TNPSC Thervupettagam

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

February 17 , 2025 4 days 22 0

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

  • பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை எழுப்புகிறது.
  • 'இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவே முதலில்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தாக்கத்தைப் போலவே 'அமெரிக்காவே பெரியது, அமெரிக்காவே முதலில்' போன்ற கருத்தாக்கத்தை அதிபர் டிரம்ப் பிரதிபலிக்கிறார். தேசியவாத சிந்தனை மிக்க இந்தத் தலைவர்களின் கைகோப்பு, எதிர்கால புவிசார் அரசியலை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்பதை உணர்த்துகிறது.
  • அதிபர் டிரம்ப்பை பொருத்தவரை, மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனாவை இலக்கு வைக்க அவர் பயன்படுத்தும் புதிய ஆயுதங்கள், 'வணிகம் மற்றும் வரிகள் விதிப்பு நடவடிக்கைகள்'. ஒருவேளை அமெரிக்க டாலரைக் குறைத்து மதிப்பிடும் வகையில் தனி நாணயம் போன்ற நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் முன்னெடுத்தால், பிறகு 100 சதவீத வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல், இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.
  • 140 இந்தியர்கள், 23 நாடுகளைச் சேர்ந்த 28 வெளிநாட்டினர் கொல்லப்பட்ட '2008' மும்பை தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டிய டேவிட் ஹெட்லியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய வம்சாவளி தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் ஆதரவளித்திருப்பது பிரதமர் மோடியின் ராஜீய உத்தியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது ராணா லாஸ் ஏஞ்சலீஸ் பெருநகர தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையில் அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்த இந்தியர்களை திருப்பி அனுப்பினால் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி அமெரிக்காவில் அறிவித்துள்ளார். இது அதிபர் டிரம்ப்பின் ராஜீய உத்திக்கு கிடைத்த வெற்றியாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது.
  • திறமையான இந்திய நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஹெச்-1பி விசா திட்டத்தின் மூலம் திறந்த வாய்ப்புகளை வழங்க அமெரிக்காவை இந்தியா வற்புறுத்தியுள்ளது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோருக்கு சாதகமான விஷயம்.
  • ஏற்கெனவே முந்தைய ஜோ பைடன் ஆட்சியின்போது நீடித்த ரஷியா மீதான அமெரிக்க தடை அச்சுறுத்தலுக்கு மத்தியில், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்கியது மற்றும் சலுகை விலையில் ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததன் மூலம் அந்நாட்டுடனான தனது பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை இந்தியா தக்க வைத்தது உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டின.
  • இதேபோல, ஈரானுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் மீதும் அமெரிக்கா அதிருப்தி கொண்டிருந்தது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான தனது உறவுகளை மேம்படுத்த ஈரானை முக்கிய எரிசக்தி ஆதாரமாகவும், ஒரு முக்கியக் கூட்டாளியாகவும் இந்தியா காண்கிறது. ஆனால், அந்நாடு மீதான அமெரிக்க தடைகள் ஈரானுடனான இந்தியாவின் உறவுகளைச் சிக்கலாக்கியுள்ளது. இதன் விளைவாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக்கொண்டது.
  • இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உத்தேசிக்கப்பட்டுள்ள 'க்வாட்' நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் இசைவு தெரிவித்துள்ளார். இந்த வருகை மூலம் இரு நாடுகளின் நல்லுறவுகள் மேலும் வலுப்பட வாய்ப்புள்ளது. வர்த்தகம் மற்றும் வரிகள் விவகாரத்தில் மோடியும் டிரம்ப்பும் நேர்மறையான அணுகுமுறையைக் கையாள்வதன் பிரதிபலிப்பாக 50,000 கோடி டாலர் வருடாந்திர பரஸ்பர வர்த்தக இலக்கை நிர்ணயித்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அநேகமாக இதற்கான ஒப்பந்தம் டிரம்ப்பின் இந்திய வருகையின்போது சாத்தியமாகலாம்.
  • ரஷியாவுடனான இந்திய உறவு, அமெரிக்காவின் மற்றொரு கவலையாகும். குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பு படையெடுப்புக்குப் பிறகும் ரஷியாவுடன் தொடரும் இந்திய உறவு குறித்து சில மேற்கு நாடுகளும் அதிருப்தி கொண்டுள்ளன. புதிய அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறார் என மேற்கு நாடுகள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளன. டிரம்ப்பிடம் நேரடியாக உரையாடி, சாத்தியமிக்க அமைதியை பிரதமர் மோடி பெற்றுத்தரக்கூடும் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி நம்புகிறார்.
  • ஒரே நேரத்தில் அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் ஆகியவற்றின் தலைவர்களுடன் நேசக்கரம் நீட்டும் இயல்பை பிரதமர் மோடி பெற்றுள்ளதால் அவரது பேச்சை இந்த மூன்று நாடுகளின் தலைமைகளும் கேட்கக்கூடும். ஒருவேளை இந்த தந்திரத்தில் மோடி வெற்றி பெற்றால், அது ரஷியா - உக்ரைன் பதற்றத்தைத் தணிப்பது மட்டுமின்றி, மோடியை சர்வதேசத் தலைவராக உலக நாடுகள் அங்கீகரிக்கும் சூழலை எளிதாக்கும் என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் பார்வை.
  • முந்தைய ஆட்சியாளரைப் போல இல்லாமல் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் உறவைப் புதுப்பிக்க பிரதமர் மோடியின் துணை உதவக்கூடும் என்பது டிரம்ப்பின் கணக்கு. ஆனால், ஆசியா நோக்கி விரிவடைந்துவரும் அமெரிக்காவின் செல்வாக்கை சீனா விரும்பவில்லை. ஏற்கெனவே தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. இப்போது இந்தியாவுடனான நெருக்கம் மூலம் அமெரிக்கா மேலும் அருகே வருவதை தனது பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலாக சீனா காண்கிறது.
  • டிரம்ப் - மோடியின் சந்திப்பு குறித்து கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை பெய்ஜிங்கில் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், ஆசிய - பசிபிக் முகமை என்பது அமைதி மேம்படுவதற்கான இடமாக நீடிக்க வேண்டுமே தவிர, புவி -அரசியல் மோதலை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். இந்த எதிர்வினை, உலக வல்லரசுகளுக்கு மத்தியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிவரும் இந்தியாவின் வளர்ச்சி குறித்த புரிதலை உணர்த்துகிறது.
  • அடுத்து என்ன செய்வார், எப்படி செய்வார் என்பதைக் கணிக்க முடியாத தலைவரான டொனால்ட் டிரம்ப்பை மிகவும் கவனத்துடன் பிரதமர் நரேந்திர மோடி கையாள வேண்டும் என சர்வதேச வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். தனது தேச நலன்களுக்காக, இந்தியாவுடனான உறவை டிரம்ப் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்பதற்கு அவரது கடந்த கால வரலாறு சாட்சி.
  • எனவே, பரஸ்பர நம்பிக்கையுடனும் நாணயத்துடனும் செயல்பட்டால் அது இரு தரப்புக்கும் நல்லது.

நன்றி: தினமணி (17 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories