TNPSC Thervupettagam

புயற்காற்று

December 5 , 2024 37 days 57 0

புயற்காற்று

  • (1916 நவம்பர் 22 அன்று புதுச்சேரியில் வீசிய புயல் குறித்து பாரதியார் எழுதிய கட்டுரை)
  • வெள்ளிக்கிழமை; திருக்கார்த்திகை
  • முதலாவது குடிசைகள் வேண்டும். குடிசையில்லாமலும், பிழைப்பில்லாமலும் சில ஜனங்கள் குடியோடிப் போவதாக முத்யாலுப்பேட்டை முதலிய இடங்களிலிருந்து செய்தி கிடைக்கிறது. சில இடங்களில் தரையோடு கிடக்கும் மரங்களை வெட்டும்போது அடியிலே மனிதவுடல் அகப்படு​கிறது. வெள்ள​வாரிப் பக்கத்தில் மரத்தடியில் ஒரு குழந்​தையின் கால் அகப்பட்டது. உடலின் மற்றப் பகுதி காற்றிலே போய்விட்டது. முத்தி​யாலுப்​பேட்​டை​யிலும், மரத்தை ஏலத்தில் எடுத்தவர் வெட்டிப் பார்க்​கும்போது கீழே குழந்​தை​யுடல் கிடந்தது.

நெல்லித் தோப்பு:

  • நெல்லித் தோப்பு என்ற கிராமம் புதுச்​சேரிக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்​திலிருக்​கிறது. இங்கு புயற்​காற்றுக்கு முன்னிருந்த வீடுகளின் தொகை சுமார் 450. இவற்றில் அடியோடே அழிந்​துபோன வீடுகள் 50. சேதப்​பட்டன பல. ஜனச்சேதம் 5 பேர். 3 ஸ்திரீ (பெண்), ஒரு குழந்தை, ஒரு மனிதன். அனைத்​து​மிழந்து, நிர்க்​க​தியாக நிற்போரின் தொகை ஐம்பதுக்கு மேலுண்டு.
  • கால்நடைச் சேதம் 26-க்கு மேல். பெரும்​பாலும் ஒரே மிராசு​தாரின் உடைமை. அங்கிருந்து மேற்கே சுமார் ஒன்றரை மைல் தூரம் போனால், உழவர்​கரைப் பறைச்சேரி என்ற கிராமம். இவ்வூரில் புயற்​காற்றுக்கு முன்னிருந்த வீடுகள் சுமார் 300. இப்போது மிச்சமிருப்பது 4. மற்ற 296 வீடும் காற்றிலே போய்விட்டன. ஜனச்சேதம் 4 பேர். ஒரு மனிதன், 2 ஸ்திரீகள், ஒரு குழந்தை.

கருவடிக்​குப்​பத்துப் பறைச்சேரி:

  • முத்​யாலுப்​பேட்​டைக்கு மேற்கே கருவடிக்​குப்பம். இதை ஜனங்கள் கரடிக்​குப்பம் என்று சொல்வார்கள். இங்குள்ள வீடு தொண்ணூறும். அந்தத் தொண்ணூறும் புயற்​காற்றிலே அழிந்து போயின. புயற்​காற்றுக்கு மறுநாள் புதுச்​சேரியில் இலேசான மழை பெய்தது. அந்த மழை கருவடிக்​குப்​பத்தில் பலமாகப் பெய்த​தாக​வும், அதனால் சில கால்நடைகள் மடிந்​த​தாகவும் தெரிகிறது.

உபகாரம்:

  • முத்தி​யாலுப்​பேட்​டை​யிலும், வேறு சில இடங்களிலும் ஹாஜி மஹமதுஹனீப் ஸாஹீப் என்ற பட்டணத்து வியாபாரியின் தர்மங்கள் பிரபலமாக நடக்கின்றன. இவருடைய வியாபார ஸ்தலத்​துக்கெதிரே (முத்​​யாலுப்​பேட்​டை​யில்) புயற்​காற்றுக்கு மறுநாள் விடியற்​காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் பொருட்டாக மூட்டிய அடுப்பு இன்னும் அவிக்க​வில்லை. வேறு பல ஜனோபகாரிகள் தத்தம்மால் இயன்ற உதவி செய்து வருகிறார்கள்.

வீடு:

  • பள்ளத்து வீதியில் புயற்​காற்​றடித்தபோது ஒரு கிழவன் மரம் விழுந்து செத்துப் போனான். அவன் வீட்டைப் பார்க்​கப்​போனபோது வழியெல்லாம் இடிசுவர். இடிசுவர்​களைத் தாண்டி அப்பாலே போனால், அங்கே அந்தக் கிழவனின் மனைவி தன்னுடைய ‘வீடு இதுதான்’ என்று காண்பித்​தாள். ஒரே ஒரு சிறிய கதவும், அதன்மேலே இரண்டு தென்னை மரங்களும் விழுந்து கிடந்தன. அதுதான் வீடு. வீடே அவ்வளவு​தான். மற்ற மண்பொடி​யெல்லாம் காற்றிலும் மழையிலும் போய்விட்டது. அந்த ஒற்றைக் கதவு மாத்திரம் தென்னை மரங்களின் பாரத்தால் பறந்து போகவில்லை.

சிறு களவு:

  • குடிசைகள் விழுந்​தவுடனே மண்பாண்​டங்கள் நொறுங்​கிப்​போயின. எனினும் சில இடங்களில் துணி மூட்டையும் மிஞ்சி​யிருந்தது. அது களவு போனதாகப் பல ஏழை வீடுகளில் துலங்​கு​கிறது! புயற்​காற்று, களவை அடித்​துக்​கொண்டு போகவில்லை.

நெருப்பு மழை:

  • வானத்​திலிருந்து நெருப்புத் துண்டுகள் சில ஸமயங்​களில் விழுமென்பது நவீன வான சாஸ்திரம் படிப்​பவருக்கு நன்றாகத் தெரிந்த விஷயமே. ஸாதாரண காலங்​களில் எரி நக்ஷத்திரங்களாக வந்து விழுந்து காற்றோடு கலந்து போகிற கோளங்கள், சில ஸமயங்​களில் கட்டித்​துண்​டுகளாக மண்மேல் எரிந்​து​கொண்டு விழும்.
  • புயற்​காற்​றடித்த இரவில் அவ்விதமான நெருப்புமழை சில இடங்களில் பெய்ததாக வதந்தி யுண்டாகிறது. கூடப்​பாக்​கத்தில் சில மரங்கள் கரிந்து போயிருப்​ப​தாக​வும், மற்றும் சில இடங்களில் மனிதர் உடல் வெந்து போயிருப்​ப​தாகவும் சொல்லப்​படு​கிறது. இதில் எத்தனை தூரம் உண்மையோ தெரிய​வில்லை.
  • (சுதேசமித்​திரன், 11 டிசம்பர் 1916, ப. 6)

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories