- மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புவி அறிவியல் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. நீதிபதி நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் உரசல்கள் நிலவிவந்த சூழலில், இந்தத் துறை மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
- 2021 இல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நேரடியாகவும் வரம்பு மீறியும் விமர்சித்துவந்தார். 2022 நவம்பரில், “உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் நடைமுறை வெளிப்படைத் தன்மையற்றதாகவும் பதில் கூறும் பொறுப்பற்றதாகவும் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
- நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடைமுறை மீது சில விமர்சனங்கள் உண்டு என்றாலும், கேபினெட் அந்தஸ்துபெற்ற சட்ட அமைச்சர் ஒருவர், அதனை வெளிப்படையாகவே விமர்சித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் சிலரை மத்திய அரசு நியமிக்கத் தவறியது தொடர்பாக நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே எழுந்த மோதல்களில் நீதித் துறைக்கு எதிராக ரிஜிஜுவின் குரல் கடுமையாக ஒலித்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர் இந்தியாவுக்கு எதிராக இயங்கும் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறியதும் சர்ச்சையானது.
- ‘தோல்வியடைந்த சட்ட அமைச்சர்’ என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க, இவையெல்லாமும் காரணமாகின. அதேநேரம், ரிஜிஜுவின் இலாகா மாற்றத்தின் மூலம் நீதித் துறையுடனான உறவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- தற்போது, ராஜஸ்தானைச் சேர்ந்தவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அர்ஜுன் ராம் மேக்வால் சட்ட இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) நியமிக்கப்பட்டிருக்கிறார். கேபினெட் அந்தஸ்து இல்லாத ஒருவர் முதல் முறையாகச் சட்டத் துறைக்கு முதன்மைப் பொறுப்பை ஏற்றிருப்பதும், சட்டத் துறைக்கு முழு நேர அமைச்சரை பாஜக அரசு நியமிக்காததும் விவாதப் பொருளாகியிருக்கின்றன.
- பட்டியல் சாதியைச் சேர்ந்த மேக்வாலுக்கு முக்கியமான அமைச்சரவையைக் கொடுத்திருப்பது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரவிருக்கும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதி மக்களின் வாக்குகளைக் கவர பாஜகவுக்கு உதவலாம் எனக் கருதப்படுகிறது.
- அனைத்துத் தரப்பினருக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதிசெய்வதும் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாகத் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும் மத்திய அரசுக்கும் நீதித் துறைக்கும் மிகப் பெரிய சவால்கள். நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் இந்தப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கக்கூடியது.
- இவற்றை உணர்ந்து மத்திய அரசு அண்மைக் காலமாக கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை விரைவாக நியமிப்பதில் கவனம் செலுத்திவருவது வரவேற்புக்குரியது. இந்த நிலை தொடர்வதை உறுதிசெய்வது அமைச்சர் அர்ஜுன் மேக்வாலின் பொறுப்பு.
- எல்லாவற்றையும் தாண்டி, கொலீஜியம் நடைமுறை உள்பட, நீதித் துறையில் மத்திய அரசு மேற்கொள்ள முயலும் சீர்திருத்த நடவடிக்கைகள் எதுவும் நீதித் துறைக்கான அதிகாரத்தின் மீதான ஊடுருவல் என்கிற விமர்சனத்துக்கு வழிவகுத்திடக் கூடாது.
- மக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய அரசும் நீதித் துறையும் ஆக்க பூர்வமாகக் கைகோத்துச் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. புதிய சட்ட அமைச்சர் இந்தச் சவால்களை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (29 – 05 – 2023)