புக்கர் நெடும்பட்டியலில் கன்னட பெண் எழுத்தாளர்
- முதன் முறையாக ஒரு கன்னட எழுத்தாளரின் புத்தகம் சர்வதேச புக்கர் பரிசு நெடும்பட்டியலுக்குத் தேர்வாகி உள்ளது. பானு முஷ்டாக் (76) எழுதிய ஹார்ட் லேம்ப் (இதய விளக்கு) என்கிற சிறுகதைத் தொகுப்பே அந்த நூல். இந்தத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தீபா பாஸ்தி. இவர் தி இங்கிலிஷ் பென் விருதை 2024இல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடிப்படையில் வழக்குரைஞரான பானு, ஓர் அரசியலர், சமூகச் செயற்பாட்டாளரும்கூட. தொடக்கக் காலத்தில் 'லங்கேஷ் பத்ரிகே' எனும் இதழில் செய்தியாளராக இவர் இருந்துள்ளார் (கௌரி லங்கேஷின் தந்தை நடத்திய பத்திரிகை). 1990இல் பத்திரிகைப் பணியிலிருந்து விலகிய பானு வழக் குரைஞராகச் செயல்படத் தொடங்கினார். கன்னட இலக்கியத்தில் சமூக, பொருளாதார நீதிக்கான பந்தாய இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய பானு, 60 ஆண்டுகளாக எழுதிவருகிறார்.
- கன்னட இலக்கிய உலகில் தனது கதைகள் மூலம் இஸ்லாமியக் குடும்பங்களில் தங்கள் உரிமைகள், அடையாளத்துக்காகப் பெண் கதா பாத்திரங்கள் போராடுவது இவருடைய கதைகளின் மையமாக இருந்திருக்கிறது. 2000இல் இவர் வெளியிட்ட 'பெங்கி மழே' நூலுக்காக இஸ்லாமியச் சமூகத்தினரால் விமர்சனத்துக்கு உள்ளானார். மசூதிகளில் வழிபடப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று அவர் கூறியதே காரணம்.
- ஹெஜ்ஜே மூடித ஹாதி, எதய ஹனதே, சஃபீரா, ஹசீனாமட்டு இதர கதேகளு, ஹென்னு ஹத்தினா ஸ்வயம்வரா போன் றவை அவருடைய குறிப்பிடத் தக்க புத்தகங்கள். அவருடைய கதைகள் தமிழ், மலையாளம், பஞ்சாபி, உருது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. 1999இல் கன்னட மாநில சாகித்ய அகாடமி விரு தைப் பெற்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2025)