TNPSC Thervupettagam

புனைவுப் பாதையில் ஏற்றப்பட்ட சிற்றகல்

February 16 , 2025 5 days 25 0
  • ஐம்பது ஆண்டு​களுக்கு முன்பு, ஜி.நாக​ராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், காலம் கடந்து இன்றும் அழியாச் சுடராக நிலைபெற்றிருக்​கிறது. காலவெளி​யில் இந்நாவல் ஒரு புதிய புனைவுப் பாதைக்கான ஒளியோடு மேலும் மேலும் பிரகாசிக்​கிறது.
  • ‘ஞானரதம்’ மாதாந்​திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியி​லிருந்து டிசம்பர் வரையான 12 இதழ்​களில் இந்த நாவல் தொடராக வெளிவந்​தது. பின்னர் தனது படைப்புகள் புத்தக வடிவம் பெறு​வதற்​கென்றே அவர் உருவாக்கிய ‘பித்தன் பட்டறை’ பதிப்​பகத்​தின் வெளி​யீடாக 1974இல் நூல் வடிவம் பெற்​றது. இப்புத்​தகத்​தின் இரண்​டாம் பதிப்பை 1983இல் ‘க்ரியா' வெளி​யிட்​டது. அதன் பின்னரே நாவல் பரவலான கவனிப்​புக்கு உள்ளானது. 2010இல் பெங்​கு​வின் பதிப்பக வெளி​யீடாக ‘டுமாரோ ஒன் மோர் டே’ என்கிற தலைப்​பில் ஆங்கிலத்​தில் வெளிவந்​தது. மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா ‘நாள மற்றுமொரு நாள் மாத்​ரம்’ என்கிற தலைப்​பில் மலையாளத்​தில் மொழிபெயர்த்​துள்ளார்.
  • ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலில் விளிம்​புநிலை மனிதர்​களின் வாழ்​நிலைகளை ஜி.என்., இது இப்படியாக இருக்​கிறது என்று மட்டும் விலகி நின்று காட்டு​கிறார். எவ்வித அசட்டு அபிமானமோ பச்சா​தாபமோ அதன்​மீது அவர் கொள்ள​வில்லை. மேலும், அந்த உலகை, பொது​வாகத் தமிழ்ப் படைப்​பிலக்​கி​யத்​தில் செய்​யப்​படு​வதைப் போல, ஆன்மிகத் தளத்​துக்கோ, மீட்​சிப் பாதைக்கோ நகர்த்த முனை​யும் சிறு பிரயாசைகூட இவரிடம் வெளிப்​படு​வ​தில்லை. இக்கதை​யாடல் முறை நவீனத் தமிழ் இலக்​கி​யத்​தில் ஓர் அபூர்​வமான நிகழ்வு. அத்தகையதொரு படைப்பு மனோபாவத்தை முதன்​முறை​யாகத் தமிழ்ப் படைப்பு​லகம் அறிந்​து​கொண்டது அப்போது​தான். மேலும், கலையுணர்​வுக்கு அப்பாற்​பட்ட நோக்​கங்​களி​லிருந்து பூரண விடுதலை பெற்​றவராக இவர் இருந்​து​கொண்​டிருப்பது இவருடைய படைப்புலகைப் பிரகாசிக்க வைக்​கிறது.
  • திரு​வாளத்​தான் வேலைகள் செய்து வாழும்​ கந்​தனின் ஒரு நாளையவாழ்க்கையை அகப்​படுத்​தி​யிருக்​கும் நாவல் இது. கார்​கோடை நகரில் ஒரு ஞாயிற்றுக்​கிழமை அது. தன் குடிசை​யில், காலைக் கனவிலிருந்து விழித்​தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்​கப்​பில் மீண்​டுமொரு அதிகாலைக் கனவிலிருந்து விழித்தெழுவது வரையான ஒரு நாளின் சம்பவங்​களும், கிளைக் கதைகளுமாக நெய்​யப்​பட்டு கந்தனின் கடந்த 12 ஆண்டுக் கால வாழ்க்கையை வடிவ​மைத்​திருக்​கும் நாவல் இது.
  • காலை​யில் எழுந்​தவுடன் உடல் தெம்​படைவதற்​கும் இயங்​கு​வதற்​கும் அந்நாளை எதிர்​கொள்​வதற்​கும் கந்தனுக்​குச் சாராயம் தேவைப்​படு​கிறது. அந்த ஒரு நாளில் அவன் பலமுறை அங்கங்கே தெம்​பேற்றிக் கொள்​கிறான். எழுந்​தவுடன் குடிசை​யில் உருட்​டிப் புரட்டி சாரா​யம், பின் விறகுக் கடைக்​குப் போய் ஜிஞ்​சர், சலூன் சென்று சவரம், வீட்டுக்​குத் திரும்பி மீனா​வுடன் காலைப் புணர்ச்சி, பின் குளித்து​விட்டுச் சலவை செய்த எட்டு முழ வேட்​டி​யும் சில்க் சட்டை​யும் அணிந்​து​கொண்டு, உறையோடு கூடிய ஸ்பிரிங் கத்தியை இடுப்​பில் சொரு​கிக்​கொண்டு கந்தன் குடிசையை விட்டுக் கிளம்​பும்​போது மணி கிட்​டத்​தட்ட ஒன்ப​தரை. பின்னர் வெளியே அவன் அந்த நாளில் மேற்​கொள்​ளும் காரி​யங்​களில் அவனுடைய வாழ்க்கை முறை​யும் எதிர்ப்​படும் நிலை​மை​களைச் சாதுர்​ய​மாகக் கையாளும் திறனும் வெளிப்​பட்​டபடி இருக்​கின்றன.
  • “நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்​கணும்னு திட்டம் போட்​டிருக்​கீங்க?” என்று கேட்​கும் முத்​துச்​சாமி​யிடம், “எந்தத் திட்டம் போட்டு சொர்​ணத்​தம்மா வயத்துல வந்து பொறந்​தேன்?” என்று சிரித்​தபடி கூறும் கந்தன்; “எல்​லார் பிழைப்பும் அப்படியோ இப்படியோ பிடுங்​கித் தின்னறது​தான்” என்று கருதும் கந்தன்; தூங்​கிக்​கொண்​டிருந்த தன்மீது பானையை வீசி​யெறிந்து, உடைத்துநொறுக்​கி​விட்டு, சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்​போய்​விட்ட மகன் சந்திரனைப் பற்றி நினைக்​கும்போது;‘அவன் சுயநலத்​தில்​தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்கமுயன்​றால்​தான் அசட்டுத்​தன​மாகவோ விகார​மாகவோ தோன்றுகிறது’ என்று சிலாகித்​துக் கொள்​ளும் கந்தன்; தன் கனவொன்​றில் சந்திரனைத் தற்செய​லாகத் தெரு​வில் பார்க்​கும்​போதுகூட அவனிடம் பேசவோ, வீட்டுக்கு அழைத்து வரவோ எண்ணம் கொள்ளாத கந்தன் என அந்த நாளில் கந்தன், யோசனை​யாக​வும் அதை நிறைவேற்றும் முகாந்​திர​மாக​வும் ஒரு காரியம் மேற்​கொள்​கிறான். அது படைப்​பை​யும் கந்தனை​யும் புது வெளிச்​சத்​தில் துலங்கச் செய்​கிறது.
  • 12 ஆண்டு​களுக்கு முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்​குமென்று எண்ணி, பாலியல் தொழிலா​ளியாக வாழ்ந்த மீனா​வைத் தற்செய​லாகக் கோயிலில் சந்தித்த மாத்​திரத்​திலேயே அவளை மணக்க விரும்பி மணந்​து​கொள்​கிறான். பின்னர் தன் திரு​வாளத்​தான் தனங்​களோடும், மீனாவைப் பாலியல் தொழில் புரியவைத்​தும், இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்த கந்தன், அன்று காலை தன் உடல் நலம் மோசமாகிக்​கொண்டு வருவதை உணர்​கிறான். அப்போது மீனா குறித்து, ‘இதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்​யறது​தான் நல்லது’ என்று யோசனை கொள்​கிறான். அன்று மாலையே அவன் தரகர் அந்தோணியை அவர் வீடு சென்று சந்திக்​கிறான். அவர்​களுக்​கிடையே நடக்​கும் உரையாடலின் ஒரு பகுதி:
  • “... சரி இப்ப என்ன விஷயம்” என்றார் அந்தோணி.
  • “அதான் சொன்னேனே, மீனா விஷய​மா...”
  • “மீனா​வுக்கு இப்ப என்ன?”
  • “நல்​லாத்​தான் இருக்கு. எனக்​குத்​தான் ஒடம்​புக்கு முன்னே மாதிரி இல்லே. மீனாவை ஒரு நல்ல இடமாப் பாத்து ஒரு ஏற்பாட்​டைப் பண்ணிட்டா, எனக்​குக் கொஞ்சம் நிம்​ம​தியா இருக்​கும்” என்றான் கந்தன்.
  • “போடா, பைத்​தி​யக்​காரா, மீனா தங்கமான பொண்ணு. அது இல்லாட்டி நீ இன்னும் குட்​டிச்​சுவ​ராப் போவே”
  • “நா எப்படி​யும் போறேன். அது எங்காச்​சும் நல்லா இருந்​தாப் போதும்’’
  • கந்தன் தான் வாழும் வாழ்​விலிருந்து தனக்கான தார்மீக நியதி​களைக் கொண்​டிருக்​கிறான் என்பதை இவ்வுரை​யாடல் வெளிப்​படுத்து​கிறது. சம்பிரதாய ஒழுக்​கநெறிகளை உதாசீனப்​படுத்​தும்​போதும் அந்த எளிய மனம்
  • கொள்​ளும் அறவுணர்வின் முன் ​நம்மை மானசீகமாக மண்டி​யிடச் செய்​கிறது இந்த நாவல்.
  • வாழ்க்கையை அவதானிப்​ப​தி​லும், அதன் எண்ணற்ற முகங்களை அறிவ​தி​லும், வாழ்க்கையே பிரதானம் என்ற அவருடைய வேட்கை அவருடைய வாழ்​விலும் எழுத்​தி​லும் வெளிப்​பட்​டபடி இருக்​கிறது. ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலுக்கு முகப்பாக அவர் நாவலாசிரியர் தாமஸ் வுல்ஃபினது மேற்​கோள் ஒன்றை ஆங்கிலத்​தில் முன்​வைத்​திருக்​கிறார். அந்த மேற்​கோள் ஜி.என்.னின் வேட்​கையை நாம் அறிய​வும், அவருடைய படைப்பு​ல​கைப் புரிந்​து​கொள்ள​வும் நமக்கு உதவு​கிறது.
  • அந்த மேற்​கோளின் தமிழாக்​கம்: “கடவுள் எப்போதும் அவருடைய சொர்க்​கத்​தில் இருப்​ப​தில்லை; உலகத்​தில் எல்லாமே எப்போதும் சரியாக இருப்​ப​தில்லை. எல்லாமே மோசமென்​ப​தில்லை, அதே சமயம் எல்லாமே நல்லதென்​பது​மில்லை; எல்லாமே அசிங்​கமில்லை, அதே சமயம் எல்லாமே அழகென்​பது​மில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை - அது மட்டுமே பெறும​தி​யானது; அது காட்டுமிராண்​டித்​தன​மானது; குரூர​மானது; கருணை​யானது; மேன்​மை​யானது; உணர்ச்​சிமய​மானது; சுயநல​மானது; பெருந்​தன்​மை​யானது; மடத்​தன​மானது; அசிங்​க​மானது; அழகானது; வலி நிரம்​பியது; குதூகல​மானது - இவை எல்​லா​மும் அதற்கு மேலும் ​கொண்​டது​தான் வாழ்க்கை. இவை எல்​லா​வற்​றை​யும் நான்​ நிச்​ச​யம்​ அறிவேன்​ - அதற்​காக அவர்​கள்​ என்​னைச்​ சிலுவை​யில்​ அறைந்​து ​கொன்​றாலும்​ சரி” இந்​தக்​ கலை மனம்​ இயக்​கிய கலைஞன்​தான்​ ஜி.என்​. அதன்​ பரிபூரணக்​ கலை வெளிப்​பாடு​தான்​ ‘நாளை மற்​றுமொரு நாளே’.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories