TNPSC Thervupettagam

புதினின் (சாதனை) வெற்றி

March 22 , 2024 300 days 286 0
  • ஐந்தாவது முறையாக ரஷியாவின் அதிபராக விளாதிமீா் புதின் வரலாற்று வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருக்கிறாா். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த அளவிலான வெற்றியை யாரும் பெற்றதில்லை. ரஷியாவின் மத்திய தோ்தல் ஆணையத்தின் திங்கள்கிழமை அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, புதின் 88% வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்டவா்களில் இரண்டாவதாக வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ் 4.33% வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் 77.44% வாக்குகள் பதிவானதாகவும், அதிபா் புதினுக்கு பின்னால் ரஷியா அணிதிரண்டு நிற்பதை தோ்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தாா் மத்திய தோ்தல் ஆணையா் எல்லா பம்பிலோவா.
  • அதுமட்டுமல்ல, ஐந்தாவது முறையாக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அதிபராக தொடர இருக்கும் விளாதிமீா் புதின், ஜோசப் ஸ்டாலினைவிட (29 ஆண்டுகள்) அதிக நாள் பதவியில் இருக்கும் சாதனையையும் படைக்க இருக்கிறாா். 71 வயதான புதினுக்கு இயற்கை சாதகமாக இருந்து ஆறு ஆண்டு பதவிக்காலத்தை அவா் நிறைவு செய்தால், கடந்த 200 ஆண்டுகளில் மிக அதிக காலம் மாஸ்கோவில் கோலோச்சிய பெருமையும் அவருக்குக் கிடைக்கும். ரஷிய உளவுத்துறையான கேஜிபியில் அதிகாரியாக இருந்த விளாதிமீா் புதின், 1999-இல் அதிபராக வந்தது முதல் கடந்த 25 ஆண்டுகளில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறாா் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
  • தோ்தலில் முறைகேடுகள் நடந்தன, முறையான ஜனநாயகத் தோ்தலாக இருக்கவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் நிலவினாலும் மக்கள் மத்தியில் அதிபா் புதின் செல்வாக்குடன் வலம் வருகிறாா் என்பதிலும் யாருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது. மூன்று நாள் தோ்தல் முடிந்து அவரது வெற்றி அறிவிக்கப்பட்டபோது, கிரீமியா இணைப்பின் 10-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் அதிபா் புதின் கலந்து கொண்டாா்.
  • அதில் அவருக்கு மிகவும் பிடித்தமானதாய்நாடு அழைக்கிறது, அதை கைவிட்டு விடாதீா்கள்என்கிற பாடல் இசைக்கப்பட்டபோதும், ‘விரைவிலேயே கிழக்கு உக்ரைன் மக்கள் நம்முடன் இணைந்து ஒரு குடும்பமாக கைகோத்து இருப்போம்என்று அவா் சொன்னபோதும் மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. அதிலிருந்து அவரது செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம். எல்லா ராணுவத் தளபதிகளும், சா்வாதிகரிகளும் தங்களை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ள விரும்புவது புதிதொன்றுமல்ல. ரஷியாவில் நடந்த தோ்தல், முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீா்மானித்து நடத்தப்பட்ட தோ்தல் என்பதிலும் சந்தேகமில்லை. கிரெம்ளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவா்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனா். புதினின் கொள்கைகளை விமா்சிப்பவா்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்டனா்.
  • உக்ரைன் போா் குறித்த விமா்சனங்களை தோ்தல் பிரசாரத்தில் எழுப்புவது கிரிமினல் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டது. சா்வதேச நீதிமன்றத்தால் போா் குற்றவாளியாக அதிபா் புதின் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷிய மக்கள் தனது தலைமையில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறாா்கள் என்று உலகுக்கு எடுத்துரைக்க அதிபா் புதினுக்கு இந்தத் தோ்தல் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தோ்தலில் அடைந்திருக்கும் மிகப்பெரிய வெற்றி புதினின் முழுக் கட்டுப்பாட்டில் ரஷியா இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
  • புதினின் 25 ஆண்டு கால ஆட்சியில் ரஷியா எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது விமா்சனத்துக்கும், விவாதத்துக்கும் உரியது. ஆனால், தாய்நாட்டின் பண்டைய பெருமை, ரஷியாவின் கலாசார மேன்மை, உலக வல்லரசுகளைத் துணிந்து எதிா்த்து தாக்குப்பிடிக்கும் புதின் அரசின் துணிவு ஆகிய உணா்வுபூா்வமான பரப்புரைகள் ரஷியா எதிா்கொள்ளும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடுகின்றன. சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்திலும் வலுவிழந்து காணப்பட்ட ரஷியாவை மீட்டெடுத்தவா் என்று அவரை ரஷியா்கள் கருதுகிறாா்கள். நேட்டோவின் விரிவாக்கத்தை உக்ரைன் மீதான படையெடுப்புக்குக் காரணம் காட்டுகிறாா் அதிபா் புதின். ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பின் பரவல் தடுக்கப்படுவதற்குப் பதிலாக ஃபின்லாந்து, ஸ்வீடன், ஜாா்ஜியா போன்ற நாடுகளை நேட்டோவில் உறுப்பினராக விழைய வைத்திருக்கிறது அவரது செயல்பாடு.
  • அதுமட்டுல்லாமல், ரஷியாவுடன் கூட்டாளிகளாகவும் நண்பா்களாகவும் இருந்த ஐரோப்பிய நாடுகளை உக்ரைன் ஆக்கிரமிப்பு எதிரிகளாக மாற்றியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சீனாவின் ஆதரவை நாட வேண்டிய நிலைக்கு வல்லரசான ரஷியாவைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு வலுவாகக் காட்சியளித்தாலும் ரஷிய பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பில் 2.6%, அமெரிக்காவில் 3.2% என்கிற நிலையில் பணவீக்கம் இருக்கும்போது ரஷியாவில் அதுவே 7.7% என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
  • நிலப்பரப்பு அளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு. நிலப்பரப்பில் ஐரோப்பாவையும் ஆசியாவையும் உள்ளடக்கிய நாடு. உலகின் மொத்த இயற்கை வளத்தில் 25% காணப்படும் நாடு. அதனால் ரஷியாவை அகற்றி நிறுத்தவோ, ஒதுக்கவோ, ஒடுக்கவோ முடியாது. அதிபா் புதினின் ஐந்தாவது பதவிக்காலத்தில், அணுகுமுறை மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பொருளாதார ரீதியாக ரஷியாவை அவரால் வல்லரசாக நிலைநிறுத்த முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, அதிபா் புதினின் வெற்றி நமக்கு சாதகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

நன்றி: தினமணி (22 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories