TNPSC Thervupettagam

புரிதலற்ற நீர் மேலாண்மை

September 19 , 2019 1949 days 1726 0

· காவிரியில் வந்த வெள்ளத்தைச் சேமித்து அதைப் பயன்படுத்தக் கூடிய அளவில் நமக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.  

·  கடலுக்குச் செல்ல வேண்டிய நீர், ஆறுகளில் அவசியம் பாய்ந்தோடித்தான் ஆகவேண்டும். அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. அதை மறுக்கவில்லை. எனினும், வெள்ள காலங்களில் அதிகமாக வீணாகும் நீரைச் சேமிக்க நீண்டகாலத் திட்டங்களை நாம் நிறைவேற்றவில்லை என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

காவிரியின் நிலை

· காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் முதலான மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.

· மேலும் 15 மாவட்டங்களின் குடிநீருக்கும் காவிரி நீர் பயன்பட்டு வருகிறது.
டெல்டா பகுதியில் குறுவை,  சம்பா, தாளடி  என மூன்று போகத்துக்கு காவிரி நீர்தான் விவசாயத்துக்குக் கை கொடுக்கிறது. இதற்கு சுமார் 340 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. இது சுமார் 8 மாதத்துக்குத் தேவையான நீராகும்.

· ஆனால், குடிமராமத்துப் பணிகள் மட்டும் சரியாக நடப்பதில்லை. ஆக்கிரமிப்புகள், தூர்வாரும் பணிகள் என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

· நீர்நிலைகளும், வாய்க்கால்களும் பாதிக்கப்பட்டு சரியான நீர்ப் பாசனம் இல்லை;

ஏனைய ஆறுகளின் நிலை

· மற்றொரு புறம் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதைச் சேமித்து வைக்கும் அமைப்புகளும் இல்லை. காவிரி நதி தீரத்தில் மட்டுமல்லாமல், ஏனைய பாலாறு, அமராவதி, வைகை, தாமிரவருணி போன்ற 17 நதிப் படுகைகளிலும் இதே நிலைதான்.

· தமிழகத்தில் மழைக் காலங்களில் வெள்ளத்தால் வரும் தண்ணீரை கடலுக்குச் சென்றதுபோக ஓரளவுக்குச் சேமிக்கலாம். அதைச் சரியாக கவனிப்பதும் இல்லை.

· மேட்டூர் அணை நிறைந்து, காவிரியிலும், கொள்ளிடத்திலும் திறந்து விடுவதால் தேவைக்கு அதிகமான நீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொள்ளிடத்தில் மட்டும் 227 டி.எம்.சி. தண்ணீர் வங்கக் கடலுக்குச் சென்றுள்ளது.

· கொள்ளிடம் ஆற்றில் மட்டுமல்ல, காவிரி ஆற்றின் குறுக்கே  25 தடுப்பணைகள் கட்டலாம். அப்படிக் கட்டும்போது மேட்டூரிலிருந்து வெள்ள காலத்தில் வரும் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

காவிரி டெல்டா

· மேட்டூர் அணையிலிருந்து நீர் வரும்போது காவிரி  தண்ணீர், கல்லணை நீர், வெண்ணாறு, கொள்ளிடம் என நான்காகப் பிரிந்து அரசலாறு, வெட்டாறு, மண்ணியாறு, பாமினியாறு என இறுதியில் 36 கிளை சிற்றாறுகளாகப் பிரிந்து நீர் செல்கிறது.

· இதனால் தஞ்சாவூர் டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தெற்கே புதுக்கோட்டை மாவட்டமும் வடக்கே கொள்ளிடப் பகுதிகள் வரை பலன் அடையும்.
காவிரி நீர் செல்லும் பாதையில் பாசன வாய்க்கால்களை எப்படி முறைப்படுத்தலாம் என்று அன்றைய ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் திட்டமிட்டதால் சில வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.

· பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் ஆயக்கட்டு, குடிமராமத்து திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் முதன்முதலாக அறிவிக்கப்பட்டன. இந்த வாய்க்கால்கள் மூலமும்  தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் போன்றவை மூலமும் தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். நிலத்தடி நீரும் உயரும். பம்புசெட்டுகளுக்கும் நீராதாரங்கள் பெருகும்.

· சுமார் 77 ஆண்டுகால (அதாவது 1936 முதல் 2013 வரை) தரவுகளின்படி,  சுமார் 40 முறை கொள்ளிடம் அணை திறக்கப்பட்டு சுமார் 3,025 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 1971லிருந்து 2018 வரை 48 ஆண்டுகளில் 27 ஆண்டுகள் 1,198.76 டி.எம்.சி நீர் வீணாகக் கடலுக்குச் சென்றுள்ளது (சராசரியாக 47 டி.எம்.சி நீர் கடலுக்குச் செல்கிறது).

· அதாவது, கடந்த 27 ஆண்டுகளில்  மேட்டூர் அணையின் கொள்ளளவில் 12 மடங்குக்குக் கூடுதலான நீர் வீணடிக்கப்பட்டுள்ளது.
வெண்ணாற்றிலிருந்து வெள்ளம் வந்தால் 55 டி.எம்.சி நீர் கடலுக்குச் செல்வது  வாடிக்கையாகிவிட்டது.

· ஒரு டி.எம்.சி. என்பது விநாடிக்கு 28.317 லிட்டர் கனஅடி நீர் வெளியேறுவதைக் குறிக்கும். இந்த நீரை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தலாம்.
கடந்த 2013-இல் கொள்ளிடம் ஆற்றிலிருந்து 12 டி.எம்.சி. நீர் கடலுக்குச் சென்றது.

· மேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் வெளியேறியதால் காவிரியில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அணை உடைந்தது.  இந்த ஆண்டும் அணைக்கு சேதம் ஏற்பட்டது.

· அண்மையில் விநாடிக்கு 30,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வெள்ளமாக எந்தவிதப் பயன்பாடின்றி கடலுக்குத்தான் சென்றது.
நீரைச் சேமித்து வைக்கத் தவறுகிறோமே என்ற குற்ற உணர்வு நமக்கு ஏற்படுவதே இல்லை. தண்ணீர் வரவில்லை என்று தவிக்கிறோம்.

நீர் மேலாண்மை

· ஒருபுறம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் மதிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. வெள்ளம் ஏற்படும்போது அதைச் சேமித்து வைக்கத் தவறுகிறோம்.

· காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மேற்குறிப்பிட்டவாறு தடுப்பணைகள் மட்டுமல்லாமல் மாயனூர் அணையிலிருந்து நேராக கால்வாய் வெட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வெள்ளக் காலங்களில் கொண்டு செல்லலாம்.

· மாயனூரிலிருந்து மற்றொரு கால்வாய் வெட்டி தெற்கு நோக்கி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டு செல்லலாம். இதற்கான திட்டச் செலவு ரூ.6,000 கோடி வரை ஆகும்.

· வானம் பார்த்த சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் கிராமங்களுக்கு இந்த வெள்ள நீர் பயன்படும்.

· அதேபோல, கல்லணையில் வரும் வெள்ளத்தை கல்லணை கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வரை கொண்டு செல்லலாம்.

· கல்லணைத் தண்ணீரை வீராணம் ஏரிக்குக் கொண்டுவந்தால் சென்னைக் குடிநீருக்கும் பயன்படும்.

· காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாற்றுப் படுகையில் புதிய நீர்நிலைகளை அமைத்து வெள்ள நீரைச் சேமிக்கலாம்.

· மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக தண்ணீர் நிரம்ப திறந்துவிட்டாலும் சில கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராதது வேதனை.

· மேட்டூர் அணை நிரம்பினால் மாயனூர், முக்கொம்பு, கல்லணையில் இந்த நீரைச் சேமிக்கலாம் என்றாலும், அதற்குரிய விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

· தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே இதற்கான பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். ஆனால், வெள்ளம் வந்தால்தான் என்ன செய்வது என்று யோசிக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமில்லை. 

· காவிரிப் படுகையில் நீர்வளம் 311.86 டி.எம்.சி.யாகும்; இது தமிழக நீர்வளத்தில் 18.98% ஆகும்.  காவிரியைப் பாதுகாக்கவும், அதன் தண்ணீர் நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் எல்லோரும் இணைந்தால் மட்டுமே முடியும்.

· மனிதனின் அன்றாடத் தேவை, வேளாண்மை, மரபு ரீதியான கலாசாரம், தமிழ் நிலத்திற்கும் அதற்கும் உள்ள உறவு என்ற உயிரோட்டத்தோடு  காவிரி நீர்வரத்தை  அணுக வேண்டும்.

· காவிரியை நாம் வணங்குகிறோம். வெள்ளம் வந்தால் உபரி நீர் என்றும், நீர் வரத்தே இல்லாவிட்டால் வறட்சி, பற்றாக்குறை என்று பேசாமல் அதைச் சமன்படுத்தும் அளவில் நீர் மேலாண்மையை காவிரியில் நிலைநாட்டி, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

· மேட்டூரில் தண்ணீர் திறந்தால் கல்லணைக்கு முதல் நாள் அடைந்ததில் இருந்து கொள்ளிடம் என்ற படுகையில் செல்லும் நீர் 3,004 கனஅடி ஆகும். காவிரி, வெண்ணாறு பாசனப் படுகையில் செல்வது 2,600 கனஅடி ஆகும். இது ஒரு கூட்டுக் கணக்கு.

· வெறும் பூமியில் உள்ள வாய்க்கால்தானே என்று பராமரித்து தூர்வாராமல் நாம் விட்டுவிடுகிறோம். அதனால் ஏமாறுகிறோம்.
நமக்கு தண்ணீர் வரவில்லை; தண்ணீரையும் சேமிக்க வேண்டும்; தூர்வாரி, பொது மராமத்தையும் ஊர் மக்கள் இணைந்து செய்ய வேண்டும்.

· காவிரியில் மணலை அள்ளி கபளீகரம் செய்து இயற்கையின் அருட்கொடையை நாசப்படுத்தினோம். எப்போதும் காவிரியில் நீர் வரவில்லை என்ற பற்றாக்குறை கோஷங்கள்தான் அதிகம். வெள்ளம் வந்தால் ஒருசில மணி நேரங்களிலேயே உபரி, பெருக்கு என்று சத்தம் போடுகிறோம்.
இதற்கெல்லாம் காரணம் யார்?

· நியாயமாக வழங்க வேண்டிய நீரை  கர்நாடகம் வழங்குவதில்லை. வெள்ளம் வந்தால் நீரை அனுப்புகிற வடிகாலாகவே தமிழகத்தைப் பார்க்கிறது. ஆளவந்தார்களுக்கும் காவிரி வெள்ளத்தை கடலுக்குச் செல்வது போக மீதமுள்ள தண்ணீரை எப்படிச் சேமிப்பது என்று அறிவியல்பூர்வமான புரிதல் இல்லை. ஏன், காவிரி பாய்ந்தோடும் சேலம் மாவட்டத்துக்கு வெள்ளம் வந்தால் அதைத் தடுத்து சேமிக்கும் நீர்நிலைகளையும் புதிதாக உருவாக்கலாம்.

· இப்படி காவிரி பிரச்னை போன்று,  தமிழகத்தில் உள்ள அனைத்து நீராதாரங்கள் குறித்து சரியான அணுகுமுறை இல்லாமல் இருப்பதால் தண்ணீருக்குத் தவிக்கிறோம். இனியாவது நதி நீர் மேலாண்மை குறித்து தொழில்சார்ந்த அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஆவன செய்வார்களா?

நன்றி : தினமணி (19-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories