- புத்தாண்டு மலர்ந்திருக்கிறது. ஓர் ஆண்டு முற்றுப்பெறுவது என்பது ஒரு முடிவோ அல்லது தொடக்கமோ அல்ல; நாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, எதிர்வரும் நாள்களை எதிர் கொள்ளும் நம்பிக்கையை விதைப்பது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டைக் கடந்து 2024ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய ஆண்டின் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகப் புத்தாண்டில் நிகழவிருக்கும் தருணங்களுக்கு முகங்கொடுக்கத் தயாராவோம். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகம் மீண்டெழுந்து வந்துவிட்டாலும், கரோனா வைரஸ் திரிபுகள் பரவல் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
- தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜே.என்.1 வைரஸ் திரிபுப் பரவல் குறித்த தகவல்கள் வெளியாகின்றன. அச்சப்படும் அளவுக்கு இல்லை என்றாலும், கவனம் அவசியம் என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பேரிடர்களை உலகின் பல்வேறு நாடுகளைப் போல இந்தியாவும் எதிர்கொண்டது. 2022இல் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளால் பருவமழை பாதிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது நம்பிக்கையூட்டியது.
- ஆனால், 2023இல் வட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் - மழை - வெள்ளம், தென் மாவட்டங்களில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியால் ஏற்பட்ட அதி கனமழை என ஆண்டின் இறுதிக்கட்டம் அவஸ்தையாக அமைந்தது. வானிலை முன்னறிவிப்பு இன்னும் துல்லியமாக வேண்டியதன் அவசியத்தையும், பேரிடர் மேலாண்மையை இன்னும் பலப்படுத்த வேண்டிய தேவையையும் இந்தப் பேரிடர் உணர்த்திவிட்டது. உலகமெங்கும் இப்படியான பேரிடர்கள் புதிய இயல்பாக மாறிவரும் நிலையில், இந்தியா தனது எல்லா ஆற்றல்களையும் திரட்டி இவற்றைக் கையாளத் தயாராக வேண்டும்.
- உலகின் முன்னணி நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பாகக் கருதப்படும் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை ஏற்றிருந்த இந்தியா, அமர்வுகளையும் மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், உலகின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் புத்தாண்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், பிற நாடுகளுடன் வணிகரீதியிலான பேரங்களில் இம்மாநாடுகள் இந்தியாவுக்கு வலு சேர்த்திருக்கின்றன என்றும் நம்பப்படுகிறது.
- சர்வதேச அளவிலான பொருளாதார நிலவரம் சிலாக்கியமாக இல்லை என்றாலும், இந்தியாவுக்குப் பாதகங்கள் அதிகமில்லை என்றே ரிசர்வ் வங்கி நம்பிக்கையூட்டுகிறது. கோல்ட்மேன் சாஷ் முதலீட்டு வங்கி போன்ற நிதிச் சேவை நிறுவனங்கள், புத்தாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை அளிப்பதாகவே கணித்திருக்கின்றன. ஜிடிபி வளர்ச்சியும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இப்படியான சாதகச் சூழல்கள் தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை எட்டும்.
- 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் போக்குகள், ஆட்சி மாற்றங்கள் போன்றவை சாமானியர்களின் அன்றாட வாழ்வையும் தீர்மானிக்கக்கூடியவை என்பதால், தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது.
- மக்கள்தொகையில் முதலிடம் பெற்றுவிட்ட நாடு என்பதால் வேலைவாய்ப்பு, தொழில் துறை, ஏற்றுமதி எனப் பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு புதிய அரசுக்குக் காத்திருக்கிறது. சாட்ஜிபிடி யுகத்திலும் சாதிப் பாகுபாடுகள், மத அடிப்படைவாத வெறுப்புப் பேச்சுக்கள் நிலவுவது, உலக அரங்கில் மதிக்கப்படும் இந்தியாவுக்கு அழகல்ல.
- கசப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் அவசியம். உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில், காசா போரும் மூண்டது கவலையளிக்கிறது. போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தி உலகை உய்விக்க இந்தப் புத்தாண்டு வாய்ப்பு அளிக்கும் என நம்புவோம்!
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2024)