புயல் நிவாரண நிதி போதுமானதா?
- தமிழ்நாட்டில், கடந்த 2024 நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது.
- தற்போது பயிர்ச் சேதங்கள் கணக்கிடப்பட்டு, இப்புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,18,783 விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.498.8 கோடி வழங்கப்படும் என்கிற அரசாணையைத் தமிழக அரசு பிப்ரவரி 19, 2025 அன்று வெளியிட்டுள்ளது. பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறிவருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன?
தரவுகளில் குழப்பம்:
- அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்கள் பற்றிய தரவுகளை முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, இம்மாவட்டங்களில் மொத்தமாகப் பாதிப்புக்குள்ளான 3.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு வேளாண் - தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்திருந்த 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த மதிப்பீடானது, கணக்கெடுப்பு நடத்தப்பட்ட மாவட்டங்களின் மொத்த சாகுபடிப் பரப்பளவோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளதால், எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பரப்பளவு கணக்கிடப்பட்டுள்ளது என்கிற கேள்வி முதலில் எழுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பயிர்களின் பரப்பளவைக் கணக்கிட்டு மதிப்பீடு செய்வதில் முரண்பாடுகள் இருந்தாலும், பயிர், ஆடு, மாடுகளை முற்றிலும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் மிகவும் குறைவாகவே உள்ளது.
- அரசு அறிவிப்பின்படி, புயலால் பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டேர் மானாவாரிப் பயிருக்கு 8,500 ரூபாயும், நெல் - பாசன வசதி பெறும் பயிர்களுக்கு 17,000 ரூபாயும், நீண்ட காலப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 22,500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. பயிர்களுக்கான சாகுபடிச் செலவு மிகவும் அதிகம் உள்ளபோது, இவ்வளவு குறைவான நிவாரணம் எந்தத் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
- பயிர்களின் விலை நிர்ணயத்துக்காக, அறிவியல்பூர்வமாகத் தரவுகளைத் திரட்டி வெளியிட்டுவரும், மத்திய அரசின் விவசாயச் செலவு - விலை ஆணையம் (Commission for Agricultural Costs and Prices) 2024-25இல் வெளியிட்டுள்ள விலைக் கொள்கை அறிக்கையின்படி, தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடி செய்வதற்கு ஆகும் செலவு (மதிப்பீட்டுக்குப் பயன்படுத்தும் செலவுக் காரணியைப் பொறுத்து) ரூ.67,064 முதல் ரூ.88,380 என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஆனால், தமிழக அரசால் நெல் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணமான ரூ.17,000, அதன் சாகுபடிக்கு ஆகும் செலவில் கால் பகுதியைக்கூட ஈடுகட்ட முடியாத அளவில் உள்ளது. மானாவாரிப் பயிர்களான சோளம், நிலக்கடலை, பருத்தி போன்ற பயிர்களைத் தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்வதற்கு ஆகும் செலவு ரூ.63,767 முதல் ரூ.1,24,493 என விவசாயச் செலவு - விலை ஆணையம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் வெறும் ரூ.8,500 மட்டுமே.
- நீண்ட காலப் பயிர்களான கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணமும் மிகவும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் கரும்புச் சாகுபடி செய்வதற்கு ஆகும் செலவு ரூ.1,89,742 முதல் ரூ.2,49,971 என விவசாயச் செலவு - விலை ஆணையம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், நீண்ட காலப் பயிர்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் வெறும் ரூ.22,500 மட்டுமே.
- இப்படி குறைவான நிவாரணத் தொகை கொடுத்தால், விவசாயிகள் பயிர்ச் சாகுபடிக்கான செலவை எப்படி ஈடுகட்ட முடியும்? அதிகக் கடன் தொல்லையில் ஏற்கெனவே சிக்கித் தவிக்கும் விவசாயிகளால் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கட்ட முடியும்? நிவாரணம் கொடுப்பதற்கு அறிவியல் பூர்வமாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவது அவசியமில்லையா?
கஜா புயலிலும் இதுதான்:
- இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களும் பயிர்ச் செலவினங்களைக் கருத்தில் கொள்ளாமல், மிகவும் குறைவான அளவுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்துள்ளார்கள். 2018 நவம்பரில் வீசிய கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. பல ஆண்டுகளாகத் தென்னைச் சாகுபடிக்குப் பெயர் பெற்ற பேராவூரணி - பட்டுக்கோட்டை பகுதிகளில், யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் பாதிப்பை விவசாயிகள் எதிர்கொண்டார்கள்.
- ஆனால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட தென்னை மரத்துக்கு நிவாரணமாக ரூ.600, அவற்றை வெட்டி அப்புறப்படுத்த ரூ.500 என மொத்தமாக ஒரு மரத்துக்கு ரூ.1,100 நிவாரணமாக வழங்கப்படும் எனக் கூறி அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கணக்கை முடித்துவிட்டார்கள். கரும்பு, வாழை, நெல், காய்கறிகள், மலர்கள் போன்ற பயிர்களும், கஜா புயலால் அடியோடு அழிக்கப்பட்டன. விவசாயச் செலவு - விலை ஆணையம் தமிழ்நாட்டுக்காக வெளியிட்ட பயிர்ச் செலவு பற்றிய தரவுகள் கையில் இருந்தும், அப்போதைய அரசு இப்பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே அறிவித்தது.
என்ன செய்ய வேண்டும்?
- மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் வேலை ஆள்களின் கூலிச்செலவு மிகவும் அதிகமாக உள்ளதால், பயிர்ச் சாகுபடிக்கு ஆகும் மொத்தச் செலவு தமிழகத்தில் மிகவும் அதிகம் உள்ளதாக விவசாயச் செலவு - விலை ஆணையம் வெளியிட்டுள்ள விலைக் கொள்கை அறிக்கையின் தரவுகள் கூறுகின்றன.
- நெல் சாகுபடியில் முன்னோடி மாநிலங்களாக உள்ள பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிஷா போன்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடி செய்வதற்குத் தேவைப்படும் செலவு மிகவும் அதிகம். எனவே, சரியான தரவுகளைக் கொண்டு, குறைந்தபட்சம் பயிர் சாகுபடிக்குச் செய்யப்பட்ட செலவுகளை ஈடுகட்டும் அளவுக்காவது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
- பயிர்ச் சாகுபடி அதிகச் செலவு கொண்ட தொழிலாகத் தற்போது மாறிவிட்டது. எனவே, வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் போன்றவர்களைக் கொண்டு பயிர்களின் சேதத்தை மதிப்பிடுவதைத் தவிர்த்து, விவசாயம் பற்றி நன்கு அறிந்த அறிஞர்களைக் கொண்டு குழு அமைத்துப் புயலால் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புகளை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், குளங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, விவசாயிகள் உடனடியாகப் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு அதன் நடப்பு சந்தை மதிப்பீட்டைக் கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அத்துடன் விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, சொட்டு நீர்ப்பாசனம், டிராக்டர் - விவசாயத் தளவாடங்களைப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குக் கூடுதல் மானிய விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் பயிர்ச் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ள காரணத்தால், மற்ற பெரிய மாநிலங்களைவிட தரிசு நிலங்களின் பரப்பளவு அதீத வேகமாக உயர்ந்துவருகிறது. புயல், வெள்ளம் போன்ற காலங்களில் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு, உரிய நிவாரணம் கொடுக்கவில்லை என்றால், பயிர்ச் சாகுபடிப் பரப்பளவு மேலும் குறைந்து, உணவு உற்பத்தியும் குறையும். இதனால் பணவீக்கம் ஏற்படக்கூடும் என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் மறந்துவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 03 – 2025)