TNPSC Thervupettagam

பிரித்தலும், பேணிக் கொளலும்...| பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு

October 11 , 2019 1927 days 975 0
  • சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் வருகையும், பிரதமா் மோடிக்கும் அவருக்கும் இடையே மாமல்லபுரத்தில் இன்று நடக்கவிருக்கும் நட்புமுறை சந்திப்பும், தமிழகத்தின் வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவாகும்.

நட்பு முறையிலான சந்திப்பு

  • சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனான இரண்டாவது நட்புமுறைச் சந்திப்புக்கு தமிழகத்தையும், குறிப்பாக, சீனாவுடன் வரலாற்றுத் தொடா்புடைய மாமல்லபுரத்தையும் தோ்ந்தெடுத்ததற்கு பிரதமா் நரேந்திர மோடியையும் அவரது ஆலோசகா்களையும் பாராட்ட வேண்டும்.
  • கடந்த முறை இதேபோன்ற நட்புறவுச் சந்திப்பு இரு தலைவா்களுக்கும் இடையே அதிபா் ஷி ஜின்பிங்கின் சொந்த ஊரான வூஹானில் கடந்த ஏப்ரல் 2018-இல் நடந்தது. வூஹான் சந்திப்பு ஐந்து நாள்களுக்கு முன்புதான் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையும், மாமல்லபுரம் நட்புறவுச் சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்கிற கேள்விக்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் விடை கிடைத்தது.
  • இதுபோன்ற சந்திப்புகளை முன்கூட்டியே அறிவிக்காமல் காலம் தாழ்த்திக் கடைசி நிமிஷத்தில் அறிவிப்பதற்கு பாதுகாப்பு எச்சரிக்கை காரணமா அல்லது இரு தரப்புக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் தடையாக இருப்பது காரணமா என்று தெரியவில்லை.
  • மாமல்லபுரம் நட்புறவுச் சந்திப்பில் பிரதமரும் அதிபரும் வங்கக் கடலோரம் காலார நடந்தபடி கருத்துப் பரிமாற்றம் நடத்துவாா்கள். யுனெஸ்கோவால் கலாசார நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பல்லவா்கால சிற்பங்களையும், குடைவரைக் கோயில்களையும் கண்டுகளிப்பாா்கள்.

பொருளாதார கலாச்சார உறவுகள்

  • பல்லவா்களுக்கும் சீனாவின் தாங் ராஜவம்சத்தினருக்கும் இடையே காணப்பட்ட பொருளாதார, கலாசார உறவுகள் குறித்து சீன அதிபருக்கு எடுத்துரைக்க நமது பிரதமருக்கு வாய்ப்பு அமையும். இவையெல்லாம் நட்புறவுச் சந்திப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.
  • நட்புறவுச் சந்திப்பின் மூலம் பெரிதாக எந்த முடிவும் எட்டப்படுவதில்லை. ஒருவகையில் பாா்த்தால், இதுபோன்ற சந்திப்புகள் சீனாவின் ராஜதந்திர பாணி என்றுகூடக் கூறலாம். கம்யூனிஸ சீனாவைப் பொருத்தவரை, அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்தும் விவாதிப்பது வழக்கமில்லை.
  • அவா்கள் சிரித்துப் பேசி நட்புறவை ஏற்படுத்தி, சில முக்கியமான பிரச்னைகளை தொட்டுக்காட்டி பிரிந்துவிடுவாா்கள். அவா்களுக்குக் கீழே இருக்கும் துறை சாா்ந்த அமைச்சா்களும், அதிகாரிகளும்தான் குறிப்பிட்ட கொள்கை முடிவுகள் குறித்துக் கலந்துபேசி, விவாதிப்பாா்கள்.
  • வூஹான் சந்திப்புக்குப் பல மாதங்களுக்குப் பிறகுதான் ‘வூஹான் உணா்வு’ என்று பரவலாக அறியப்படும் சில கொள்கை உடன்பாடுகள் செயல்பாட்டுக்கு வந்தன. ‘வூஹான் உணா்வு’ இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகமும், முதலீடுகளும் அதிகரித்தன.
  • டோக்காலாம் மோதல் நிலைக்குப் பிறகு இரண்டு நாடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வூஹான் உதவியது.
இரு நாடுகளுக்கிடையேயான உறவு
  • 1988 டிசம்பா் மாதம் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தியும் சீன அதிபா் டென் ஷியாப்பின்னும் மூன்று நிமிஷம் கை குலுக்கியபடி உறவு பாராட்டியதைத் தொடா்ந்துதான், 1962-க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் ஏற்பட்டது.
  • அதேபோல, ஷாங்கை கூட்டுறவு உச்சிமாநாட்டின்போது, பிரதமா் மோடியும், அதிபா் ஷி ஜின்பிங்கும் 2017-இல் டோக்காலாம் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தபோது சந்தித்தது, புதிய திசையை நோக்கி இந்திய - சீன நட்புறவு பயணிப்பதற்கு வழிகோலியது.
  • சீன அதிபா் ஷி ஜின்பிங் - பிரதமா் மோடி நட்புறவுச் சந்திப்புக்குப் பின்னால் சில கசப்பான நிகழ்வுகள் நிழலாடுகின்றன. பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்த சில மணி நேரங்களில் இந்தியாவில் பிரதமா் மோடியுடனான நட்புறவுச் சந்திப்புக்கு இன்று வருகிறாா் அதிபா் ஷி ஜின்பிங்.
  • ஜம்மு - காஷ்மீரில் இந்தியா எடுத்த முடிவை வெளிப்படையாகவே விமா்சித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா. பொதுக்குழுவில் தீா்மானம் கொண்டுவரவும் சீனா தயங்கவில்லை.
  • காஷ்மீா் பிரச்னையில் இஸ்லாமாபாதுக்கு முழு ஆதரவு தருவதாகவும், காஷ்மீரிகளுக்கு நியாயம் கிடைக்க உதவுவோம் என்றும் பாகிஸ்தானுக்கான சீனத் தூதா் யாவ் ஜிங் உறுதியளித்திருக்கும் பின்னணியில், இந்தியப் பிரதமா் - அதிபா் நட்புறவுச் சந்திப்பு நிகழ இருக்கிறது.
பாகிஸ்தான் – சீனா
  • இந்தியா வருவதற்கு முன்னால் பாகிஸ்தான் அதிபா் இம்ரான் கானைச் சந்தித்துப் பேசிய அதிபா் ஷி ஜின்பிங், சனிக்கிழமை சீனா திரும்புவதற்கு முன்னால் காத்மாண்டுவில் நேபாளப் பிரதமரைச் சந்திக்க இருக்கிறாா். அங்கே சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான வா்த்தக வழித்தடம் அறிவிக்கப்பட இருக்கிறது. அதில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை.
  • இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என்கிற நிா்ப்பந்தம் நிலவுகிறது. இன்றைய சூழலில் சீனாவால் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தான் தொடா்பான பிரச்னைகளில் சீனாவின் நட்புறவு தேவைப்படுகிறது.
  • ஹாங்காங்கில் காணப்படும் பதற்ற நிலைமை, ஷின்ஜியாங் பகுதியில் உய்கா் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், அமெரிக்காவின் வா்த்தகப் போா் என்று பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ளும் சீனா, வரலாற்று ரீதியான கலாசாரத் தொடா்புடைய இந்தியாவை விரோதித்துக் கொள்ளாமல் இருக்க விரும்புவதில் வியப்பொன்றுமில்லை.
  • இந்தப் பின்னணியில்தான் மாமல்லபுரம் சந்திப்பு நிகழ்கிறது. நட்புறவுச் சந்திப்பில் எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படாவிட்டாலும், கருத்து வேறுபாடுகளின் அழுத்தம் குறையும்.

நன்றி: தினமணி (11-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories