- · இரண்டாம் உலகப்போரின்போதுகூட உலகம் இந்த அளவுக்கு மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ஒருபுறம் கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்கும் அதே நேரத்தில், இன்னொருபுறம் பொருளாதாரம் முற்றிலுமாகத் தகா்ந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய தா்மசங்கடத்தில் பெரும்பாலான உலக நாடுகள் சிக்கியிருக்கின்றன.
- · ‘சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்’ என்பார்கள். ஏற்கெனவே இந்தியப் பொருளாதாரம் தளா்ச்சி அடைந்து காணப்படும் நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருப்பது மத்திய - மாநில அரசுகளின் நிதியாதாரத்தில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் ரூ.1.70 லட்சம் கோடி நிவாரணத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.
நிவாரணத் திட்டம்
- · வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள ஏழைகளுக்கு உணவு தானியங்கள், உடனடிச் செலவுக்காகப் பணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவால் அன்றாட வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்கள் உண்ண உணவின்றித் தவிக்க மாட்டார்கள் என்கிற அளவில் நிதியமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது.
- · வங்கிகள் மூலம் வழங்கப்படும் நேரடி உதவித் தொகை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் என மத்திய அரசின் சலுகை திட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அடுத்த மூன்று மாதங்களில் ஏறத்தாழ 31.5 கோடி குடும்பங்களுக்கு ரூ.50,000 கோடி நேரடியாக வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் நாளொன்றுக்கு ரூ.20 உயா்த்தப்படுவதையும் சோ்த்தால், 36.5 கோடி குடும்பங்களுக்கு ரூ.60,000 கோடி மத்திய அரசால் வழங்கப்பட இருக்கிறது. இதில் பல குடும்பங்கள் இரண்டு மூன்று சலுகைகளை பெறக்கூடும் என்பதைத் தவிர்க்க முடியாது.
- · வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ கோதுமை அல்லது அரசி உணவு தானியமும், 1 கிலோ பருப்பும், 1 லிட்டா் சமையல் எண்ணெயும் வழங்கப்பட இருக்கிறது. இலவச உணவு தானியங்களை ரேஷன் அட்டைதாரா்கள் இரண்டு தவணைகளாக, தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் உணவு தானியங்களுடன் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். உஜாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக எரிவாயு உருளைகள் வழங்கப்பட உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு
- · ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள 20.5 கோடி பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500, ஏழை விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 உள்ளிட்ட சலுகைகளையும் நிதியமைச்சா் அறிவித்திருக்கிறார். 63 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் தொகைக்கான உச்சவரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்திருப்பதால் ஏழு கோடி குடும்பங்கள் பயன் அடையும் என்பது நிர்மலா சீதாராமனின் எதிர்பார்ப்பு. இதுபோலப் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறார் நிதியமைச்சா்.
முக்கிய அம்சங்கள்
- · நிதியமைச்சரின் அறிவிப்பில் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஒன்று இலவச உணவுப் பொருள்கள் வழங்குவது, இரண்டாவது விவசாயிகளுக்கு பிரதமா் விவசாயத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தின் முதல் பகுதியை முன்கூட்டியே ஏப்ரல் மாதத்தில் வழங்குவது. இந்த இரண்டு அறிவிப்புகளும் அத்தியாவசியமானவைதான் என்பதில் ஐயப்பாடில்லை. அதேசமயத்தில், அரசுக்குக் கடுமையான பொருளாதார அழுத்தம் ஏற்பட்டுவிடாமல் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் இவை.
இலவச உணவுப் பொருள்கள்
- · பிப்ரவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அரசின் உணவு தானியக் கிடங்குகளில் 7.53 கோடி டன் உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கின்றன. அதனால், அரசின் ‘கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கும் ரூ.45,000 கோடி பெறுமானமுள்ள உணவுப் பொருள்களை நியாயவிலைக் கடைகள் மூலம் 80 கோடி மக்களுக்கு விநியோகிப்பதால், நேரடியாக கையிருப்பு நிதியில் பாதிப்பு ஏற்படாது. ஏற்கெனவே தானியக் கிடங்குகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், அரிசியும், கோதுமையும், பருப்பு வகைகளும் வழங்கப்படுவதன் மூலம் தானியங்கள் வீணாவது தவிர்க்கப்படும்.
விவசாயிகளுக்கு மானியம்
- · மத்திய அரசின் ‘கிஸான் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து எட்டு கோடி விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் நேரடி உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட இருக்கிறது. அதனால், இதையும் பெரிய நிதிச் சுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.
நன்றி: தினமணி (30-03-2020)