TNPSC Thervupettagam

பிளாஸ்டிக் ஒழிப்பு: மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்!

October 29 , 2019 1854 days 1966 0
  • பிளாஸ்டிக் அரக்கனின் அட்டகாசத்தை இந்தத் தொடர் முழுவதும் பார்த்தோம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.
  • நம்மில் வியாபித்துக் கிடக்கும் பிளாஸ்டிக்கை, அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாதுதான். மருத்துவம், வணிகம், அறிவியல் உள்ளிட்டவற்றில் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதும் பிளாஸ்டிக்கே. எனினும் அதன் குறைந்த எடை, மலிவு விலை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களே அதன் தாராளப் பயன்பாட்டுக்குக் காரணமாகி இயற்கையை அழித்து வருகிறது.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் எளிதான மாற்றுப் பொருட்கள் கிடைக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றை, நாம் மனது வைத்தால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.

அன்றாட வாழ்க்கையில்...

  • பழங்கள், காய்கறி, பூக்கடைக்குச் செல்லும்போது துணிப் பைகளைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பை என்றில்லை, இப்போதெல்லாம் விதவித டிசைன்களில் நவீன வடிவங்களில் பைகள் வந்துவிட்டன.
  • இவை குறைந்த எடையில் நீடித்த உழைப்பைக் கொடுக்கும். சணல் பைகள் சற்றே விலை உயர்வு என்றாலும் பல முறை பயன் தரும். 90-களில் அதிகம் புழக்கத்தில் இருந்த. நீண்ட வருடங்களுக்குப் பயன்படுத்த முடிகிற ஒயர் கூடைகளை வாங்கலாம்.
  • எடை குறைவான பொருட்கள் வாங்குமிடங்களில் (ஃபேன்சி ஸ்டோர், மருந்தகங்கள்) பிரவுன் காகித உறைகளைப் பயன்படுத்தலாம். சிறியதும் பெரியதுமான உறைகள், 5 கிலோ எடை வரை தாங்கும்.

உணவகம், மளிகைக்கடைகளில்...

  • வாழை இலை, தையல் இலை, பாக்கு மட்டை, சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். அரச இலை, ஆமணக்கு இலை, மந்தாரை இலை (தொன்னை) ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையும் வளர்ந்து வருகிறது.
  • முன்பெல்லாம் அடிவாழையின் பட்டைகளை ஒன்றாக வைத்துத் தைத்துப் பயன்படுத்தினர். வட இந்தியாவில் டிம்பர் (Sal) மற்றும் ஆலமர இலைகளில் இருந்து உணவுத் தட்டுகளை உருவாக்குகின்றனர்.
  • இட்லி, தோசை, சட்னி உள்ளிட்ட வகைகளை வாழை இலையில் கட்டித் தரலாம். பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பார்சல் வாங்கச் செல்வதால், சாம்பார் வகைகளுக்கு மட்டுமாவது பாத்திரத்தை எடுத்துச்செல்வது நல்லது.
  • மளிகைக்கடைகள் பேப்பர், அட்டை ஆகியவை மூலம் பொருட்களைக் கட்டித் தருவது எளிது. நுகர்வோர்கள் கூடைகள் அல்லது கட்டப்பைகளை எடுத்துச்சென்று பொருட்களை வாங்கலாம். பேக்கிங் செலவும் மிச்சமாகும்.

சூப்பர் மார்க்கெட்டுகளில்...

  • சூப்பர் மார்க்கெட்டுகள், தங்கள் பொருட்களை அமுல் பட்டர் காகிதங்களில் பேக் செய்து விற்கலாம். அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை நவீன வடிவங்களில் வரும் தகர டின்களில் பேக் செய்து கொடுக்கலாம்.
  • காகித அட்டைகளில் (கேக் வைத்துத் தரப்படும் அட்டைகள்) பிளாஸ்டிக் பூச்சு இல்லாமல் நிரப்பித் தரலாம். பால், எண்ணெய் உள்ளிட்ட திரவப் பொருட்களை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யலாம்.
  • வாடிக்கையாளர்கள் அதே பாட்டிலுடன் மீண்டும் வாங்கும்போது விலையைக் குறைக்கலாம். பாத்திரம் கொண்டு வந்தாலும் குறைந்த விலை என்று அறிவிக்கலாம்.

உணவுப்பழக்கத்தில்...

  • கெட்டுப்போகாத வண்ணம் பேக்கிங் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மாற்று கிடைக்கும் வரை பிளாஸ்டிக் இருக்கும். உணவுமுறை மாற்றமும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும்.
  • இயற்கை உணவுகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என பழமையை நோக்கித் திரும்பும் நாம், இதிலும் நம் மூத்தோர்களின் நடைமுறையைக் கடைபிடிப்பது எளிதுதான்.
  • விரைவில் மட்கும் பயோபிளாஸ்டிக்குகள் என்று சந்தைக்கு வரும் பிளாஸ்டிக்குகளும் இயற்கையான சூழலில் மட்குவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
  • அவற்றின் மட்கும் தன்மை உறுதிப்படுத்தப்படும் வரை, அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

குப்பை மேலாண்மையில்...

  • வீடுகளிலும் அலுவலகங்களிலும் மற்றும் குப்பைகள் அதிகமாகச் சேகரமாகும் இடங்களிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் இருக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்துப்போட வேண்டும்.
  • நகராட்சியும் இதை முறையாகக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளைப் பரவலாக்க வேண்டும். மட்கும் குப்பைகள், காய்கறிக் கழிவுகள், இலை, தழைகள், வீட்டுக்கழிவுகளை அரைக்கும் சிறு இயந்திரம் நடைமுறைக்கு வரவேண்டும்.
  • இதன்மூலம் குப்பை அள்ளுபவர்களே அவற்றைப் பொடியாக்கி வீடுகளுக்கு, பண்ணைகளுக்கு உரமாகத் தரலாம்.

வீட்டு விழாக்களில்...

  • நெகிழி இல்லா திருப்பூர்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும் ‘ட்ரீம் 20’ பசுமை அமைப்பு சில முக்கியமான முன்னெடுப்புகளைச் செயல்படுத்திவருகிறது.
  • அவர்கள் விழாக்களில், காபி, தேநீர் கொடுக்க எவர்சில்வர் டம்ளர்களைப் பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள். பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட அபாயங்களைப் படங்களுடன் கூடிய விழிப்புணர்வுப் பதாகைகள் கொண்டு விளக்குகின்றனர். ஐஸ்கிரீம், பழச்சாறு, இனிப்புகள் வழங்கக் கரும்புச் சக்கையால் செய்யப்பட்ட கப், டம்ளர்களையும் மரக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

பேனர்களில்...

  • டிஜிட்டல் அச்சுத் தொழிலுக்கான மூலப் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. டிஜிட்டல் பேனர்கள், ஒரு சதுர அடிக்கு சுமார் 9- 10 ரூபாய் என்ற அளவில் விற்பனை ஆகின்றன. இதற்கும் மாற்று உண்டு.
  • இடைவெளியே இல்லாத காடாத் துணி மூலம் பேனர் செய்யலாம். இதன்மூலம் அடர்த்தியாக அச்சிடமுடியும். காட்டன் பேனர்கள் சற்றே விலை அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தினால், விலை குறையும். துணிகளில் எழுதி, வரைந்து வாங்கலாம். அதுசார்ந்த தொழிலாளர்களும் பயன்பெறுவர். அவற்றை மீண்டும் மீண்டும் வரைந்து பயன்படுத்தலாம்.

பள்ளிகளில்...

  • குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுபவை நல்ல விளைச்சலைத் தரவல்லது. திருப்பூரில் இதுவரை 150-க்கு மேற்பட்ட பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து வாரத்துக்கு இருமுறை பிளாஸ்டிக் கழிவுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இதன் மூலமாக 45 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பெறப்பட்டுள்ளதாம்.
  • மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அதிகக் கழிவுகள் அளிக்கும் வகுப்புக்கு விதை பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள், மண் குவளைகளைப் பரிசாக அளிக்கின்றனர். மாணவர்களுக்கு இதுவரை 1 லட்சம் துணிப் பைகளை விநியோகித்துள்ளனர்.
  • மற்றவர்களிடம் இருந்து சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கும், சுழற்சி செய்யமுடியாதவற்றை சிமெண்ட் ஃபேக்டரிகளுக்கும் அளித்துவிடுகின்றனர். அங்கே 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிளாஸ்டிக்கை எரிப்பது, சூழலுக்கோ நமக்கோ கேடு விளைவிக்காது என்கின்றனர். இதன்மூலம் திருப்பூரில் நாளொன்றுக்கு உருவாகும் 120 டன்கள் குப்பை, 50 டன்களாகக் குறைந்துள்ளது.
  • வண்டி, ஹேண்ட்பேகுகளில் எப்போதும் ஒரு துணிப்பை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 10 ரூபாய்க்கு வாங்கும் துணிப்பைகளை குறைந்தது 150 முறை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

விளையாட்டுப் பொருட்களில்...

  • குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மூலமாக நம் வீடுகளுக்கு வந்துசேரும் பிளாஸ்டிக்குகள் ஏராளம். இப்போதெல்லாம் பெரும்பாலான பொம்மைகள் பிளாஸ்டிக் பொருட்களால்தான் செய்யப்படுகின்றன. உடைந்த, நசுங்கிய பொம்மை, விளையாட்டுப் பொருட்களைத் தூக்கி குப்பையில்தான் போடுகிறோம். இதிலிருந்து நாம் மீள்வதற்கு ஒரே வழி, பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதுதான். மண் பொம்மைகள், மரப்பாச்சிகள், கோலிக்குண்டு, மர பம்பரம், மூங்கில் வேலைப்பாடுகளால் அமைந்த கைவினைப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.
  • ஸ்மார்ட் போனை மறுசுழற்சிக்கு உட்படுத்தவே மிக அதிக செலவாகும். அவற்றை வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, இயற்கையோடு இயைந்து விளையாடச் சொல்லலாம். இதன்மூலம் உடல்நலனும் மேம்படும்.

என்னதான் தீர்வு?

  • மக்கள் பிளாஸ்டிக் கவர்கள், பைகள், உறிஞ்சுகுழல்கள், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
  • அரசுகள் குப்பைகளைச் சேகரித்து அவற்றை மறு சுழற்சி செய்யும் முறையை சீராகவும் வலிமையாகவும் மாற்ற வேண்டும். இதன்மூலம் தேவையற்ற கழிவுகளும் குப்பைகளும் நிலங்களில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மேம்படும்.
  • ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக்கை முழுமையாக சிதைவுக்கு உட்படுத்தி, மறுசுழற்சி செய்து புதிய பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்க வழிவகை செய்யவேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத மாற்றுப் பொருளைக் கண்டறிய வேண்டும்.
  • மக்கள் இயக்கங்களின் மூலம் அவர்களின் ஆதார குணங்களில் ஏற்படும் மாற்றத்தையே அதிகம் நம்பினார் தேசப்பிதா காந்தி. இந்தியா, சீனா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில், அரசால் மட்டுமே எதையும் முழுமையாகச் செய்துவிட முடியாது. மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்.
  • பல்லாயிரம் மைல் பயணம் ஓர் அடியில்தான் தொடங்குகிறது; அந்த முதல் அடியை இன்றே... இப்போதே.. எடுத்துவைப்போம்!
  • சராசரியாக 113 கிராம் எடை கொண்ட செல்போனை எப்போதும் சுமக்கும் நம்மால், 50 கிராம் எடை கொண்ட துணிப் பையை எடுத்துச்செல்ல முடியாதா என்ன?

நன்றி: இந்து தமிழ் திசை (29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories