TNPSC Thervupettagam

புத்துயிரூட்டும் புதிய கல்விக் கொள்கை!

August 4 , 2020 1631 days 1378 0
  • நடுவண் அரசு, புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த அறிவிப்பில் மழலையர் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள், கட்டாயமாகத் தங்கள் தாய்மொழியில்தான் கல்வி பயில வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
  • தமிழறிஞர்களும் பிறமொழி அறிஞர்களும் பல காலமாகவே, குறைந்தது எட்டாம் வகுப்புவரையாவது பயிற்றுமொழி அவரவர் தாய்மொழியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
  • இன்றும் ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் அவரவர் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. சில நாடுகளில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் போன்ற அனைத்து வகையான பட்ட மேற்படிப்புகளும் அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன.
  • ரஷியா போன்ற நாடுகளில் கல்வி பயிலச் செல்லும் நமது மாணவர்களுக்கும் கூட, ஆறுமாத காலம் அவர்களின் மொழியை கற்றுக்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
  • அதற்குப் பிறகும், அவர்களின் மொழியில்தான் மருத்துவம் போன்ற படிப்புகளும்கூட படிக்க முடியும். ஆனால், நமது நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புவரை இருந்த தாய்மொழிக் கல்வியை, படிப்படியாகக் குறைத்து, எட்டாம் வகுப்புவரை மாற்றி, பிறகு ஐந்தாம் வகுப்புவரை எனக் குறைத்து இறுதியில் அடிப்படைக் கல்வியான பால்வாடியிலிருந்து அனைத்து வகையான கல்வியும் ஆங்கிலவழிக் கல்வி என்ற நிலைக்கு மாற்றினார்கள்.

அடிப்படைக்கல்வி    

  • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளிலும்கூட, ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்ததைக் கண்ட பேரூராதீனம் இருபத்து நான்காம் குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் அவரவர் தாய்மொழியே இருக்க வேண்டும் என்கின்ற நோக்கில் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்து, பயிற்று மொழி - வழிபாட்டு மொழி மாநில மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்கள்.
  • தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் அமைப்புகள் என அனைவரையும் ஒன்றிணைத்து, பலமுறை கருத்தரங்குகளையும் உண்ணாநிலை அறப்போராட்டங்களையும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தொடர்ந்து நடத்தியும் பயனில்லாமல் இருந்தது.
  • இத்தகைய சூழ்நிலையில், நடுவண் அரசு தற்போது ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழியில்தான் கற்க வேண்டும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
  • பல மொழிஅமைப்புகள் உச்சநீதிமன்றம்வரை முறையிட்டும் பயனில்லாமல் இருந்த நிலையில், நடுவணரசின் இக்கல்விக் கொள்கை மகிழ்வளித்துள்ளது.
  • அதற்காக, நடுவண் அரசை நாம் பாராட்டி மகிழ்கின்றோம். அதே நேரத்தில், "கேந்திரீய வித்யாலயா', "நவோதயா', சிபிஎஸ்இ என எல்லா வகையான பள்ளிகளிலும் முதல் ஐந்து வகுப்புகளுக்கான கல்வி கட்டாயம் தாய்மொழியில் இருக்குமா என்பதைப் பற்றி அரசு அறிவிக்கவில்லை. எந்தப் பள்ளியாக இருந்தாலும், அடிப்படைக்கல்வி தாய்மொழியில்தான் என்பதை நடுவண் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
  • நடுவண் அரசு, 5+3+3+4 என்ற அடிப்படையில் கல்விக்கு உண்டான நிலைப்பாடுகளை வகுத்துள்ளது. அரும்பு, மொட்டு, மலர், ஒன்று, இரண்டு ஆகிய வகுப்புகளை முதல் பிரிவாகவும் மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளை இரண்டாம் பிரிவாகவும் ஆறு, ஏழு,எட்டு ஆகிய வகுப்புகளை மூன்றாம் பிரிவாகவும் ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புகளை நான்காம் பிரிவாகவும் வகுத்துள்ளார்கள்.
  • நடுவண் அரசு இந்தப் பிரிவுகளின் பாடத்திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
  • பழங்காலத்தில், தொடக்கக் கல்வி என்பது, வட்டார அளவில் இருக்கக்கூடிய மொழி, பண்பாடு, வேளாண்மை, இயற்கை அமைப்பு, புவியியல், வரலாறு போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான வகையில் அமைந்திருந்தது. ஆனால், இப்பொழுது மாநிலக் கல்வி அமைப்பிலும் சரி, சிபிஎஸ்இ அமைப்பிலும் சரி வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே கன்னியாகுமரிவரை ஒரே மாதிரியான கல்வியைக் கற்பது என்கிற நிலை உள்ளது.
  • இப்போது, ஐந்தாம் வகுப்புவரை உள்ள குழந்தைகளுக்கு அந்தந்த வட்டாரம், ஒன்றியம், மாவட்டம் என்கின்ற அடிப்படையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும்.

சிறப்பு

  • ஒரு மாணவன், தன்னைச் சுற்றி இருக்கின்ற பகுதிகள், வேளாண்மை, பண்பாடு, இலக்கியங்கள், கலைச்செல்வங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
  • அதைப் பயிற்றுவிக்கக் கூடிய வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். அந்தந்த வட்டம், மாவட்டம் என்கிற அளவிலாவது பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • இரண்டாவது பிரிவான மூன்று என்பதில் இப்பாடத்திட்டத்தை மண்டல அளவிலும் மூன்றாவது பிரிவான மூன்று என்பதில் மாநில அளவிலும் இறுதிப் பிரிவான நான்கு என்பதில் நாட்டளவிலும் இருக்கக்கூடிய செய்திகளைப் பாடத்திட்டமாக அமைத்தால் அனைவருக்கும் அடிப்படைத் தகவல்கள் தெரிவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
  • இந்தக் கல்விக் கொள்கையில், மேலும் ஒரு சிறப்பு, பாட நேரத்தை ஆறுமணி நேரமாக மாற்றியிருப்பது. இதுவும் வரவேற்கத்தக்கதே. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாள்கள் வேலை நாள்கள் என அறிவித்தார். அப்போது அதற்குப் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., "நீங்கள் ஐந்து நாள்களில் முப்பது மணி நேரம்தான் வேலை செய்கிறீர்கள். இப்பொழுதும் அதுபோலச் செய்தால் போதும்' எனக்கூறி, ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை, ஐந்து மணி நேரமாக மாற்றி ஆறு நாள்களை வேலை நாட்களாக அறிவித்தார்.
  • அதற்குப் பிறகும் எதிர்ப்பு வந்தபோது, சனிக்கிழமை விடுமுறை என அறிவித்தார். அப்போது ஐந்து மணி நேரம் என இருந்ததை, பழையபடி ஆறு மணி நேரமாக மாற்றவில்லை.
  • அதை அரசு அலுவலர்களும் கல்வித்துறையில் இருந்தவர்களும் சிந்திக்காமல் விட்டுவிட்ட காரணத்தால், ஐந்து மணிநேரமாகவே தொடர்ந்தது. அதை இப்பொழுது இக்கல்விக்கொள்கையின் வழியே நடுவண் அரசு ஆறு மணிநேரமாக (காலை 9.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை) மாற்றியுள்ளது.
  • கல்லூரி அடிப்படையில், இதுவே, ஆறு நாள் வேலை, ஆனால் முப்பதாறு மணி நேரத்திற்குப் பதிலாக முப்பது மணிநேரம் என்ற அடிப்படையில் இருந்து வருகிறது. இதைக் கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த கா.மீனாட்சிசுந்தரம் போன்றோர் பலமுறை குறிப்பிட்டார்கள். ஆனால், இதற்குச் செவி சாய்ப்பார் யாருமில்லாததால் மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வி இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அது இப்போது சரிசெய்யப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

கல்வித்துறை உயர்ந்து விளங்கும்

  • சில மாதங்களுக்கு முன்னர், நாளேடு ஒன்றில் வெளியான கட்டுரையொன்றில், "கல்லூரி ஆசிரியர்கள் ஒரு பருவத்திற்கு 90 நாள்கள்தான் வேலை செய்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு 180 நாள்கள். அதிலும் சேர்க்கைக் காலம், விழாக்காலம், தேர்வுக்காலம் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு பருவத்தில் அறுபது நாள்கள்கூட மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை' என்று அருமையாகக் கூறப்பட்டிருந்தது.
  • அரசு ஆணை எண்.100-இன் அடிப்படையில் "கட்டாயமாகக் கல்வி கற்பிக்கப்படும் நாள்கள் 90 நாள்களாகவும் விழா, தேர்வு ஆகிய நாள்கள் கூடுதல் நாள்களாகவும் இருக்கவேண்டும்' என்று இருந்தாலுங்கூட, அதை யாரும் பொருட்படுத்தாத நிலையே இருந்தது. இதை மாற்றக்கூடிய வகையிலும் கட்டாயமாக ஆறு மணி நேரம் என்று மாற்றப்பட்டுள்ளது.
  • சிறுபான்மையினர் என்று சொல்லக்கூடிய கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் போன்றோருக்கு நிறைய உதவித்தொகை வழங்குகின்றார்கள். கல்வி உரிமைச் சட்டத்தின் வாயிலாக, தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குகிறார்கள். அப்படி வழங்கும் கல்விக்கு அதற்குண்டான தொகையை அந்த நிறுவனத்திற்கு வழங்கி விடுகிறார்கள்.
  • இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, எல்லா மாணவர்களும் இந்த உதவித்தொகையைப் பெறும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தலாம்.
  • கல்விக்காக வழங்கப்படும் தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
  • அந்த மாணவர்கள் அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஐந்து, மூன்று, மூன்று, நான்கு என்கின்ற நிலைப்பாடுகளுக்குத் தகுந்தவாறு அனைத்து மாணவர்களுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயமான இலவசக்கல்வி என்று அறிவித்திருக்கிறார்கள்.
  • அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான ஒதுக்கீட்டை சமமாகப் பகிர்ந்து வழங்கினால் அவர்கள் விருப்பமான பள்ளியில் சேர, வாய்ப்பாக அமையும்.
  • குறிப்பிட்ட சிலர் மட்டும் அரசுப்பள்ளிகளில் இலவசக் கல்வி பயின்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள்கூட, தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்கிறார்கள்.
  • அரசுப் பள்ளியை விட தனியார் பள்ளி தரம் உயர்ந்தது என்பது அவர்களின் கணிப்பு. மொத்தக் கல்விக்காக அரசு செலவிடும் தொகையை, கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு வகுத்து, வரக்கூடிய தொகையை, அனைத்து மாணவர்களுக்கும் வழங்கலாம். அவர்கள் அதைக்கொண்டு எந்தப்பள்ளியில் வேண்டுமானாலும் பயிலலாம்.
  • புதிய கல்விக்கொள்கையில் மேற்சொன்ன மாற்றங்களும் நிகழ்ந்தால் நமது கல்வித்துறை உயர்ந்து விளங்கும்.

நன்றி: தி தினமணி (04-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories