்டு இருக்கு’ என்றுதான் சொல்லுவார்’ (‘விடுதலை’ 24 ஜூலை 1957). 1930 சட்ட மறுப்பு இயக்கக் காலத்தில் மேடைகளில் தமிழ் ஏறியது.
- ஆரம்ப காலத்தில் தமிழால் பிரபலமானவர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு. ‘பெருந்தலைவர் ராஜாஜி அவர்கள் பேசுகின்ற கூட்டமானாலும் சரி, பெருங்கூட்டம் வர வேண்டுமென்றால், முதலில் டாக்டர் நாயுடுவைக் கொஞ்ச நேரமாவது பேசவிட வேண்டும்’ (‘விடுதலை’ 24 ஜூலை 1957) எனப் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல் மூவர்
- தமிழ்நாட்டு அரசியல் மேடையைத் தமிழுக்கு மாற்றிய முதல் மூவர் காங்கிரஸைச் சேர்ந்த பெரியார், வரதராஜுலு நாயுடு, திரு.வி.க ஆகியோர். மூவரின் பேச்சுப் பாணியும் வெவ்வேறானது. ‘நாம் (பெரியார்) பச்சைத் தமிழில் பேசுகிறோம்; எழுதுகிறோம். டாக்டர் வரதராஜுலு அவர்கள் ராஜ தந்திரத் தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார். மான் முதலியார் (திரு.வி.க.) அவர்கள் சங்கத் தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார்’ (‘குடிஅரசு’ 1 ஆகஸ்ட், 1926) எனப் பெரியார் குறிப்பிட்டார்.
ஒலிப்பதிவு
- பெரியாரின் பேச்சுக்கள் ஒலிப்பதிவாகக் கிடைக்கின்றன. திரு.வி.க.வின் ஒரே ஒரு ஒலிப்பதிவு சென்னை வானொலியில் பாதுகாக்கப்படுகிறது. வரதராஜு லுவின் குரல் பதிவுதான் கிடைக்கவில்லை. எழுத்தாளர் வ.ரா.வின் வருணனையைத்தான் சான்றாகக் கொள்ள வேண்டும்போலும். ‘(வரதராஜுலுவின்) குரலைக் கேட்டேன். எனது நரம்புகள் கடகடவென்று ஆட ஆரம்பித்துவிட்டன.
- ஒரு கோடிக்கு ஒரு கோடி பரவி இருந்தது கூட்டம். ஊசி விழுந்தால் கேட்கும்படியான அமைதியுடன் இருந்தது. நாயுடு அவர்கள் தமது குரலை உயர்த்த வேண்டிய தேவையே ஏற்படவில்லை. அவரது இனிமையான குரலில் எவருமே ஈடுபடாமல் இருக்க முடியவில்லை’ (‘தமிழ்ப் பெரியார்கள்’ 1943).
அடுத்த கட்டம்
- 1967க்கு முற்பட்ட அரசியல் பேச்சாளர்களில் சிறந்தவர் பற்றிய சிறு பட்டியல் தரலாம். அதில் முன்சொன்ன மூவர் தவிர, வ.உ.சி. சுப்பிரமணிய சிவா, டி.எஸ்.எஸ்.ராஜன், எஸ்.சத்தியமூர்த்தி, சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை ஆகியோர் ஒரு கட்டம். அதற்கடுத்து முத்துராமலிங்கத் தேவர், அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, ஈ.வெ.கி.சம்பத் எனச் சிலரை மட்டும் சான்றுக்காகக் குறிக்கலாம். இரண்டாம் வரிசையில், பல ‘கோடை இடிகள்’ உண்டு. கோடையிடி குப்புசாமி முதலியார், மன்னம்பூண்டி குமாரசாமி ஆகியோர் அதில் சிலர்.
அரசியல் அல்லாத மேடை
- தமிழ் அறிஞர்கள் (நாவலர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், ‘சொல்லின் செல்வர்’ ரா.பி.சேதுப்பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம்) போன்றவர்களையும் சமயப் பிரசங்கிகள் (வாரியார், கீரன்) போன்றவர்களைத் தவிர்த்த பொதுமேடையை ஆக்கிரமித்திருந்த மறக்க முடியாத சிலரின் பட்டியல் இது.
- இடதுசாரிகளில் ஜீவாவின் பேச்சு கேட்பவரை உணர்ச்சிப் பிழம்பாக்கிவிடும். அவர் மறைந்தபோது சுந்தர ராமசாமி எழுதிய இரங்கல் குறிப்புக்குத் தலைப்பு ‘காற்றில் கலந்த பேரோசை’. அது அமரத்துவம் வாய்ந்த தலைப்பாகிவிட்டதற்குக் காரணம், உண்மையோடு பெரு நெருக்கம் கொண்ட தொடர் என்பதுதான். கி.ரா.வுக்கு கு.அழகிரிசாமி எழுதிய கடிதம் ஒன்றிலும் ஜீவாவின் பேச்சைக் குறிப்பிட்டிருந்தார்.
- அக்காலக்கட்டத்தில் நட்சத்திரமாக ஒளிர்ந்தார் ஜீவா. ‘நேற்று இரவு சென்னைக் கடற்கரையில் ஜீவானந்தம் பிரசங்கம். அந்த ஆண் சிங்கம் தலைமறைவாக இருந்தபோது மீசையை எடுத்துவிட்டதைப் பார்க்கவே சகிக்கவில்லை. அடையாளம்கூடத் தெரியவில்லை. ஆனால், அதன் கர்ஜனை கடல் முழக்கத்தை வென்றுவிட்டது’ (கு.அழகிரிசாமி கடிதங்கள், 18 செப்டம்பர் 1947).
மைக் பயன்பாடு
- ஒலிவாங்கியின் (microphone) பயன்பாடு 1930களில் தொடங்கியது. கர்ஜித்துப் பேசித்தான் மக்களைக் கவர வேண்டும். ஜீவா ஒலிபெருக்கும் (megaphone) கருவியையும் அதிகம் பயன்படுத்துவாராம். அதில் உரக்கப் பேசிப் பேசி அவரது செவிப்பறையே பாதிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்வர். ஒலிவாங்கி (மைக்) தமிழ்நாட்டில் நுழைந்ததும் கர்னாடக சங்கீதக்காரர்களும் பின் மேடைப் பேச்சாளர்களும் அதற்குத் தக அமைந்ததுமான கதை சுவாரசியமானது; அது தனியாகப் பேசப்பட வேண்டியது.
- அக்கதையிலிருந்து ஒரு துளி. ஒலிவாங்கி பேசுபவரின் தொண்டைத் தண்ணியை வற்ற வைத்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. மோசமான, தரமற்ற ஒலிவாங்கி அப்படிச் செய்யும் என்று இன்றும் நினைப்பவர் உண்டு. மோசமான ஒலிவாங்கி அப்படிச் செய்யும்போது பேச்சாளரின் தொண்டையை ஈரமாக்கத் தரப்பட்டதுதான் சோடா. அதே சோடா பாட்டில்களை வீசிக் கூட்டங்களைக் கலைக்கும் கலையும் பிற்பாடு வளர்ந்தது.
அண்ணா
- ஆர்க்காடு சகோதரர்களில் மூத்தவரான ஏ.ராமசாமி முதலியாரின் ஆங்கிலப் பேச்சை மொழிபெயர்ப் பதற்காக மேடைகளில் அறிமுகமானவர் அண்ணா. தன் நாவசைந்தால் நாடசையும் என்ற நிலைக்கு உயர்ந்த அண்ணா, பின்னர் தமிழ்ப் பேச்சின் அடையாளமாக ஆகிவிட்டார். ராமசாமி முதலியார் தலைமையில்தான் அண்ணாவின் சிலை திறக்கப்பட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 03 – 2024)