TNPSC Thervupettagam

புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் ஆனார்!

October 17 , 2021 1136 days 915 0
  • தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுக, 49 ஆண்டுகளுக்கு முன்னால் இதே அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கப்பட்டது. திமுக அப்போது ஆளுங்கட்சி. எம்ஜிஆர் அதன் பொருளாளர்.
  • திருக்கழுக்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்ஜிஆர், திமுகவில் ஊழல் நடப்பதாகச் சில கட்சித் தொண்டர்கள் தன்னிடம் கூறியதாகவும் அது குறித்துப் பொதுக் குழுவில் கேட்கவிருப்பதாகவும் பேசினார்.
  • அதற்கு அடுத்த நாள், லாயிட்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் திமுக கட்சித் தொண்டர்களைச் சந்தித்து, அது குறித்து விவாதிக்கவும் செய்தார்.
  • கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான இந்த முரண்பாட்டுக்கு உண்மையான காரணம் என்னவென்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
  • எம்ஜிஆரின் செல்வாக்கு அதிகரித்தது முக்கியமான காரணம். கருணாநிதி மதுவிலக்கை விலக்கிக் கொண்டது என்பது எம்ஜிஆர் ஆதரவாளர்களால் சொல்லப்பட்ட காரணம்.
  • இந்திரா காந்தி வருமான வரித் துறையை ஏவி திமுகவுக்கு எதிராக எம்ஜிஆரைத் திருப்பி விட்டார் என்பது திமுகவினரால் சொல்லப்பட்ட காரணம். தன்னைச் சுட்ட குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்துவந்த எம்.ஆர்.ராதாவை மூன்றாண்டுகளுக்கு முன்பே விடுவித்துவிட்டார்கள் என்ற எம்ஜிஆரின் வருத்தமும் ஒரு காரணமாக யூகிக்கப்படுகிறது.
  • எப்படியோ பற்றிக்கொண்டது நெருப்பு. மதுரையில் இருந்த முதல்வர் மு.கருணாநிதிக்குத் தகவல்கள் விரைந்தன. பொதுக் குழுவில் கலந்துகொள்வதற்கு முன்பே கட்சியிலிருந்து எம்ஜிஆர் விலக்கப்பட்டார்.
  • கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரிடமிருந்தும் தொலைபேசி வாயிலாகவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அக்.8 அன்று சென்னை ஏவி.எம்.இராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்த திமுக பொதுக் குழுவில் எம்ஜிஆருக்கு எதிரான சுவரொட்டிகள் விநியோகிக்கப் பட்டன. ‘மொழிப் போரில் பாளையங்கோட்டையில் தனிச் சிறையில் கலைஞர், கோவா கடற்கரையில் காதல் காட்சியில் எம்ஜிஆர்’ என்பது அச்சுவரொட்டிகளின் பிரதான வாசகம்.
  • எம்ஜிஆருக்கு ஏமாற்றம்தான். அவர் எதிர்பார்த்ததுபோல சட்டமன்ற உறுப்பினர்களோ, பொதுக் குழு உறுப்பினர்களோ, பெரும்பான்மையான தொண்டர்களோ அவருக்கு ஆதரவாக எழுந்துவிடவில்லை.
  • இதையடுத்து, அக்.17 அன்று அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராக கே.ஏ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். எம்ஜிஆருக்கு ‘புரட்சித் தலைவர்’ என்று பட்டம் சூட்டியவரும் அவர்தான்.
  • கடற்கரையில் நடந்த அதிமுகவின் தொடக்க விழாவில் “புரட்சி நடிகர் பட்டம் வேண்டாம், இனிமேல் எம்ஜிஆரை ‘புரட்சித் தலைவர்’ என்று அழைப்போம்” என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி. கொள்கைப் பரப்புச் செயலாளராக எஸ்.டி.சோமசுந்தரம் பொறுப்பேற்றார். எஸ்.ஆர்.ராதாவும் முனு ஆதியும் தொழிற்சங்கப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
  • அதற்கடுத்த மாதங்களில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் திரையிடப்பட்ட அரங்குகளில் எல்லாம் ரகளைகள் நடந்தன. அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளுக்குக் காவல் இருந்தனர்.
  • 1973-ல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில்தான் அதிமுக முதன்முதலாகப் போட்டியிட்டது. அக்கட்சிக்கு அப்போது ஒதுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னமே பின்பு அக்கட்சியின் மொத்த அடையாளமாகவும் மாறிப்போனது.
  • திண்டுக்கல் இடைத்தேர்தலில் பெருவெற்றி. ஆனால், அதற்கடுத்த ஆண்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் திமுகவைத் தோற்கடிக்க முடிந்தது.
  • இந்தக் காலகட்டத்தில் ‘தென்னகம்’ இதழில் எம்ஜிஆர் பெயரில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் பிரசுரமாயின. அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு என்று பல்வேறு விஷயங்களைப் பற்றியதாக அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன. நடிகன் குரல், சமநீதி ஆகிய இதழ்களிலும் அவர் பெயரில் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாயின.
  • திமுகவுக்கு எதிரான எழுத்துப் போராட்டம் என்று இந்தக் காலகட்டத்தைச் சொல்லலாம்.

மக்களும் எதிர்பார்க்கிறார்கள்

  • கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த தந்தை பெரியார் பற்றிய பாடம் கடைசி நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன் என்று எம்ஜிஆர் எழுப்பிய கேள்வி பெரும் விவாதமாக மாறியது.
  • பின்பு, எம்ஜிஆர் முதல்வரானபோது பெரியாரின் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் போராட்டம் நடத்திய வைக்கத்தில் 1985-ல் தமிழ்நாடு அரசின் சார்பில் 0.75 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, அங்கு பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது.
  • நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டது.
  • 39 இடங்களில் 35 இடங்களை இக்கூட்டணி வெற்றிகொண்டது. அடுத்த இரண்டாவது மாதத்தில், சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸிலிருந்து விலகி, அதிமுக தனித்தே போட்டியிட்டது. காங்கிரஸ், ஜனதா, திமுக, அதிமுக என்று நான்கு முனைப் போட்டி.
  • அதிமுகவின் கூட்டணியில் சிபிஐ(எம்) இடம்பெற்றிருந்தது. அதிமுகவின் வெற்றியில் மட்டுமில்லை, அக்கட்சியின் உருவாக்கத்திலுமே கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. சிபிஐ சார்பில் எம்.கல்யாணசுந்தரமும், சிபிஐ(எம்) சார்பில் ஏ.பாலசுப்பிரமணியமும் எம்ஜிஆருக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.
  • சட்டமன்றத்தின் உள்ளே கே.டி.கே.தங்கமணி அதிமுகவின் கேடயமாகவே இருந்தார். அந்த நன்றியுணர்ச்சி எப்போதுமே எம்ஜிஆரிடம் இருந்தது. முதல்வராக இருந்தபோது, பொதுவுடைமை இயக்கத் தலைவர் மணலி கந்தசாமியின் உடலை இடுகாட்டுக்கு அவரும் ஒருவராக வெறுங்காலுடன் சுமந்துசென்றார்.
  • ஈழ விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவு, மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தியது, ஆதரவற்ற பெண்களைச் சமையலர்களாகப் பணியமர்த்தியது, பொறியியல் கல்விக்கான உடனடித் தேவையைக் கருத்தில் கொண்டு சுயநிதிக் கல்லூரிகளை அனுமதித்தது என்று எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தின் பல்வேறு பணிகள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன.
  • ம.பொ.சி. தலைமையில் நாற்பது தமிழறிஞர்கள் அடங்கிய குழுவின் வழிகாட்டுதலோடு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்.
  • திரு.வி.க.வுக்கும் டி.கே.சி.க்கும் தமிழக அரசின் சார்பில் நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்பட்டன. திரு.வி.க. பெயரில் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்கும் திட்டத்தையும் அவர்தான் 1979-ல் தொடங்கிவைத்தார்.
  • பொருளாதார இடஒதுக்கீடு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு எழுந்த எதிர்ப்பை அவர் உடனடியாகப் புரிந்துகொண்டார்.
  • பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்ட எம்ஜிஆர், பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தினார். அதனால், எம்ஜிஆரை எதிர்த்தவர்களே அவருக்கு ஆதரவாளர்களாயினர்.
  • கிராமங்களின் நிர்வாக முறையில் எம்ஜிஆர் கொண்டுவந்த சீர்திருத்தம் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • பரம்பரை முறையிலான கர்ணம் பதவி நீக்கப்பட்டு, சமூகத்தின் அடித்தட்டு நிலையில் இருப்பவர்களும் கிராம நிர்வாக அலுவலர்களாகும் வாய்ப்பைப் பெற்றனர்.
  • ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 69% இடஒதுக்கீடு அரசமைப்பின் பாதுகாப்பைப் பெற்றது. கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடையிலான உள் இடஒதுக்கீடும் கவனத்தை ஈர்த்துள்ளன.
  • சமூக நீதி தொடர்பில் திமுகவுக்கு எப்போதுமே இணையாக நிற்கும் அதிமுக, மாநில உரிமைகளில் மட்டும் அவ்வப்போது பின்வாங்கிவிடுகிறது என்ற விமர்சனங்களும் நிலவுகின்றன.
  • அதிமுக 1973-ல் சந்தித்த முதல் மக்களவை இடைத்தேர்தல் தொடங்கி, சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் வரையில் அதன் தேர்தல் அறிக்கைகளில் எல்லாம் மாநில உரிமைகள் குறித்த விஷயங்களே முதன்மையாக இடம்பெறுகின்றன.
  • எனினும், கடந்த ஆட்சிக் காலத்தின்போது மத்திய அரசுக்கும் அதற்குத் தலைமை வகிக்கும் தேசியக் கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவாளராக அதிமுக மாறிவிட்டது.
  • ஆனால், அதிமுக தானும் திராவிட இயக்கத்தின் வாரிசுதான் என்ற எண்ணத்தை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடுவதும் இல்லை.
  • முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த சில நாட்களுக்கு முன்பு காமதேனு இதழுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார்: “பொத்தாம்பொதுவாக திராவிட இயக்கங்களை எச்.ராஜா சாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” இந்தக் குரலைத்தான் மக்களும் அதிமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories