- தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 2023 ஐ விட (90.93%) 2024 இல் (91.17%) தேர்ச்சி விகிதம் சற்று (0.24%) அதிகரித்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. அதேவேளையில், தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அதே அளவில் நீடிப்பது கவலை அளிக்கிறது.
- 2024இல் மாணவர்களில் 3,35,396 (87.26%) பேரும், மாணவிகளில் 4,04,143 (94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023இல் மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த முறை மாணவர்களில் வெறும் 0.26% பேர் கூடுதலாகவும், மாணவிகளில் 0.33% பேர் குறைவாகவும் தேர்ச்சி பெற்றிருப்பது, பிளஸ் 1க்குப் பொதுத் தேர்வு தொடர வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்புகிறது.
- தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி 1982இல் அறிமுகமான பிறகு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 என இரண்டு பொதுத் தேர்வுகள் நடைமுறையில் இருந்தன. பிளஸ் 1 தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. 2017-18இல் மாநில அளவிலான பொதுத் தேர்வாக பிளஸ் 1 தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
- தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்குரிய பாடங்களை நடத்தாமல், பிளஸ் 2 பாடங்களையே நடத்துகிறார்கள். சில பள்ளிகளில் 11,12ஆம் வகுப்புப் பாடங்களுக்குப் பதிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுத்து, பள்ளிக் கல்வித் துறை இந்த முடிவை எடுத்தது.
- 2020, 2021 கரோனா காலத்தில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட பிறகு 2022 இல் நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் (83,819 பேர்) தோல்வியடைந்தது கேள்விக்குள்ளானது. 2023இல் தேர்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் சர்ச்சையானது.
- எனினும் பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்க அரசு முன்வரவில்லை. இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் மாறாமல் இருக்கும் நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
- மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இல்லை என்பது கவனிக்க வேண்டியது. ஆனால், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 10, 11, 12 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் பொதுத் தேர்வு எழுதுவதால் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்கள். இந்தக் கருத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
- மேலும், கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவிகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பொதுத் தேர்வுக்குத் தயாராவது அவர்களுக்குச் சவாலானதாகவே இருக்கும். ஒருவகையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு பள்ளிக் கல்வித் துறைக்கும் கூடுதல் பணிச் சுமைதான்.
- உயர் கல்வியில் சேர நடைபெறும் நுழைவுத் தேர்வுகளால் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலே இரண்டாம்பட்சமாகிவிட்டது. இந்தச் சூழலில், பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்கான மதிப்பு குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.
- பிளஸ் 1 தேர்வை மீண்டும் மாவட்ட அளவிலான தேர்வாக மாற்றுவதே அரசு முன் இருக்கும் ஒரே தீர்வு. செயல்முறைத் தேர்வு மதிப்பெண்ணைச் சேர்ப்பது போல், பிளஸ் 1 தேர்வில் ஒரு மாணவர் பெற்ற மதிப்பெண்ணிலிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தை எடுத்து பிளஸ் 2 மதிப்பெண்ணில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்கலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறையினர் என அனைத்துத் தரப்பும் அழுத்தத்தை எதிர்கொள்வது இனியும் தொடர வேண்டுமா என அரசு சிந்திக்கட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 05 – 2024)