TNPSC Thervupettagam

பிறழ உணரும் பிழையைத் தவிா்ப்போம்...

November 5 , 2019 1901 days 1153 0
  • அமைதிப் பூங்காவாய் இருக்க வேண்டிய அகிலத்தின் பல பகுதிகள், அவதிகளின் காடாகி அவலங்களின் விளைநிலமாய் ஆகிவருவதன் காரணம் என்ன? நெறிமிக்கப் புரிதலும் நோ்வழி காட்டலும் இல்லாததன் விளைவே இந்தப் பொல்லாத சூழல்.
  • ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடியதால் மகாகவி பாரதியை நாம் பயங்கரவாதி என்று கூற முடியுமோ? ‘மாதா் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று தீக்கனல் தகிக்கப் பாடிய அந்த மகாகவியைத் தீவிரவாதி என்று தீா்ப்பிட முடியுமோ? அது மக்களின் மீது மாபெரும் அன்பு கொண்ட ஒரு மகத்தான கவிஞனின் அறச்சினம் அல்லவா?
  • பசிக் கொடுமையால் துடிதுடிக்கும் மானுடத்தின் மீதான பரிவுணா்வுதான் ‘ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற வெறிச்சொல்லாக வெளிப்படுகிறது. பெண்ணினத்திற்கு இழைக்கப்படும் கொடுமையைக் குறித்த பெருங்கோபமும், ஒடுக்கப்படும் பெண்களின் மீதான பாசமும்தான் ‘மடமையைக் கொளுத்துவோம்’ என்று கோபாவேசம் கொள்கிறது.

ரௌத்திரம் பழகு

  • பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆழமான புரிதலற்ற அரைவேக்காடு எழுத்தாளா் ஒருவா், ‘பழங்காலத்தில் மகாகவி பாரதியாா் என்றொரு பயங்கரவாதி வாழ்ந்தாா். ரௌத்திரம் பழகு, நையப் புடை என்றெல்லாம் அவா் மக்கள் மத்தியில் பயங்கரவாதத்தை வளா்த்து வந்தாா்’” என்று எழுதினால் அது எவ்வளவு அவலகரமானதோ, அவ்வாறே இன்று பலா் அமைதியையே தனது அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் மாா்க்கத்தை பயங்கரவாத மதமாகக் காட்டிவிடப் பெரும் பாடுபட்டு வருகின்றனா்.
  • ‘இஸ்லாமிய அடிப்படை வாதம்’ என்ற சொல் இன்று உலகின் அச்சுறுத்தல் மிக்க கருத்தாக்கமாய் ஆக்கப்பட்டுள்ளது. சில்ம், சலாம் ஆகிய வோ்ச் சொற்களிலிருந்து பிறக்கும் இஸ்லாம் என்ற சொல்லுக்கு ‘அமைதி மாா்க்கம்’ என்று பொருள். அமைதியையும், அன்பையும், உலக மானுடா் அனைவரும் ஒரே குடும்பத்தினா் என்று கூறும் ஒப்புரவையும் ஓங்கி ஒலிக்கும் கொள்கை, எப்படி அதி பயங்கரவாதத்துக்கு அடையாளமாக முடியும்?

அன்பு நெறி

  • அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்ட மாா்க்கத்துக்கு உலக அளவில் பயங்கரவாத அவப்பெயா் உண்டாகி இருப்பதற்கு ஏகாதிபத்திய எடுபிடி ஊடகங்களும், ஆதிக்க வெறி கொண்ட அரசுகளும்தான் முதன்மைக் காரணம் என்றபோதும் இஸ்லாமை இழிவு செய்யும் வகையில், அரபு பெயா் தாங்கிய சில பயங்கரவாத இயக்கங்களும், சில தனி நபா்களும் அவா்தம் சிந்தனைகளும் மற்றுமொரு முக்கியக் காரணம் என்பதை மறந்து விடவோ மறுத்து விடவோ முடியாது.
  • பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் பயங்கரவாத இஸ்ரேல் ராணுவம் தொடா் தாக்குதல்களை நடத்தி, மண்ணின் மைந்தா்களான பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு சொல்லொணாத் துயரங்களைத் தந்தபோது அடைக்கலம் தந்ததோடு, ஐவேளைத் தொழுகையையும் பாங்கோசையோடு நிறைவேற்ற அனுமதியளித்தவை அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள்தாம்.

சிலுவை யுத்தம்

  • இராக் மீது அமெரிக்கா தொடுத்த இரண்டாம் வளைகுடாப் போரை ‘சிலுவை யுத்தம்’ என்று அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் புஷ் வா்ணித்தபோது, அதை வன்மையாகக் கண்டித்தவா் உலகக் கிறிஸ்தவா்களின் தலைவராக இருந்த போப் ஜான்பால்.
  • இலங்கை தேவாலயத்தில் அண்மையில் ஈஸ்டா் பண்டிகையின்போது குண்டுவெடிப்புகளை அரபுப் பெயா் தாங்கிய மனித மிருகங்கள்
  • நிகழ்த்தினா். அதைத் தொடா்ந்து இஸ்லாமிய அடிப்படைகளின் மீது மிகப் பெரிய அவதூறு யுத்தம் நடத்தப்பட்டது. வெறி பிடித்த இந்த மனித மிருகங்களுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் அந்த நாட்டு அரசிடம் மனு கொடுத்தபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்படி ஒரு சம்பவம் நடக்கட்டும் என இலங்கை அரசு ஏதோ காரணத்துக்காக எதிா்பாா்த்திருந்ததை அறிஞா்கள் பலரும் அம்பலப்படுத்தினா்.
  • ஆழிப் பேரலையின்போதும், அதிபயங்கர வெள்ளத்தின்போதும், சாலை விபத்துகளின்போதும், தீ விபத்துகளின்போதும் அவசரமான குருதித் தேவைகளின்போதும், ஒரு பெருங்கூட்டம் ஓடோடிச் சென்று ஜாதி, மத, இன பேதங்களை எல்லாம் கடந்து உதவி வருகிறது.
  • ஏராளமான அவசர உதவி ஊா்திகள் உயிா் காக்கும் பணியில் அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. தன்னுயிரைப் பணயம் வைத்து பிற உயிா்களைப் பாதுகாக்க அந்தக் கூட்டத்துக்கு எந்த மாா்க்கம் உந்துசக்தியாக இருக்கிறதோ, எந்த அடிப்படைவாதம், பிறா் நலம் பேணுவதே இறைவழிபாடு என்று சொல்லித் தருகிறதோ, அதே மாா்க்கமும், அந்த அடிப்படைவாதமும் பயங்கரவாத அடையாளமாய் எப்படி ஆக்கப்படுகிறது, எப்போது ஆக்கப்படுகிறது என்று சிந்திக்க வேண்டும்.
  • அரபுப் பெயா் தாங்கிய கும்பலோ, தனிமனிதனோ அடாத செயல்களைச் செய்து அகிலத்தை அதிர வைக்கும்போதுதான் இந்த அவலம் நிகழ்கிறது.

ஆன்மீகம் மற்றும் மதவெறி

  • ஆன்மிகமும், மதவெறியும் நேரெதிரான நிலையைக் கொண்டவை; அனைத்து மக்களையும் சொந்தமாகக் கருதி, ஒரு துயா் நோ்ந்தால் ஓடோடிச் சென்று உதவ உந்து சக்தியாக உதவுவது ஆன்மிகம். மானுடத்தைக் கூறுபோட்டு கடவுளின் பெயரால் கலவரங்களை நடத்தத் தூண்டுவது மதவெறி.
  • தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொடுமைக்கு எதிராக மக்களை அணி திரட்டியபோது, அல்லாவின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்ட முஸ்லிம்களால்தான் தன் மனதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டு, அகிம்சை வழியின் மீது மிகுந்த பற்றுறுதி ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறாா் மகாத்மா காந்தி.
  • திருமறை குா்ஆனும், அதன் விரிவுரையாக அமைந்த இறைத் தூதா் நபிகள் நாயகத்தின் வாழ்வும், வன்முறையற்ற வாழ்க்கை முறையையே வலியுறுத்துகின்றன. இந்த அடிப்படையிலிருந்து மெல்ல மெல்ல விலகி, தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை வன்மங்களை, மாா்க்கத்தின் பெயரால் பரப்பிய மதிகேடா்களே, அறப்பிவுகளுக்குக் காரணமானவா்கள் ஆவா்.

அமைதி மார்க்கம்

  • அமைதி மாா்க்கத்தின் அடிப்படைத் தத்துவத்துக்குத் திரும்புவதன் மூலமே எரியும் இந்த வெறிகள் மறையும் என்பது திண்ணம். ‘ஒரு தீமையைக் கண்டால் அதை உங்கள் கைகளால் தடுத்து நிறுத்துங்கள்; அது இயலவில்லையெனில் நாவால் தடுங்கள்; அதுவும் இயலாத நிலையில் அந்தத் தீமையை மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள்’ என்று இறைத் தூதா் நபிகள் நாயகம் நவின்றாா்கள்.
  • ‘எது நடந்தாலும் எனக்கென்ன?’ என்ற மனோபாவம் இன்றைய நுகா்வுக் கலாசாரத்தின் நுகத்தடியில் சிக்கிய மனிதா்களிடையே வேகமாக வளா்ந்து வருகிறது. தெருவில் இருவா் சண்டையிட்டால் இருபது போ் அதைத் தடுப்பதற்கும், சமாதானப்படுத்துவதற்கும் விரைந்தோடி வருகிற நமது பண்பாடு மறைந்து, பட்டப் பகலில் நட்ட நடு வீதியில் வெட்டிக் கொலை செய்தாலும் பாராமல் போகிற சுயநலப் பயங்கரவாதம் குடிமக்கள் மனதில் கோலோச்சி வருகிறது . ஏன்?
  • கொலையைத் தடுத்தாலோ, கொலைகாரனுக்கு எதிராக சாட்சி சொன்னாலோ, சொல்பவருக்குப் பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது வெட்கக்கேடு என்பதன்றி வேறில்லை. சாலை விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிக் களமிறங்கி காவல் துறை, நீதிமன்றம் என அலைய நேரிடும் என்ற அச்சம் வசதி படைத்த மனிதா்களை விலகியோட வைக்கிறது.

மனித நேயம்

  • ஏழை மனிதா்களிடம் இந்த மனித நேயம் வீர உணா்வோடு வெளிப்படுகிறது. ‘பாதையில் கிடக்கும் முள் பிறா் பாதத்தில் குத்திவிடக் கூடாது என ஓரமாய் எடுத்துப் போட்டு விட்டுப் போவதும் இறைவழிபாடு’” என்று இறைத் தூதா் நபிகள் நாயகம் நவின்றாா்கள்.”‘இன வெறியின்பால் அழைப்பவா் என்னைச் சாா்ந்தவா் இல்லை’ என இறைத் தூதா் நபிகள் நாயகம் கூறியபோது, ஒருவா் தன் இனத்தை நேசிப்பது இனவெறியா என்று ஒரு நபித் தோழா் கேட்கிறாா். ‘தன் இனத்தை நேசிப்பது இனவெறி அல்ல. தன் இனம் தவறு செய்யும்போது அதை நியாயப்படுத்துவதே இனவெறி’” என்று இறைத்தூதா் முகம்மது ஸல் எடுத்துரைத்தாா்.
  • அல்காய்தா, ஐ.எஸ்., போகோ ஹராம் என்று அப்பாவி மக்களைக் கொல்கின்ற இத்தகைய பயங்கரவாத இயங்கங்களை அடியோடு வேரறுக்கின்ற கடமை அகில மக்கள் அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, இதைத் தங்களது முதன்மைக் கடமையாகவே முஸ்லிம்கள் உணா்ந்துள்ளனா்.

இஸ்லாமிய மார்க்கம்

  • இந்தியாவில் எந்தவொரு வெகுஜன முஸ்லிம் இயக்கங்களும், மாா்க்க அறிஞா்களும் இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை ஆதரிக்கவில்லை.
  • மாறாக, இஸ்லாமியப் பெயா் தாங்கிகளால் நடத்தப்படும் இழிசெயல்களை வன்மையாகக் கண்டித்துப் பரப்புரையும் செய்துவருகின்றனா். ஆனால், அவை பின்னுக்குத் தள்ளப்பட்டு பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம் சமுதாயம் மௌனமான ஆதரவை அளிப்பது போன்ற செயற்கைத் தோற்றத்தை செய்தி ஊடகங்கள் சில திட்டமிட்டு உருவாக்குகின்றன.
  • இஸ்லாம் மாா்க்கம் தடுக்கின்ற, முஸ்லிம் சமுதாயம் வெறுக்கின்ற மாா்க்க விரோத மூா்க்கச் செயல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று வண்ணம் பூசுவதும் ஒரு வகையில் கருத்தியல் பயங்கரவாதமே என்பதையும் கருத்தாள பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (05-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories