புதிய அரசிடமிருந்து இலங்கை மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
- அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தெற்காசிய நாடுகளில் நேபாளத்துக்கு அடுத்ததாக, இலங்கையில் இடதுசாரிக் கட்சியின் தலைமையில் (ஜேவிபி) ஆட்சி அமைந்துள்ளது.
- இலங்கை வரலாற்றில், இதுவரை கண்டிராத அளவுக்கு 225 நாடாளுமன்றத் தொகுதிகளில் 159இல் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றிபெற்று, மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இடங்களைப் பிடித்ததும், ராஜபக்ச, சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்களை மக்கள் நிராகரித்ததும் நாம் அறிந்ததே. இன்றைய சூழலில், அநுர குமார அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேச வேண்டியது அவசியமாகிறது.
வெற்றியின் பின்னணி:
- கடந்த சில ஆண்டுகளில், அந்நியக் கடன் தவணைகளைக் கட்ட முடியாமல் இலங்கை அரசின் நிதி நிலைமை திவாலானது உண்மை. மூச்சு முட்டும் அந்நியக் கடன், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தினமும் 13 மணி நேர மின்வெட்டு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப் பொருள்கள், உரம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.
- நியூஸ் பிரின்ட் பற்றாக்குறையால் கல்வி நிலையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ராஜபக்ச அரசுக்கு எதிராக மக்களின் பேரெழுச்சி (அரகலய) ஏற்பட்டது. அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை விட்டே ஓடியது. இப்பின்னணியில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டியது. அதிலும் இம்முறை இலங்கை மக்கள் மதம், இனம், மொழி கடந்து வாக்களித்திருந்தார்கள்.
மக்களின் எதிர்பார்ப்பு:
- ‘ஒரு செழிப்பான தேசம், ஓர் அழகான வாழ்க்கை’ என்கிற முழக்கத்தை முன்வைத்து ஜேவிபி கட்சி தேர்தலைச் சந்தித்தது. ‘முந்தைய அரசு பன்னாட்டு நாணய நிதியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் தொடரும் என்றாலும், மக்களுக்குப் பாதகமான வரியைக் குறைத்திட முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றும், ‘அரசமைப்புச் சட்டத்தை விரைவாகத் திருத்தி, மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசியல், நிர்வாக அதிகாரத்தை வழங்கி, அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உத்தரவாதப்படுத்துவோம்’ எனவும் ஜேவிபியின் தேர்தல் அறிக்கை உறுதியளித்தது.
- இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதத்தினர் கிராமங்களில் வசித்துவருகின்றனர். ஒரு பகுதி மக்கள் நகரங்களில் வேலைசெய்தாலும், அவர்களின் வாழ்விடங்கள் கிராமங்களே. நாட்டின் மக்கள்தொகையில், பெரும்பகுதியினர் முறைசாராத் தொழிலாளர் குடும்பங்கள்.
- மலையகத் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தமிழர்களின் வறிய நிலை துயரமானது. மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ளதாக அரசின் அதிகாரபூர்வ மதிப்பீடு கூறுகிறது. ஆனால், அரசு போட்ட கோடு வறுமைக்கோடு அல்ல, அது பட்டினிக்கோடு. வறுமையில் உள்ளோர் எண்ணிக்கை அதைவிட அதிகம் என இலங்கைப் பொருளாதார வல்லுநர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும், இலங்கையில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் வறுமையில் வாடுவதாகவும் அந்த வல்லுநர் கூறுகிறார்.
எதிர்கொள்ளும் பிரச்சினை:
- பல தளங்களில் இலங்கை நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அரசு கடைப்பிடிக்கும் அரசியல் சமூகப் பொருளாதாரக் கொள்கை உள்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையானது என்றாலும், அரசினுடைய வெளியுறவுக் கொள்கைக்கும் முக்கியப் பங்குள்ளது. இலங்கை அதிபர் அநுர குமார, இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான உறவு நீடிக்கும் என்பதை உத்தரவாதப்படுத்தினார்.
- பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. இதைப் போலவே, சீனாவுக்கும் சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து அநுர குமார உரையாடியிருக்கிறார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசு உதவி செய்யும் என்கிற அடிப்படையில், இரு தரப்பு ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை இலங்கையில் சீன நிறுவனங்கள் செய்யவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களின் வாங்கும் சக்தி, வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்திட தேசிய மக்கள் சக்திக் கூட்டணி அரசு எத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். வறுமையில் வாடும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை சில மாதங்களில் குறைத்திட எந்த அரசாலும் தீர்வு காண முடியாது என்றாலும், இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு தொடங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
- இலங்கை விடுதலை பெற்றபோது, பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு விடுதலைக்காகப் போராடிய மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் அதிகாரத்தை மேல்தட்டில் இருந்தவர்களிடமே காலனியாதிக்க அரசு ஒப்படைத்தது.
- கடந்த காலத்தில் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் கடைப்பிடித்த நவீன, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து விலகி, மக்கள் நலன்காக்கும் மாற்றுக்கொள்கையை இடதுசாரி அரசான தேசிய மக்கள் சக்தி அரசு நடைமுறைப்படுத்தும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழர்கள் பிரச்சினை:
- நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து இனத்தைச் சார்ந்த மக்களுக்கும், அனைத்து சமூகப் பொருளாதாரப் பிரிவினருக்கும் உரிய அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளை இதுவரையில் இலங்கையை ஆண்ட எந்த அரசும் கடைப்பிடிக்கவில்லை. உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆன பின்பும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை, அதிகாரப் பரவல் நடைபெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழர் பகுதியில் அநுர குமார உரையாற்றியபோது, அவர் அளித்த வாக்குறுதி முக்கியத்துவம் வாய்ந்தது.
- “இதுவரை ஆட்சி செய்தவர்கள் தமிழர்களுக்குப் போதுமான அளவில் உதவவில்லை. ராணுவத்தாலும், பல்வேறு அரசுத் துறைகளாலும் கைப்பற்றப்பட்ட நிலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பேன்” எனவும் உறுதியளித்தார். இதன் அடிப்படையில்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மையாக வெற்றிபெற்றது.
- சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டில், இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரிக்கைவிடுத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் – கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நிலம், காவல் துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நெருக்கடி மிகுந்த பின்னணியில் இடதுசாரிக் கட்சித் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியை இலங்கை மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, இனப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தாமதமானால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டதுபோல் மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, பிற்போக்குவாதிகள் பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்து ஏற்படலாம். இச்சூழலில், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் கவிஞர் சேரன் ஒரு பேட்டியில் கூறிய கருத்து பொருள் பொதிந்த ஒன்று.
- “இந்த மக்களாட்சியில் நியாயமான, சமத்துவமான ஒரு தீர்வை வழங்கி, எல்லாரையும் இணைத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை அரசு தவறவிட்டால், இது போன்ற வாய்ப்பு இனிமேல் கிடைக்காது, வராது.” கவிஞர் சேரனின் கவலையையும் எச்சரிக்கையையும் இலங்கையின் இடதுசாரி அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2025)