TNPSC Thervupettagam

பிளஸ் 2 மதிப்பெண் சிக்கல் - பேசப்பட வேண்டிய பிரச்சினை

March 13 , 2025 5 hrs 0 min 10 0

பிளஸ் 2 மதிப்பெண் சிக்கல் - பேசப்பட வேண்டிய பிரச்சினை

  • 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிவிட்டது. தேர்வை எழுதும் 8.21 லட்சம் பேரில் பலர், 11ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தது முதலே, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கவனம் செலுத்திவருகிறார்கள். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் அரசு இயந்திரத்தின் கவனமும் இதில் கணிசமாக இருக்கிறது.
  • 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்காக மாணவர்கள் செலுத்தும் உழைப்பு மகத்தானது. “உலகின் மிகக் கடினமான வேலை இந்தியாவின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு” என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன் குறிப்பிடுகிறார். ஒரு வேள்வியைப் போல் இந்தத் தேர்வு பார்க்கப்படுகிறது.
  • ஒரு மாணவருக்கு எவ்வளவு வேண்டு​மா​னாலும் திறமை, ஆற்றல், அறிவு, புத்திக்​கூர்மை இருக்​கலாம். அது மதிப்​பெண்ணாக மலராவிட்​டால், அதனால் பயனில்லை என்று ஆழமாக நம்பப்​படு​கிறது. மாணவர்​களின் மதிப்​பெண்கள் அவர்களது திறன்​களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர், கல்வி நிறுவனங்கள், ஆளும் அரசு ஆகியவற்றின் திறனாக, வெற்றி​யாகப் பார்க்​கப்​படு​கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

மதிப்​பிழந்த மதிப்பெண்:

  • முன்பெல்​லாம், 12ஆம் வகுப்பே மாணவர்​களின் எதிர்​காலத்தைத் தீர்மானிக்கும் கருவியாக இருந்து​வந்தது; உயர் கல்விக் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதாக இருந்தது. ஜே.ஈ.ஈ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அறிமுகமான பிறகு, மருத்​துவக் கல்வி பயிலவும், ஐஐடி உள்ளிட்ட இந்திய உயர்கல்வி நிறுவனங்​களில் பயிலவும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்​பிழந்து​போனது.
  • ஆனால் தமிழ்நாடு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்​துவம் போன்ற படிப்பு​களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்​பெண்ணே பயன்படுத்​தப்​பட்டு வருகிறது. நீட் தேர்வை மட்டுமே நம்பி அல்லும் பகலும் உழைத்த ஒரு மாணவர், அதில் வெற்றியடைய முடிய​வில்லை என்றால், வேறு எந்த நல்ல பாடத்தையும் தேர்வுசெய்து படிக்க முடியாமல் வீழ்ச்சி அடையும் சூழல் நிலவு​கிறது.
  • ஒருபுறம் ஜே.ஈ.ஈ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு​களுக்கும் தயாராக வேண்டும்; இன்னொரு​புறம் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்விலும் நிறைய மதிப்​பெண்கள் எடுத்து வெற்றி வாகை சூட வேண்டும் எனில், அது இயல்பாக நடைபெற முடியாத காரியம். இரட்டைக் குதிரைச் சவாரி அது. எதிர்​பார்த்த இலக்கை அடைய முடிய​வில்லை எனில், என்ன செய்வது, யாரைச் சபிப்பது, எதை நொந்து​கொள்வது? 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்​களுக்கும் பெற்றோர்​களுக்கும் மிகப் பெரிய சோதனை இது.
  • இந்தப் பரிசோதனையில் வெற்றிபெற இயலவில்லை எனில், அது வாழ்நாள் வேதனை. பாதிப் படிப்பு​களுக்கு நுழைவுத் தேர்வு. மீதமுள்ள படிப்பு​களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்​பெண்கள் என்கிற நிலை, தற்போது படித்து​வரும் மாணவர்களை இருதலைக்​கொள்ளி எறும்பாக மாற்றுகிறது. இது அவர்களுக்கு விதிக்​கப்பட்ட பெரும் தண்டனை என்றால் மிகையா​காது.

தொடரும் விவாதங்கள்:

  • ஜே.ஈ.ஈ., நீட் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் நுழைவுத் தேர்வுகள் வரவிருக்​கின்றன. அப்போது இந்தச் சிக்கல் தீர்ந்து​விடும். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்​பெண்கள் ஓர் அடையாள அட்டை அல்லது கடவுச்​சீட்டு போன்ற கருவி​யாகி​விடும். அப்போது எல்லாருக்கும் ஒற்றைக் குதிரைப் பயணம்​தான்.
  • ஆனால் இந்தக் குதிரையேற்றப் பயிற்சி, பள்ளியில் மட்டும் வழங்கப்​படு​வதல்ல; பள்ளிக்கு வெளியே குடிசைத் தொழில் முதல் கார்ப்​பரேட் நிறுவனங்கள் வரை இந்தத் தொழில் வளர்ந்து நிற்கிறது. பணத்துக்கு ஏற்பக் குதிரைகளும் பயிற்​சி​யாளர்​களும் காத்திருக்​கின்​றனர்.
  • சரி, அப்படி​யென்றால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எதற்கு என்கிற கேள்வி எழலாம். அப்படியான ஒரு பொதுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தேவையா என்கிற கேள்வியும் உருவாகலாம். 12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்​தவர்கூட, நுழைவுத் தேர்வில் வெற்றி பெறலாம் அல்லவா? எனவே, இவர் 12ஆம் வகுப்பு படித்​துள்ளார் என்று ஒரு சான்றிதழ் போதும். தேர்வு எதற்கு, மதிப்​பெண்கள் எதற்கு என்ற நிலை காலப்​போக்கில் உருவாகலாம். அதனை நோக்கி நகர விவாதங்கள் உருவாகலாம். ஆம், சரிதானே என்றும் நமக்குத் தோன்றும்.
  • 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குப் பயன்பாடு சிறிதும் இல்லை என்கிற ஒரு நிலை வந்தால், கற்றல்​-கற்​பித்தல், கற்போர் நிலை, கற்பிப்போர் நிலை எப்படி இருக்​கும்? பாடங்கள் தாண்டி, பாடத்​திட்​டங்கள் தாண்டி, மதிப்​பெண்​களைக் கடந்து கல்வியில் கற்றல் - கற்பித்தல் சில விழுமி​யங்​களைத் தருகிறது; பயிற்று​விக்​கிறது. அவை தனிமனித வாழ்வுக்​கும், சமூக வாழ்வின் விழுமி​யங்​களுக்கும் விதிகளுக்கும் பயன்படுபவை.
  • அது ஆசிரியர் மட்டுமே தரும் உபதேசம் மூலம் கற்றுக்​கொள்வது அல்ல. பள்ளி என்கிற சமூக நிறுவனத்​துக்கு வரும் மாணவர்கள் சக மாணவர்​களிடம் பழகுதல், உரையாடல், அவதானித்தல் மூலம் கிடைப்பது. பாடங்கள் சார்ந்த இதர கற்றல்​-கற்​பித்தல் செயல்​பாடுகள் மூலம் மாணவர்கள் உள்வாங்​கிக்​கொள்வது.
  • இத்தகைய கற்றல் அனுபவங்கள் மாணவர்கள் மனதில் பதிந்து அவர்களுக்குத் தேவையான நேரத்​தில், தேவையான வகையில் பயன்படுத்​திக்​கொள்ள உதவும். அது மட்டுமல்ல, மதிப்​பெண்கள் இல்லாமல் இதர கலைகளைக் கற்றுக்​கொள்ள மட்டுமே பாடசாலைகளை வெற்றிகரமாக நடத்திட இயலுமா என்கிற கேள்வியும் வலுவாக எழுகிறது. அதற்கான பாடத்​திட்டம், கலைத் திட்டம் எவ்வாறு இருக்​கும், எவ்வாறு வடிவமைப்பது என்கிற கேள்விகள் மிக முக்கிய​மானவை.
  • மதிப்​பெண்கள் இல்லாத ஒரு பள்ளியை, பாடத்​திட்​டத்தைச் செம்மையாக வடிவமைத்து​விடு​கிறோம் என்று கற்பனை செய்து​கொள்​வோம். உயர் கல்வி நுழைவுத் தேர்வுப் பயிற்சிகள் பள்ளிக்கு வெளியே பரந்து விரிந்து செயல்​படும் நிலையில் அனைத்துப் பயன்மிக்க பாடங்கள், பணம் ஈனும் பாடங்கள், ஆற்றலை அபிவிருத்தி செய்யும் பாடங்கள், ஆளுமையை வளர்க்கப் பயன்படும் பாடங்கள் என எல்லாமே பள்ளிக்கு வெளியே நடைபெறும் தனிப் பயிற்சிகள் வழியாகத்தானே தீர்மானிக்​கப்​படும்? அப்போது எவ்வளவு வலுவான இடஒதுக்​கீட்டின் வழியாகவும் அந்தந்த இடஒதுக்​கீட்டுப் பிரிவின் கீழ் பொருளாதார பலம் வாய்ந்​தவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள்.
  • தனிப்​ப​யிற்சி பெற வழி இல்லாதவர்கள் பள்ளிக் கல்வியில் எவ்வளவு சமூகப் பொறுப்பு​களைக் கற்றுக் கையில் வைத்திருந்​தா​லும், உன்னதமான உயர் கல்வி நிறுவனங்களை எட்டிப் பார்க்கவே முடியாது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணாவிட்​டால், அதன் வழியாக உருவாகும் சமூகச் சீர்கேடுகள் தனிப்​ப​யிற்சிகள், தனித் திறன்கள் வழியாக முன்னேற்றம் அடைந்​தவர்​களையும் நிம்ம​தியாக வாழ விடாது. குன்றாத வளர்ச்சிக்குக் குறைவு ஏற்படாத வகையில் கல்விக் கணக்கீடுகள் அமைய வேண்டும்.
  • இதனைத் தாண்டி மேலும் முக்கியமான கணக்கீடு ஒன்று இருக்​கிறது. இந்தியா போன்ற - மாநிலங்கள் நிறைந்த மத்திய அரசில், மாநிலப் பாடத்​திட்​டங்கள், கலைத்​திட்​டங்கள், மாநிலக் கல்வி வாரியங்கள் ஆகியவை சந்தடி இல்லாமல் காணாமல் ஆக்கப்​பட்டு​விடும்.
  • அல்லது இருந்தும், இல்லாததுபோல் இருக்​கும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை பொருளற்​ற​தாகப் போய்விடும். இதனால் ஏதேனும் நீண்ட காலப் பின்விளைவுகள், பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதையும் சமூகப் பற்​றாளர்கள், கல்​வி​யாளர்கள்​ ஆழ​மாகப் பரிசோதனை செய்ய வேண்​டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories