TNPSC Thervupettagam

பிளாக்செயினை நம்பியோர் கைவிடப்படார்!

August 12 , 2024 156 days 127 0
  • தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் பிளாக்செயின் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய இணைய உலகில் நம் தகவல்களை யாரோ ஒருவர், எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். நமக்கே தெரியாமல் நம் தகவல்கள் திருடப்படுகின்றன. இந்தச் சூழலில் இணைய உலகில் பாதுகாப்பான முறையில் செயல்பாடுகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டதுதான் பிளாக்செயின்.
  • 2008-ம் ஆண்டு, சதோஷி நாக மோட்டோ,பிட்காயின் பரிவர்த்தனைக்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை உருவாக்கினார். ஆரம்ப காலத்தில் பிட்காயினில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், தற்போது நிதித்துறை, மருத்துவத்துறை என பல்வேறு தளங்களுக்கு விரிந்து கொண்டிருக்கின்றன.
  • பிளாக்செயின் என்பது தரவுகளை சேமிக்கக்கூடிய ஒரு லெட்ஜர். அதாவது கணக்குப்பதிவியல் விவரங்கள் போன்று அனைத்து கணக்குகளையும் உள்ளடக்கி இருப்பது போல் பிளாக்செயின் உருவாக்கப்பட்டு இருக்கும். இதில் அனைத்து தகவல்களும் இடம்பெற்று இருக்கும். பிளாக்செயினில் உள்ள ஒவ்வொரு தொகுதியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு தொடர் தொகுதியை உருவாக்குகிறது.
  • அக்கவுண்ட்ஸ் நோட்டுகளில் நாம் எழுதும் ஒவ்வொரு பக்கமும் முடிந்தவுடன் அடுத்த பக்கத்துக்கு சென்று கணக்கு எழுதுவோம் இல்லையா, அப்படித்தான் பிளாக்செயினும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொரு தொகுதி (பிளாக்ஸ்) என்று சொல்வார்கள். ஒவ்வொரு தொகுதியாக அடுத்தடுத்து உருவாக்கப்பட்டு இணைக்கப்படும். எப்படி இடையில் ஒரு கணக்கு புத்தகத்தில் ஒரு பக்கத்தை இணைக்க முடியாதோ, அப்படியே இணைத்தாலும் அது தொடர்ச்சியாக இருக்காது, தவறு தெரிந்துவிடும் இல்லையா, அதுபோலவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக ஒரு தொகுதி இணைக்கப்பட்டு கொண்டிருக்கும்போது, இடையில் ஒரு தொகுதியை சேர்க்க இயலாது. இதுபோல ஒரு தொகுதியாக உருவாக்கிவிட்டால் யாராலும் அதை ஹேக் செய்யவும் முடியாது.
  • ஒரு பணத்தை பாதியாக கிழித்து, ஒருவரிடம் ஒரு பாதியும், மற்றொருவரிடம் ஒரு பாதியும் இருக்குமாறு வைத்துக்கொள்வோம். இந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டுமென்றால், ஒருவரிடம் உள்ள பாதியையும், மற்றொருவரிடம் உள்ள பாதியையும் இணைத்து பிறகுதான் பயன்படுத்த முடியும். அதுபோலத்தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம், போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும்.
  • பிளாக்செயின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம்சென்றுவிடும். இடம் யாருக்கு சொந்தம், எப்போதுபரிமாற்றம் நடந்தது, போன்றவற்றை அதிநவீனகணினி மூலமாக அலசப்பட்டு, பரிமாற்றம் உறுதிசெய்யப்படும். தற்போது பிளாக் செயின் தொழில்நுட்பம்பல்வேறு பரிவர்த்தனை செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் ஹேக்கிங் உட்பட இணைய குற்றங்கள், மோசடிகள் குறைக்கப்படுகின்றன. முறையான பதிவு உருவாக்கம் மற்றும் கண்காணிப்புடன் கூடிய வெளிப்படையான செயல்முறைகளை இந்த தொழில்நுட்பம் உறுதிசெய்கிறது.
  • தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பிளாக்செயின் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிக சம்பளத்தை பெற வழிவகை செய்கின்றன.
  • அந்த வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் உலக அளவில் பிளாக்செயின் தொழில்நுட்பம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories