TNPSC Thervupettagam

புதிய உயர் கல்வி அமைச்சர் முன்னுள்ள சவால்கள்

October 10 , 2024 46 days 77 0

புதிய உயர் கல்வி அமைச்சர் முன்னுள்ள சவால்கள்

  • தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக எதிர்​பார்க்​கப்பட்ட அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்​துள்ளது. இளம் துணை முதல்வர் பொறுப்புக்கு வந்துள்ளார். மூன்று அமைச்​சர்கள் விடுவிக்​கப்​பட்டு, நான்கு பேர் அமைச்​சர​வையில் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். குறிப்பாக, உயர் கல்வித் துறை அமைச்சராக கோவி. செழியன் நியமிக்​கப்​பட்​டிருக்​கிறார்.
  • உயர் கல்வித் துறை என்பதை ஒருவகை​யில், ‘பெரிய பெரிய விஷயங்களை உள்ளடக்கிய சிறிய துறை’ என வரையறுக்​கலாம். அதன் காரணமாகவே இத்துறையைச் சரியாகக் கண்டு​கொள்​ளாமல் இருக்​கிறார்கள் என்கிற ஆதங்கம் இத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருக்​கிறது. இந்நிலை​யில், புதிய உயர் கல்வி அமைச்​சரிடம் சில முக்கியத் தீர்வுகள் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.

பல்கலைக்கழக ஆளுகை:

  • துணைவேந்தர் நியமனத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் உள்ள முரண்​பாடு​களின் காரணமாகத் தமிழ்​நாட்டின் பல பல்கலைக்​கழகங்​களில் நீண்ட காலமாகத் துணைவேந்​தர்களை நியமிக்க முடியாத சூழல் நிலவு​கிறது. இதன் காரணமாகப் பல்கலைக்​கழகங்​களின் முக்கியச் செயல்​பாடுகள் முடங்​கிக்​கிடக்​கின்றன. புதிய உயர் கல்வி அமைச்சர் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அத்தோடு, பொறுப்​பிலிருந்து ஒரு துணைவேந்தர் விடைபெறும்போது அடுத்த துணைவேந்தர் பொறுப்பு எடுத்​துக்​கொள்​ளத்​தக்கதாக இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அரசுக் கல்லூரிகள்:

  • உயர் கல்விக்கு, அரசு உதவிபெறும் கல்லூரிகளை மட்டுமே நம்பி​யிருந்த நிலையை மாற்றி, அரசுக் கல்லூரிகளை வளர்த்​தெடுத்​ததில் திமுக தலைமையிலான அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, 1990களின் தொடக்​கத்தில் தனியார் சுயநிதிக் கல்லூரி​களின் அதீத வளர்ச்சியின்போது அரசுக் கல்லூரிகளை ஆரம்பிக்கத் தடை விதிக்​கப்​பட்டது. பல்கலைக்​கழகங்கள் வாயிலாக உறுப்புக் கல்லூரிகள் தொடங்​கப்​பட்டன.
  • அவை அரசு நடத்திவரும் சுயநிதிக் கல்லூரி​களாகச் செயல்​பட்டன. தனியார் சுயநிதிக் கல்லூரி​களைக் காட்டிலும் இக்கல்​லூரி​களில் கட்டணம் சற்றுக் குறைவாக வசூலிக்​கப்​பட்டது. மற்றபடி எல்லா வகையிலும் அவை சுயநிதிக் கல்லூரி​களாகவே செயல்​பட்டு​வந்தன. இவற்றை முடிவுக்குக் கொண்டு​வந்தது மு.கருணாநிதி அரசின் சாதனை​களில் ஒன்று.
  • திமுக ஆட்சிக் காலங்​களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றியதும், புதிது புதிதாக அரசுக் கல்லூரி​களைத் திறந்​து​கொண்டு இருப்​பதும், அவற்றில் பல நவீன பாடங்​களைக் கற்பிப்​பதும் ஆரோக்​கியமான உயர் கல்வி வளர்ச்​சிக்கான நடைமுறைகள். இவை ஏழை எளிய மக்களின் உயர் கல்விக் கனவுகள் நிறைவேற அடித்​தள​மாகத் திகழ்ந்​து​வரு​கின்றன.
  • அதேவேளை​யில், அரசுக் கல்லூரி​களில் நீண்ட காலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்​படாதது, பெருவாரி​யானவர்கள் கௌரவ விரிவுரை​யாளர்கள் என்கிற பெயரில் கௌரவமற்ற ஊதியத்தில் நீடிப்பது போன்ற கொடுமைகள் முடிவுக்கு வந்து​விட​வில்லை. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒரு பகுதி கௌரவ ஆசிரியர்கள்; மற்றொரு பகுதி பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் என்கிற நிலையே நீடிக்​கிறது.
  • அதிலும் பாதி ஊதியமே கிடைக்​கிறது.‌ நிரந்தர ஆசிரியர்​களுக்கும் கௌரவ விரிவுரை​யாளர்​களுக்​குமான ஊதிய இடைவெளி மலைக்கும் மடுவுக்​குமான இடைவெளி. கௌரவ விரிவுரை​யாளர்​களுக்குக் கூடுதல் பணிச் சுமை இன்னொரு கொடுமை. உயர் கல்விக்காக நிறைய கல்லூரி​களைத் திறந்து, ஏராளமான மாணவர்கள் கற்க வழிசெய்​து​வரும் தமிழ்நாடு அரசின் மைய இலக்குக்கு இத்தகைய பிரச்​சினைகள் நேர் எதிராகவே அமையும்.
  • உயர் கல்வி வாய்ப்புகள் முக்கியம். அந்த வாய்ப்பு​களைத் தமிழ்​நாட்டு மாணவர்கள் செம்மை​யாகப் பயன்படுத்​திக்​கொள்ள வேண்டும் எனில் அதற்குப் போதுமான, தரமான ஆசிரியர் நியமனம் மிகவும் அவசியம். பணிநிரந்தரம் குறித்த கவலையோடு பணியாற்றிவரும் கௌரவ விரிவுரை​யாளர்​களின் கண்ணீர் புதிய அமைச்​சரால் துடைக்​கப்பட வேண்டும். பாடங்களை முழுமை​யாகக் கற்பதில் மாணவர்கள் எதிர்​கொள்ளும் பிரச்​சினை​களைக் களைய இது வழிசெய்​யும்.

அரசு உதவி பெறும் கல்லூரிகள்:

  • அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்​கப்​பட்டவை. ஆரம்பத்தில் மத நிறுவனங்கள், கொடையாளர்​களால் இக்கல்​லூரிகள் தொடங்​கப்​பட்டன. பிற்காலத்தில் சாதிச் சங்கங்கள், நீண்ட கால லாப நோக்கம் கொண்ட தனிமனிதர்கள், வர்த்​தகர்கள் போன்றோர் அரசு உதவிபெறும் கல்லூரி​களைத் தொடங்​கினர். ஆசிரியர் நியமனங்​களில் தரம், சாதி, மதம் என்ற‌ சார்புநிலைகள் இருந்தன.
  • மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை என்று தொடங்கிய நிறுவனங்கள், ஒருகட்​டத்தில் ஆசிரியர் நியமனத்​துக்கும் பணம் என்ற நிலையை நோக்கி நகர்ந்தன. அவை முந்தைய நடைமுறைகளான சாதி, மதம் ஆகியவற்றோடு இணைந்து இருந்தன. ஒருவகை​யில், பணம் பெறுவதும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது.
  • ஒருகட்​டத்​தில், பணம் கொடுப்​பவர்​களுக்கு மட்டுமே அரசு உதவிபெறும் கல்லூரி​களில் ஆசிரியர் பணியிடம் என்கிற நிலை உருவானது. சிறந்த கல்வித் தகுதி பெற்றவர்கள் உதவிபெறும் கல்லூரி​களின் ஆசிரியர் நியமனத்தில் வாய்ப்பு​களைப் பெற முடியாத அவலநிலையும் தொடங்​கியது. ஆரம்பத்தில் ஓரளவு குறைவான தொகையே பணிநியமனத்​துக்​காகப் பெறப்​பட்டது. அடுத்த கட்டத்​தில், இந்த நன்கொடை என்னும் தொகை மளமளவென உயர்ந்து உச்சம் தொட்டது.
  • ஓரளவு வசதியானவர்​கள்​கூடக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்​களைக் கைப்பற்ற முடியாது என்கிற நிலை உருவானது. நல்ல வசதி கொண்ட​வர்கள் அல்லது பெரிய அளவில் கடன்பெறும் ஆற்றல் மிக்கவர்கள் மட்டுமே அரசு உதவிபெறும் கல்லூரி​களில் பணி நியமனம் பெற முடியும் என்கிற நிலை ஏற்பட்டு​விட்டது.‌ பணத்தை நேரடி​யாகப் பெறும் கல்லூரி நிர்வாகங்கள், அரசு இயந்திரத்தைக் கைகாட்​டி​விட்டுத் தப்பித்​துக்​கொள்​கின்றன.
  • கல்லூரி ஆசிரியர்​களாகப் பணியாற்று​வதற்கான எல்லாத் தகுதி​களும் இருந்​தா​லும், பணம் இல்லாததால் பணியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்​பட்​ட​வர்கள் மனம் தளர்ந்​து​போய்​விட்​டார்கள். பல ஏழை, நடுத்தர வர்க்க மாணாக்​கர்கள் - கல்லூரி ஆசிரியர்களாக வர ஆசை இருந்​தாலும் - ‘இன்றைய சூழலில் நமக்கு இது சாத்தி​ய​மா​காது’ என முடிவுசெய்து, கல்லூரி ஆசிரியர் பணி சார்ந்த படிப்பு​களைத் தவிர்த்து​வரு​கின்​றனர். சர்வதேசத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்​களில் படித்து முனைவர் பட்டம் வரை முடித்​தவர்​கள்​கூடப் பணம் இல்லாததால் உதவிபெறும் கல்லூரி​களில் உள்ளே நுழைய முடிய​வில்லை.
  • சிறிய துறை என்பதால், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் துயரம் பரவலாக வெளியில் தெரிவ​தில்லை. காலிப் பணியிடங்களை நிரப்​பிக்​கொள்ளும் விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு சில உதவிபெறும் கல்லூரி​களுக்கு உடனுக்​குடன் அரசின் அனுமதி கிடைப்​ப​தாக​வும், சில கல்லூரி​களுக்கு ஆண்டுக்​கணக்கில் அனுமதி மறுக்​கப்​படு​வ​தாகவும் புகார்கள் உண்டு.
  • அதிலும் குறிப்​பாகச் சில கல்லூரி​களுக்கு, பணியிடங்கள் காலியாக ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே அனுமதி கொடுப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதுபோன்ற பிரச்​சினைகள், உயர் கல்வித் துறையில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்​திருந்​தா​லும், யாரும் எங்கும் எதையும் வெளிப்​படை​யாகப் பேச முடிய​வில்லை என்பதுதான் கவனிக்​கத்தக்க விஷயம்.
  • ஓர் அரசில், ஒரு துறை சிறப்​பாகச் செயல்​படு​வதற்கு, தனிப்பட்ட அமைச்​சரின் செயல்​திறன், அரசுத் தலைமையின் வழிகாட்டல், கண்காணிப்பு எனப் பல கூட்டுப்​பொறுப்புகள் அவசியம். மேற்சொன்ன பிரச்​சினை​களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றுக்குத் தீர்வுகாண புதிய அமைச்சர் முன்வந்​தால், தமிழ்​நாட்டின் உயர் கல்வித் துறை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் என்பது உறுதி!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories