TNPSC Thervupettagam

பிற உயிர்கள் காப்போம்!

March 7 , 2025 5 days 26 0

பிற உயிர்கள் காப்போம்!

  • இறைநிலை அல்லது இயற்கையின் படைப்பில், எல்லா உயிர்களும் சமம். இதைத்தான் வள்ளுவப் பெருமகனார், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று கூறுகிறார். அதாவது, எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும், செய்கின்ற தொழில்களில் உயர்வு, தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்பது அக்குறளின் பொருள். ஆக பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்பது உறுதி.
  • உணவு உண்ணக் கூடிய அடிப்படையில் உலகில் உள்ள உயிர்கள் மூன்று வகைப்படும். முதலாவது, தாவர உணவுகள் அல்லது சைவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடிய "ஹெர்பிவோர்' எனப்படும் தாவர பட்சிணிகள், இரண்டாவது, மற்ற உயிரினங்களை உணவாக உண்ணக் கூடிய அல்லது அசைவ உணவுகளை உண்ணக் கூடிய "கார்னிவோர்ஸ்' என்று சொல்லக்கூடிய மாமிச பட்சிணிகள். மூன்றாவது, தாவர உணவுகள் மற்றும் மாமிச உணவுகள் இரண்டையும் உண்ணக் கூடிய "ஆம்னிவோர்ஸ்' என்று சொல்லக் கூடிய சர்வ உண்ணிகள்.
  • கற்கால மனிதன் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், குகைகளிலும், அடர்ந்த வனங்களிலும் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பசி வரும்போது, தன் பசியைப் போக்கிக் கொள்ள, தன்னை விட வலிமை குறைந்த விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் மாமிசத்தை பச்சையாக உண்டு வந்தான். அடுத்து, கற்களை உரசி நெருப்பை உண்டாக்கத் தெரிந்தபின் வேட்டையாடிய மாமிசங்களை தீயில் பொசுக்கி, வேக வைத்து உண்டு மகிழ்ந்தான். சுட்ட மாமிசம் ருசியாக இருந்ததால், ருசியான உணவுக்கு மனிதன் அடிமையாக ஆரம்பித்தான். ஆனால், இதே காலகட்டத்தில் மரங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் விளையக் கூடிய பல வகையான கனிகளையும், காய்கறிகளையும் அவை என்னவென்றே தெரியாமல் உண்டு வந்தான்.
  • காலப்போக்கில் விலங்குகளின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், அதனால் ஏற்பட்ட பசியின் கொடுமையாலும், மனிதன் மாற்று உணவைத் தேடத் தொடங்கினான். அப்போது தன் ஆறாம் அறிவால் சிந்திக்கத் தொடங்கி, தானியங்களைப் பயிர் செய்யும் விவசாயத்தைக் கற்றுக் கொண்டான். இப்போது ஆறாவது அறிவின் பயன்பாட்டாலும், அதை உபயோகிக்கத் தெரிந்து கொண்ட ஆற்றலாலும் மாமிச உணவுடன் தாவர உணவையும் சேர்த்து, இரண்டையும் புசித்து வந்தான்.
  • ஆறாம் அறிவு இல்லாத, ஐந்தறிவு கொண்ட சீற்றம் நிறைந்த வனமிருகங்கள், தம் பசியைப் போக்கிக் கொள்ள தம்மை விட வலிமை குறைந்த மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து வருகின்றன. இதற்காகவே, இயற்கை அந்த மிருகங்களுக்கு கோரைப் பற்களைப் படைத்துள்ளது. அந்த கோரைப் பற்களைக் கொண்டுதான் வேட்டையாடிய மிருகங்களின் உடல்களைக் கிழித்து உண்ண முடிகிறது. மனிதனுக்கு கோரைப் பற்களை இறைநிலை படைக்கவில்லையே! மனிதன் அசைவ உணவுகளை உண்பது முரணல்லவா?
  • மேலும், எந்த மருத்துவரும், தானிய உணவுகள் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்கு சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் நாற்பது வயதுக்கு மேல் முதுமை தொடங்குவதால் புலாலில் உள்ள அதிகப்படியான புரதமும் கொழுப்பும் நம் ரத்தத்தில் கலந்து, "கெட்ட கொலஸ்ட்ரால்' என்று சொல்லக் கூடிய கொழுப்பை அதிகப்படுத்தி, ரத்தநாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி, மூளை, இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளைச் செயலிழக்கச் செய்து, பக்கவாதம், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
  • கோழி நமக்கு முட்டையைத் தருகிறது. முட்டையை விழுங்குவதோடு நில்லாமல் அந்த கோழியையே விழுங்கி விடுகிறோம். சேவல் விடியற்காலையில் பொழுது புலர்ந்ததை கூவல் மூலம் அறிவித்து உழவனையும் உலகையும் எழுப்பி விடுகிறது. அந்தச் சேவலையும் பிரியாணி செய்து உண்கிறோம்.
  • எந்தப் பாவமும் அறியாத ஆடு தன் கழிவு மூலம் விவசாய பூமியை வளம் பெறச் செய்கிறது. மேலும் ஆட்டுப்பால் மிகுந்த சக்தி தரக் கூடிய, அஹிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியடிகளால் மிகவும் விரும்பி அருந்தப்பட்ட அருமையான உணவாகும். அந்த ஆட்டையும் கொன்று உண்கிறோம்.
  • நம்மை ஈன்ற மாதாவுக்குப் பிறகு, நமது குழந்தைப் பருவம் முதல் நாம் இறக்கும் வரை, தன் பாலையும், பால் சார்ந்த உணவுப் பொருள்களையும் நமக்கு கொடுக்கின்ற, "கோமாதா' என்று தெய்வமாக வணங்கப்படுகின்ற நம் இரண்டாம் தாயான பசுவையும்,விவசாய நிலங்களில் ஏர் உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும், மேலும் தன் சாணத்தை விவசாய நிலத்துக்கு அற்புதமான எருவாகக் கொடுக்கிற, உழவர்களின் நண்பனாகவும், அவர்தம் குடும்பத்தில் ஓர் பிள்ளை போலவும் உழைக்கின்ற எருதுகளையும் கூட கொன்று உண்டு விடுகிறோம். ஆனால், வருடாவருடம் மாட்டுப் பொங்கல் கொண்டாடத் தவறுவதில்லை.
  • பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலிலும், பொதிகளையும் மனிதர்களையும் சுமந்து சென்று, தன் பாலையும் உணவாகத் தருகின்ற ஒட்டகங்களையும் வெட்டிச்சாய்த்து உண்டு விடுகிறோம்.
  • "வேதாத்திரி மகரிஷி' தனது "தென் வாழ்க்கைவிளக்கம்' என்ற நூலில் கூறியுள்ள செய்தியைக் காண்போம். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு புத்தகத்தில் ஒரு பாடலைப் படித்திருக்கிறார்.
  • "அம்மாவென அலற ஆருயிரைக் கொன்றருந்தி இம்மானிடரெல்லாம் இன்புற்றிருக்கிறார்,
  • அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும் பொய்மா நரகமெனில், புசித்தவர்க்கென் சொல்லுவதோ'
  • என்பது அந்தப் பாடல். அதாவது, ஓர் உயிரைக்கொல்லும்போது அது "அம்மா' என்று அலறும். அப்படி அலறுகின்ற உயிர்களைக் கொன்று, அதை உண்டு மனிதரெல்லாம் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அந்த உயிர் "அம்மா' என்று அலறும்போது, அந்த அலறலைக் கேட்ட பிறகும், அதைக் கண்டு கொள்ளாமல், அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுகின்ற ஒருவர், பெரும் தவம் புரிந்த யோகியோ அல்லது ஞானியோ ஆயினும் அவருக்கும் நரகம்தான் வாய்க்கும். அப்படியெனில் அதை உணவாகப் புசித்தவர்க்கு என்ன கதிஆகுமோ, அதைப்பற்றி என்ன சொல்லுவதோ என்பது அதன் பொருள். இந்தப் பாடலைப் படித்தபின், அந்த வேதனையை உணர்ந்து, அன்றுமுதல் புலால் உண்பதில்லை என்று சபதமேற்று, பின்னாளில் மிகப் பெரிய ஞானியாக வாழ்ந்து, இந்த மண்ணுலகுக்கு "மனவளக்கலை' என்ற பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றுள்ளார்.
  • தன் உணவுக்காக மனிதன் பிற உயிர்களைக் கொல்லும்போது அவன் நான்கு குற்றங்களைச் செய்வதாக கூறுகிறார்.
  • முதலாவது, "கொலைக்குற்றம்' - பிற உயிரைக் கொல்வது என்னும் கொலைக்குற்றம்.
  • இரண்டாவது, "வாழும் சுதந்திரத்தைப் பறித்தல்' - இறைநிலை எல்லா உயிர்களுக்கும் இந்த மண்ணில் வாழும் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
  • மூன்றாவது, பிறர் பொருளைப் பறித்து உண்ணுதல் - ஒரு குறிப்பிட்ட விலங்கைக் கொன்று, அவ்விலங்குக்குச் சொந்தமான உடலை, அவ்விலங்கின் சம்மதம் இன்றி பறித்து உண்ணுதல். இது பல தருணங்களில் நம்மிடமுள்ள பொருள்களை குரங்குகள் நம் மீது பாய்ந்து பறித்து உண்பதற்கு ஒப்பாகும்.
  • நான்காவது "பிறர் பொருள் திருடுதல்' - மற்றொரு உயிருக்குத் தெரியாமல் அதன் உடலை நாம் உண்பதற்காக திருடுவது என்கிற குற்றம்.
  • நம்மையோ நம் உறவுகளையோ முன்பகை போன்ற ஏதோ சில காரணங்களால் சக மனிதர்கள் வெட்டிக் கொன்றால் நாம் பொறுத்துக் கொள்கிறோமா? உடனே பதறிப்போய், காவல் துறையிடமும், நீதி மன்றங்களிலும் முறையிட்டு நீதி கேட்கிறோம். வாயில்லா ஜீவன்கள் எங்கே செல்லும்? நம் மனசாட்சிதான் மற்ற உயிர்களுக்கான நீதிமன்றம். நாம் நல்ல நீதிபதிகளாய் வாழ்வோம்.
  • கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட நம் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பெயர் தற்கொலை. தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம். நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்ள நமக்கே உரிமை இல்லாதபோது, பிற உயிர்களைக் கொல்வதற்கு நமக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? காட்டில் உள்ள வனவிலங்குகள் எவற்றையும் வேட்டையாடக் கூடாது என்பது சட்டம். ஆனால், நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி யாவற்றையும் கொல்வதற்கு எந்தச் சட்டம் இடம் கொடுக்கிறது?
  • இன்று தெரு நாய்களைப் பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கருணை கொண்ட நல் இயக்கங்கள், நாள்தோறும் லட்சக்கணக்கான உயிர்களை உணவுக்காகக் கொன்று உயிர் வாழும் மனிதர்களையும், அந்த உணவால் நாள்தோறும் பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கின்ற உணவகங்களையும், நட்சத்திர விடுதிகளையும் ஏன் எதிர்ப்பதில்லை? ஏன் இந்த முரண்பாடு? நல் உள்ளம் படைத்தோர் சிந்திக்கட்டும்.

நன்றி: தினமணி (07 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories