- எல்கர் பரிஷத்-பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நாக்பூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் செயல்பாட்டா ளருமான ஷோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது மனித உரிமை ஆர்வலர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. பீமா கோரேகான் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1 அன்று நடத்தப்பட்டது. அப்போது வெடித்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
- இதற்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட எல்கர் பரிஷத் கூட்டத்தில் ஆற்றப்பட்ட சர்ச்சைக்குரிய உரைகளே இந்த வன்முறையைத் தூண்டிய தாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து தீவிரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டி, ஷோமா சென் உள்பட ஒன்பது பேரை புணே காவல் துறை கைதுசெய்தது.
- 2020இல் இந்த வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்ட பிறகு மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியினர் உரிமைகள் செயல்பாட்டாளரும் பாதிரியாருமான ஸ்டான் சுவாமியின் (83) பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2021 ஜூலையில் அவர் உயிரிழந்தார்.
- அதற்குப் பிறகு, இந்த வழக்கில் இதுவரை எட்டுப் பேருக்குப் பிணை கிடைத்துள்ளது. இதில் இருவருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து என்ஐஏ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால் அவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். 2018 டிசம்பரில் புணே அமர்வு நீதிமன்றத்தில் சென் தாக்கல் செய்த பிணை மனு 2019இல் நிராகரிக்கப்பட்டது. பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் அவருக்குப் பிணை கிடைக்கவில்லை. இந்நிலையில், 2023இல் சென் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
- இந்த மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனிருத்த போஸ், அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு, சென்னுக்கு எதிராக என்ஐஏ தாக்கல் செய்த ஆதாரங்கள், அவர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கோ, அவற்றுக்கான சதித் திட்டங்களில் பங்கேற்றதற்கோ அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கருத இடமளிக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளிடமிருந்து அவர் பணம் பெற்றதை உறுதிசெய்யும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
- சென் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா சட்டம்) 1967இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிணை வழங்குவதைத் தடுக்கும் பிரிவுகளை உள்ளடக்கியது. ஆனாலும் கைது செய்யப்பட்டவர் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்ட நிலையில், அவரது பிணை உரிமையே முதன்மை பெறுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளது முக்கியமானது.
- பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைவர் மீதும் தேசத்துக்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்களைச் சிறையில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. எனவே, பிணை வழங்குவதைக் கடுமையாக எதிர்க்கின்றன.
- அதே நேரம், வலுவான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில், அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல்செய்து குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பணியை என்ஐஏ இனிமேலும் தாமதிக்கக் கூடாது. குற்றச்சாட்டுகள் எவ்வளவு கடுமையாக இருப்பினும், அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இன்றி ஆண்டுக் கணக்கில் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைத்து வைக்கப்படுவது மனித உரிமைக்கும் இந்திய நீதி அமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கும் எதிரானது என்பதை விசாரணை அமைப்புகள் உணர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 04 – 2024)