TNPSC Thervupettagam

புக்கர் பரிசு 2023: நினைவுகளின் அரசியல்

June 11 , 2023 580 days 433 0
  • ஜோர்ஜி காஸ்படினவின் ‘டைம் ஷெல்டர்’ (Time Shelter) 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இந்த நாவல் ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி வெல்ஸின் ‘கால எந்திரத்’தை (Time Machine) நினைவுக்குக் கொண்டுவரக்கூடும். ஆனால், இவ்விரண்டுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. ‘கால எந்திரம்’ எதிர்காலத்தை மையப்படுத்துகிறது. ‘டைம் ஷெல்டர்’ கடந்தகாலத்தை மையப்படுத்துகிறது.
  • கடந்தகாலம், அது சார்ந்த நினைவுகள், அந்த நினைவுகளையொட்டிய நிகழ்வுகள் – இவையெல்லாம் இணைந்த ‘டைம் ஷெல்டர்’ பல்கேரிய மொழியிலிருந்து ஏஞ்செலா ரோடெலால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.ஐந்து பாகங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் பாகத்தின், முதல் அத்தியாயத்திலேயே காலத்தைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவலொன்றை முன்வைக்கிறார் ஜோர்ஜி காஸ்படினவ்: ‘காலம் எப்போது தொடங்கியது என்பதைக் கணிக்க முற்பட்டார்கள். பதினேழாம் நூற்றாண்டு மத்தியில், அயர்லாந்தைச் சேர்ந்த உஷர் என்ற பாதிரியார் காலம் தொடங்கியது கி.மு. 4004 ஆண்டு என்றார். தேதி அக்டோபர் 22 என்றும் குறிப்பிட்டார்.. அது ஒரு சனிக்கிழமை. அன்று பிற்பகல் ஆறு மணிவாக்கில்தான் அது நடந்திருக்கிறது’.
  • ஆனால், இதுபோன்ற காலக் கணக்கீட்டு முயற்சிகளை நம்பலாம் – நம்பாமலும் விட்டுவிடலாம். ஒன்று மட்டும் நிச்சயம்: மனிதநேயக் காலம் என்பது செப்டம்பர் 1, 1939 முடிவுக்கு வந்துவிட்டது. ஏனென்றால், அன்றுதான் பலகோடி மக்களைப் பலிகொண்ட இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந் நாவலின் இரண்டு கதை சொல்லிகளில் ஒருவர் நூலாசிரியர். மற்றவர், அவர் படைத்த கதாபாத்திரம் காஸ்டின். இரண்டு கதைசொல்லிகள் இருப்பினும், கதையில் குழப்பம் ஏற்படாமலிருப்பது நாவலின் சிறப்பு.

அல்சைமர் நோய்

  • முழு நாவலும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக காஸ்டின் என்பவரால் ஸ்விட்சர்லாந்தில், குறிப்பாக ஜூரிக் நகரில், நிறுவப்பட்ட ஒரு மருத்துவமனையை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. அல்சைமர் நோயாளிகளுக்கும் மற்றவர் களுக்கும் இடையேயான வேறுபாடு திட்டவட்டமானது: “காஸ்டின் கருத்துப்படி, நமக்கெல்லாம் கடந்த காலம் என்றால் கடந்த காலம்தான். அதனுள் நாம் புகுந்துவிட்டால் நமக்கெல்லாம் நிகழ்காலத்துக்குத் திரும்பும் வழி தெரியும். அது திறந்தே இருக்கும். ஆகவே, நாம் சுலபமாக வெளியில் வந்துவிடலாம். ஆனால், நினைவாற்றலை இழந்தவர்களுக்கு, மூடிய கதவு மூடியதாகவே இருக்கும். அவர்களுக்கு நிகழ்காலம் ஓர் அந்நிய தேசம். கடந்தகாலம்தான் அவர்களின் தாயகம்”(பகுதி 1, அத் 11).

