- புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில், புத்தொழிலிலும் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதில் வியப்பில்லை.
- 2021 வரை தமிழ்நாட்டில் 2,032 புத்தொழில் நிறுவனங்களே பதிவுசெய்யப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, 8,416 ஆகியுள்ளது.
- இதே காலகட்டத்தில், பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 966 இலிருந்து 3,163 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதை இந்தத் தகவல்கள் உறுதிசெய்கின்றன.
- உற்பத்தியிலோ, சேவையிலோ புதுமையைப் பயன்படுத்தி, களத்தில் நிலவும் சிக்கலுக்குத் தொழில்நுட்பத்தின் துணையுடன் தீர்வு காண்கிற முயற்சி, புத்தொழில் என வரையறுக்கப்படுகிறது. ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில், இந்தக் கருத்தாக்கம் அரசு நிர்வாகங்களால் அடையாளம் காணப்பட்டு, புதிய தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்பட்டனர்.
- தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கான முயற்சிகள் தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், அரசின் ஆதரவைப் பெறுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன. 2019இல் தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்கத்துக்கான கொள்கை உருவாக்கப்பட்டது.
- புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிதி, வழிகாட்டல், தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட சூழலை வழங்குவதே இக்கொள்கையின் நோக்கம். இது நல்ல பலனைக் கொடுத்தது. 2018இல் தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியிருந்த தமிழ்நாடு, அதற்கடுத்த ஆண்டுகளில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கத் தொடங்கியது.
- தமிழ்நாட்டில் 2021இல் 2,032 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. அதே நேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2022இல் ‘சிறந்த செயல்பாட்டாளர்’ என மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டது.
- தற்போது செயல்பட்டு வரும் 7,600 நிறுவனங்களில் 2,250 நிறுவனங்கள் 2022இல் தொடங்கப்பட்டவை. புத்தொழில் துறையில் முதன்முதலாக முதலீடு செய்கிற ‘ஏஞ்சல் முதலீட்டாளர்’களின் பங்களிப்புகள் 2020இல் 27 ஆக இருந்தது. 2021இல் அது 40 ஆக அதிகரித்தது. 2022இல் முதல் ஆறு மாதங்களிலேயே அது 34 ஆனது.
- 2023இல் கோயம்புத்தூரில் நடந்த புத்தாக்கத் தொழில் மாநாட்டில், புத்தாக்கத் தொழில் நிறுவனங்களின் 83 தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 67 நிறுவனங்கள் 6,251 திட்டங்களுடன் இந்நிகழ்வில் பங்கேற்றன. நிறுவனங்களுக்கான தொடக்க நிலை முதலீட்டுத் தேவையை நிறைவேற்றும் ‘தமிழ்நாடு புத்தொழில் சீட் ஃபண்ட்’, தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினரின் புத்தொழிலுக்கான நிதி உள்ளிட்ட நடவடிக்கைகள் தமிழக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன.
- மின்சார வாகனக் கொள்கை-2019 மூலம் மின்சார வாகன உற்பத்தியும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் தொடக்க நிலையில், அதன் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடான ‘வென்சர் கேப்பிடல்’, வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கான முதலீடான பிரைவேட் ஈக்விட்டி ஆகிய இரண்டு வகை முதலீடுகளும் தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களுக்குக் கிடைப்பதாக ‘வென்சர் இன்டெலிஜென்ஸ்’ என்கிற அமைப்பு கூறுகிறது.
- புத்தொழில் துறையில் தமிழ்நாடு நிகழ்த்தியிருக்கும் இந்தச் சாதனைகள், ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. இந்தப் பயணம் வெற்றிகரமாகத் தொடரட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 05 – 2024)