TNPSC Thervupettagam

பிரதமர் நிவாரண நிதிகள் இரண்டு தேவையா?

June 1 , 2020 1693 days 893 0
  • கரோனா நிவாரணத்துக்காக மார்ச் 28-ம் தேதி உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதி அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
  • இதையடுத்து, 1948-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி அமைப்பு தற்போது செயல்படுகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
  • பிஎம் கேர்ஸுக்கு முன்பாகவே செயல்பட்டு வரும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி அமைப்பு எப்படிச் செயல்பட்டு வருகிறது?
  • இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நடைபெற்ற பிரிவினையில் பாதிக்கப்பட்ட அகதிகளின் உதவிக்காகத் தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி அமைப்பாகும்.
  • தற்போது இந்தியாவெங்கும் நடைபெறும் இயற்கைப் பேரிடர்களில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காகவும், பெரிய விபத்துகள், அமிலவீச்சுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் இந்த அமைப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து செயல்பட்டு வருகிறது.
  • இந்த நிதி அமைப்பு, பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், காங்கிரஸ் தலைவர், டாடா அறக்கட்டளை நிர்வாகிகள், தொழில்துறை சார்ந்த பிரதிநிதி ஆகியோர் கொண்ட கமிட்டியால் அப்போது நிர்வகிக்கப்பட்டு வந்தது.
  • 1985-ம் ஆண்டு, இந்தக் கமிட்டி மொத்தமும் சேர்ந்து நிவாரண நிதியை நிர்வகிக்கும் உரிமையை பிரதமரிடமே ஒப்படைத்தது.
  • தற்போதைய சூழ்நிலையில் நிதி விநியோகம் மொத்தமும் பிரதமரின் முடிவை நம்பியே உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் செயலர் கௌரவ அடிப்படையில் இந்த நிதியை நிர்வகிப்பார்.
  • 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவழிக்கப்படாத நிதியாக இருந்தது. பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக திரட்டப்பட்ட இந்த நிதியே செலவழிக்கப்படாத நிலையில், பிஎம் கேர்ஸ் என்னும் புதிய நிதி அமைப்பு எதற்கு என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்போது கேள்வி எழுப்பினார்கள்.
  • பிரதமரின் நிவாரண நிதியைப் போன்றே மாநில முதலமைச்சர்களுக்கும் நிவாரண நிதி அமைப்பு உண்டு.
  • கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசுக்குப் பெரிய செலவினங்கள் சுமையாக மாறிய நிலையில் மாநில அரசுகளும் இந்த நிவாரண நிதிக்கு கோரிக்கை விடுத்தன.

பிஎம் கேர்ஸ் ஈர்த்த நிதி

  • பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி தொடங்கப்பட்டு 45 நாட்களுக்குள் பெருந்தொகையில் நன்கொடைகளை ஈர்த்தன. பிரதமர் இந்த நிவாரண நிதி குறித்து ட்வீட் செய்த முதல் அரைமணி நேரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்தார்.
  • முதல் ஒரு வார காலத்திலேயே 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நன்கொடை வசூலானது.
  • அதைத் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிஎம் கேர்ஸ்-க்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
  • சில இடங்களில் தங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சம்பளத்திலிருந்து இந்த நன்கொடைக்காகப் பிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம், ராணுவம், கடற்படை, விமானப்படை, டாடா குழுமம், ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை இதில் அடங்கும். கரோனா பேரிடர் காலத்தில் பொருளாதார இழப்பு என்று சம்பளத்தைப் பிடித்து ஆட்குறைப்பு செய்து நிறுவனங்களும் பிஎம் கேர்ஸ்-க்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கின.
  • பல நாட்கள் ஊரடங்கால் தகரக் கொட்டகைகளில் அடைபட்டு ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலித்த ரயில்வே துறையும் 151 கோடியை பிஎம் கேர்ஸ்-க்கு வழங்கியது.

அயல்நாட்டு நிதியைப் பெற முடியும்

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட தொகை, நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்கள், செலவு விவரங்கள் ஆகியவற்றைத் தர முடியாது என்று கூறியுள்ள நிலையில், அதன் விவரங்கள் எதுவும் பிஎம் கேர்ஸ் இணையதளத்திலும் தெளிவாக இல்லை.
  • பெருநிறுவனங்களில் உள்ள கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி என்று சொல்லப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதிகளை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் பிஎம் கேர்ஸ் நிதிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.
  • 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர்கள் நிவாரண நிதிக்குப் பெருநிறுவனங்கள், தங்கள் நிதியை இப்படியாக அளிக்க முடியாது.
  • அத்துடன் அயல்நாட்டிலிருந்து வரும் நிதியையும் பெறுவதற்கான விதிவிலக்கையும் பிஎம் கேர்ஸ் பெற்றுள்ளது. இயற்கைப் பேரிடர்கள் சார்ந்து மாநில முதலமைச்சர்கள் யாரும் தங்கள் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதியைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தி இந்து (01-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories