TNPSC Thervupettagam

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் என்னதான் சிக்கல்?

October 17 , 2019 1861 days 1616 0
  • ஆரம்ப காலத்தில் நீடித்த உழைப்புக்காகவே பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்ட பின் அதன் நோக்கமே சிதைந்துபோனது.
  • இவை பெருமளவில் சந்தைகளில் களமிறங்கிய பிறகுதான், பிளாஸ்டிக்கின் அபாயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. பிறகுதான், அன்றாடம் குப்பைக்குச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளெல்லாம் மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டியது மிகவும் தலையாய பிரச்சினையாக உருவானது.
  • நமது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் கழிவுகளில் 80.28%-ஐ சேகரிப்பதாக 2014-ல் கூறியிருந்தது. அதிலும் 28.4% கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ளவை பூமியை மாசுபடுத்திக்கொண்டிருக்கின்றன.
மறுசுழற்சியின் போதாமை
  • பொதுவாக, பிளாஸ்டிக்கை சிறுசிறு துண்டுகளாக்கி, உருக்கி, வார்த்து புதிய பிளாஸ்டிக் தயாரிக்கும் நடைமுறை வழக்கத்தில் உண்டு. ஆனால், ஆரம்ப நிலையிலேயே பிளாஸ்டிக்கின் நெகிழ்வுத் தன்மையையும் உறுதியையும் கூட்டுவதற்காகச் சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
  • இந்த வேதிப்பொருட்களால் பிளாஸ்டிக்கின் மறுசுழற்சி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மறுசுழற்சிக்கு உட்படுத்தி உருவாக்கப்படும் பிளாஸ்டிக்கின் தரமும் குறைந்துவிடுகிறது.
  • அழகுக்காக வண்ணங்களைச் சேர்ப்பதுகூட இத்தகைய அபாயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனாலேயே ஜப்பானில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வண்ணங்கள் சேர்க்கப்படுவதில்லை.
  • இதுபோல, பிளாஸ்டிக் தொடர்பான நடவடிக்கைகளில் உலகமெங்கும் பல முன்னுதாரணமான நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருக்கிறது. நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளம் இருக்கின்றன.
  • ‘பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் செயலிலும், தூக்கிக் வீசும் செயலிலும் ஈடுபடுகிறார்கள்.
  • பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிவதற்கும் இதுதான் காரணம்’ என்கிறார் பிளைமவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் வேக்னர்.
  • எந்த ஒரு கழிவு மேலாண்மையிலும் நான்கு படிநிலைகள் உள்ளன. பயன்பாட்டைக் குறைப்பது, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, மறுசுழற்சி செய்வது, மற்ற ஆற்றல் வடிவங்களுக்கு மாற்றுவது. இது பிளாஸ்டிக்குக்கும் பொருந்தும். ஆனால், அது தொடர்பாக நம் கழிவு மேலாண்மை என்னவாக இருக்கிறது என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.
அடுத்தகட்ட ஆய்வுகள்
  • மறுசுழற்சியின்போது அடிப்படை மூலக்கூறுகளாக மாறாத பாலிமர்களை, வேதியியல் முறையில் நுண்ணிய மூலக்கூறுகளாக உடைத்து, அவற்றை எரிபொருளாகவோ அல்லது மருந்துப் பொருட்களாகவோ பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
  • அது மட்டுமல்லாமல், அதிக வேதிப் பொருட்கள் தேவைப்படாத வகையில், மறுசுழற்சி செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுவருகின்றனர்.
  • இதன் மூலம் மறுசுழற்சிக்கான செலவு குறையும்; தேவையும் குறையும். குறிப்பிட்ட சில வகை பிளாஸ்டிக்குகளை பாக்டீரியாக்கள் மற்றும் நொதித்தல் மூலம் மறுசுழற்சி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • எனினும், அவற்றின் மூலம் பசுமை இல்ல வாயு வெளியேறுவது போன்ற உபவிளைவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
பிளாஸ்டிக் சாலைகள்
  • பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகள் அமைப்பதற்காகப் பயன்படுத்தும் யோசனையானது மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. பிளாஸ்டிக் சாலைகள் உருவாக்கும் வேலையில் இந்தியா இறங்கியது ஒரு ஆக்கபூர்வமான முன்னெடுப்புதான்.
  • தேசிய ஊரக சாலை வளர்ச்சி மையம், 2015-16ல் 7,500 கிமீ நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகளை உருவாக்கியது.
  • 2002-ல் இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் சாலைகளில் ஒன்றாக சென்னையிலுள்ள ஜம்புலிங்கம் தெரு மாறியது நினைவிருக்கிறதா?

நன்றி: இந்து தமிழ் திசை (17-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories