TNPSC Thervupettagam

புதிய கேரம் ராணி!

November 22 , 2024 8 hrs 0 min 45 0

புதிய கேரம் ராணி!

  • வடசென்னையின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது கேரம். இன்றும்கூட வடசென்னைப் பகுதியில் உலாவந்தால், வீதியோரங்களில் நின்றுகொண்டு கேரம் விளையாடுபவர்களை சர்வ சாதரணமாகப் பார்க்கலாம். ஒரு காலத்தில் வடசென்னை ஆண்களின் விளையாட்டு எனப் பேசப்பட்ட கேரம் விளையாட்டை உலக அளவில் பேசவைத்தார், அதே பகுதியிலிருந்து வந்த கேரம் உலக சாம்பியனான இளவழகி. நீண்ட நாள்கள் கழித்து வடசென்னையிலிருந்து மீண்டும் ஒரு கேரம் உலக சாம்பியன் உருவெடுத்திருக்கிறார். அவர், 17 வயதே நிரம்பிய இளம்பெண் காசிமா.

சிறுவயதில் பரிச்சயம்:

  • வடசென்னையில் கேரம் விளையாட்டில் கோலோச்சும் எல்லாருக்குமே, அவர் களுடைய குடும்பத்தி லிருந்துதான் அந்த விளையாட்டு பரிச்சயம் ஆகியிருக்கும். காசி மாவுக்கும் அப்படித்தான். புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான மெகபூப் பாஷா கேரத்தைக் கரைத்துக் குடித்தவர். அவருடைய மகன் அப்துல் ரஹ்மானுக்கும் கேரத்தை அறிமுகப்படுத்தி, அவரைப் படிப்படியாக முன்னேற்றினார். தற்போது அப்துல் ரஹ்மான் கேரம் விளையாட்டில் ஜூனியர் நேஷனல் சாம்பியனாக இருக்கிறார். அவருடைய சகோதரிதான் காசிமா.
  • நண்பர்களுடன் தன் சகோதரர் கேரம் விளையாடும்போது சிறுவயதிலிருந்தே காசிமாவும் சேர்ந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் 8 வயதில் காசிமாவுக்கு கேரம் அறிமுகமானது. சிறு வயதிலேயே ‘அட்டாக்’கிங் பாணியில் கேரத்தை காசிமா விளையாடக் கற்றுக்கொண்டுவிட்டார்.
  • துரிதமாகவும் விவேகமாகவும் காசிமா கேரம் விளையாடுவதைப் பார்த்த அண்டை வீட்டார், நண்பர்கள் எனப் பலரும் மகனைப் போலவே மகளையும் கேரம் விளையாட்டில் ஈடுபடுத்தும்படி காசிமாவின் பெற்றோரிடம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதை மதித்த காசிமாவின் பெற்றோர், மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

வெற்றி மீது வெற்றி:

  • அப்படித்தான் கேரம் விளையாட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி காசிமா நகர்ந்திருக்கிறார். மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு, மாநில அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்து காசிமா அசத்தினார். காசிமாவுக்கு 12 வயதானபோது தேசிய அளவிலான கேரம் விளையாட்டில் பங்கேற்றார்.
  • முதல் முறையாகத் தேசிய அளவில் விளையாடியபோது காசிமா இரண்டாமிடத்தைப் பிடித்தவர், பின்னர் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். தொடர்ந்து 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கேரம் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற்றார். இந்தப் பிரிவில் சீனியர்களுடன் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போதும் தங்கம், வெள்ளி எனப் பதக்கங்களை ‘பாக்கெட்’ செய்ய அவர் தவறவில்லை.
  • சிறு வயதிலிருந்தே தந்தைதான் பயிற்சியாளர் என்றாலும், வடசென்னை கேரம் விளையாட்டில் ஜாம்பவான்களான மரிய இருதயம், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் காசிமாவின் பயிற்சிக்கு உதவியிருக்கிறார்கள். தேசிய அளவில் ஜொலித்த காசிமா அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், போட்டியில் பங்கேற்கவே ரூ.1.50 லட்சம் முன்பணம் கேட்கப்பட்டது. பின்னர் பயணச் செலவு, தங்குவதற்கான செலவு என நிறைய பணம் தேவைப்பட்டிருக்கிறது.
  • ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த காசிமா கடன் வாங்கித்தான் அமெரிக்கா செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதன் பின்னர்தான் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் உதயநிதியை அணுகினார்கள். தமிழ்நாடு அரசின் சாம்பியன் அறக்கட்டளை மூலமாக விண்ணப்பித்தவருக்கு அரசின் உதவி கிடைத்தது.
  • அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் காசிமா. 12 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிஹாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்ததும் இதில் அடங்கும். இதன்மூலம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் காசிமா பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார். கேரம் விளையாட்டில் ஆர்வமாக ஈடுபடும் இளம்பெண்களுக்கும் காசிமா முன் உதாரணமாகியிருக்கிறார்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories