புண்ணிய நதிகளின் புகலிடம் - மகாமக குளம்
- கும்பகோணம் என்கிற பெயரைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கோயில்கள், மகாமகம் குளம், வெற்றிலை, தற்சமயம் எல்லோராலும் பேசப்படும் டிகிரி காபி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கலை, கலாச்சாரம், பண்பாடு, விவசாயம், ஆன்மிகம் போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஓர் ஆன்மிக புண்ணிய பூமி தான் கோயில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணம் (குடமூக்கு திருக்குடந்தை).
- பூ வணத்தவன் புண்ணியன்
- நண்ணி அங்கு
- ஆவணத்து உடையான்
- அடியார்களை
- தீ வணத் திருநீறு மெய்பூசியோர்
- கோவணத்து உடையான்
- குடமூக்கிலே.
- என திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் கும்பகோணம் கும்பேசுவரர் சுவாமி பற்றி பாடியுள்ளார். இந்த நகரை அவர் ‘குடமூக்கு’ என்றே அழைத்துள்ளார். ‘காவேரிக்கரை குடந்தை’ என திருமழிசையாழ்வார், ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்யும் பாடலில் இந்நகரைப் பற்றிப் பாடியுள்ளார். ஏழு ஆழ்வார்களும் திருக்குடந்தையில் வீற்றிருக்கும் ஆராவமுதனைப் (சாரங்கபாணி) பற்றி பாடியுள்ளனர்.
- இப்படி சைவ, வைணவ அருளாளர்கள் பாடி புகழ் சேர்த்த கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில், பெரிய சரிவக வடிவில் 16 மண்டபங்களும், 20 தீர்த்தங்களும் கொண்ட பெரிய குளம் தான் மகாமககுளம். சேக்கிழார் பெருமான்,
- பூமருவும் கங்கை முதல் புனிதமாம்
- பெருந்தீர்த்தம்
- மாமகந்தான் ஆடுவதற்கு வந்து
- வழி படுங்கோவில்
- என பெரிய புராணத்தில் இக்குளத்தைப் பற்றி பாடியுள்ளார்.
- வரலாற்று சிறப்பும், தெய்வீகத் தன்மையும் கொண்ட இக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதம் பௌர்ணமி நன்நாளில் சூரியனும், சந்திரனும் எதிரெதிராக வரும் நாளில் மகம் நட்சத்திரம் கூடிய தினத்தில், பிரசித்தி பெற்ற மாசிமகப் பெருவிழா நடக்கும். வடநாட்டில் சமீபத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா எப்படி சீரும், சிறப்புமாய் நடைபெற்றதோ அதேபோன்று தென் நாட்டில் தமிழகத்தில் இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா கோலாகலமாக நடக்கும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று இங்குள்ள 12 சைவ கோயில்களிலும், 7 வைணவ கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுண்டு.
- கங்கை முதலான ஒன்பது நதிகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களைத் தீர்க்கும் வகையில் மகாமகத் திருநாளில் இங்கு வந்து நீராடி தத்தமது பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். பவிஷ்யோத்ர புராணத்தில்,
-
- “அன்ய க் ஷேத்ரே க்ருதம்
- பாபம் புண்ய க் ஷேத்ரே வினச்யதி
- புண்யக் ஷேத்ரே க்ருதம் பாபம்
- வாராணஸ்யாம் வினச்யதி
- வாராணஸ்யாம் க்ருதம் பாபம்
- கும்பகோணே வினச்யதி
- கும்பகோணே க்ருதம் பாபம்
- கும்பகோணே வினச்யதி”
- ஒரு ஸ்லோகம் கும்பகோணம் (ஸ்வயம் வ்யக்தத்தலம்) பற்றி சொல்லப்பட்டுள்ளது.
- மகாமக குளத்தின் பெருமையும் அங்கு புனித நீராடுவதால் பாவங்கள் தொலைகிறது என்கிற பொருளில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபநாச முதலியார் இயற்றிய ‘கும்பேசர் குறவஞ்சியில்’ ஒரு பாடல் உண்டு. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, கோதாவரி, கன்யா, பயோஷ்ணி, சரயு ஆகிய ஒன்பது நதிகளுக்கும் புகலிடமான மகாமக குளம் விளங்குகிறது.
- இப்புண்ணிய குளத்தின் திருப்பணிகளை செய்து அழகுபடுத்தியவர் கோவிந்த தீட்சிதர் என்பவர். இவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் (1560 & 1600 ஆட்சி) தலைமை அமைச்சராக இருந்தவர். புண்ணிய தீர்த்த நீராடலைச் செய்வதன் மூலம் நம்முடைய தீவினைகள் யாவும் அகலும் என்பது ஆன்றோர் வாக்கு.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)