அல்சைமர் மருத்துவமனை

  • அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் திட்டம் புதுமையானது; விசித்திரமானது. மருத்துவமனையின் ஒவ்வொரு தளமும் - ஒவ்வோர் அறையும் - ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கும். 20 ஆம் நூற்றாண்டைப் பத்துப் பத்து ஆண்டுகளாகப் பிரித்து, அந்தந்தக் காலகட்டத்துக்குரிய கலைப் பொருள்களும் புகைப்படங்களும் இசைத்தட்டுகளும் வரலாற்றுச் சின்னங்களும் கிடைக்கும்படிச் செய்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த விதமான செருப்பு அல்லது உடை பயன்படுத்தப்பட்டது என்பதற்கெல்லாம் அங்கு மாதிரிகள் இருந்தன. அவையெல்லாம் நோயாளிகள் மறந்துவிட்ட பொற்கால நினைவுகளுக்குப் புத்துயிரூட்டி, அவர்களுக்கு உளவியல் ரீதியாக மன நிம்மதியை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையை அளிக்கும். மறதியின் காரணமாகப் பேசாதிருந்தவர்களைப் பேசவைக்கும்.
  • நாளடைவில், இதுபோன்ற அமைப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. அல்சைமர் நோயால் பாதிக்கப் படாதவர்கள்கூடத் தற்காலிகமாக அங்கு வந்து தங்கி ஆறுதல் பெற்றுச் சென்றனர். பின்னர், அமைப்பு விரிவடைகிறது. முதலில் ஒவ்வொரு பெருநகரிலும், பின்னர் நாட்டின் அனைத்து ஊர்களிலும் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றைத் தொடர்ந்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும்கூட அதுபோன்ற மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

எல்லை மீறல்கள்

  • மெல்ல மெல்ல, கடந்த காலமானது நிகழ்காலத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடுகிறது. காலகாப்பிடங்களை (Time Shelter) மாதிரிப் படிவங்களாகக் கொண்டு, நாடுகளின் வரலாற்றையும் எழுத முற்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தைப் பொற்காலமாகக் கொண்டாடுகிறார்கள். அப்பொற்காலத்தைப் புதுப்பிக்க விரும்புகிறார்கள். ஒவ்வோர் அரசியல் கட்சியும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பொற்காலமாக முன்னிலைப் படுத்த முற்படுகிறது. இதனால், குழப்பங்கள் ஏற்படுகின்றன.
  • இங்கு, நாவலின் மறுபக்கத்தைப் பார்க்க முடிகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் கடந்த காலத்தில் தனக்குப் பிடித்த காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்து பழமையில் மூழ்கிச் சுகம் காண முற்பட்டால், எதிர்காலம் பற்றிய ஒருங்கிணைந்த திட்டங்களுக்கு வாய்ப்பில்லாமல் போகக்கூடிய ஆபத்து உருவாகிறது. மேலும், வெவ்வேறு காலகட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் நாடுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் ஆபத்தும் உருவாகிறது.
  • டைம் ஷெல்டர்’ பின் நவீனத்துவ பாணியில் எழுதப் பட்ட நாவல். கதாபாத்திரங்கள் சரியாக வரையறுக்கப்படவில்லை. மேலும், முடிவு வாசகர்கள் பொறுப்பில் விடப்படுகிறது. “நான் என் கதாபாத்திரங்களைச் சாகடிக்க விரும்பவில்லை. அவர்கள் தங்கள் கதைகளையும் மற்றவர்கள் கதைகளையும் சொல்லத் தூண்டுகிறேன். அப்படிக் கதைகள் சொல்லும் வரை உயிருடன்தான் இருக்கிறார்கள்” என்று நாவலாசிரியர் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
  • எப்படி இருப்பினும், கடந்த காலமானது மனித இனத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஜோர்ஜி காஸ்படினவ் ஓர் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறார். அதுமட்டுமன்றி இந்நாவலில் சொல்லப்படும் கதைகள் வழியே பல்கேரியாவின் வரலாற்றையும் அறிய முடிகிறது. ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்திடம் நட்புறவிலிருந்த பல்கேரியா 1980 – 90களில் சோவியத் அமைப்பு சிதறியபின், காலம் தாழ்த்தாமல் மேற்கத்திய நாடுகளிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டது. நாட்டோவில் சேர்ந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாகி விட்டது.
  • அத்துடன், நாவலில் பொருள் பொதிந்த பல குறிப்புகள் ஆங்காங்கே தென்படுகின்றன. தாமஸ் மான், டால்ஸ்டாய், புரூஸ்த், ஹெமிங்வே, போர்ஹேஸ் போன்ற மாபெரும் இலக்கிய மேதைகளின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. ஆகவே, இந்நாவல் அறிவுஜீவிகளுக்கு ஓர் அற்புதமான பொக்கிஷமாகும்.

நன்றி: தி இந்து (11 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories