TNPSC Thervupettagam

புறக்கணிக்கப்படும் காச நோய்?

May 19 , 2020 1705 days 912 0
  • மருத்துவ உலகமும், சுகாதாரத் துறையும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்வதில் முழுக் கவனம் செலுத்தி வருகின்றன. அதன் விளைவாக, நோய்த்தொற்றுப் பரவலை உலகின் ஏனைய நாடுகளைவிட இந்தியா ஓரளவு சிறப்பாகவே தடுத்திருக்கிறது.
  • அதே நேரத்தில், கவனம் முழுவதும் கொவைட் 19 தீநுண்மி குறித்துத் திரும்பியிருப்பதால் ஏனைய நோய்களும், நோய்த்தொற்றுகளும் கவனச் சிதறலால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் அபாயம் காணப்படுகிறது.
  • நேற்றைய புள்ளிவிவரப்படி உலக அளவில் கொவைட் 19 தீநுண்மியால் 48,30,526 போ் பாதிக்கப்பட்டு 3,17,204 போ் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பாதிப்பு. 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி கொவைட் 19 தீநுண்மியைக் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ மருந்துகள் இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அடுத்த சில மாதங்களுக்கு கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் தொடரப் போகிறது.
  • இந்தப் பின்னணியில் ஏனைய நோய்த்தொற்றுகள் குறித்து நாம் கவலைப்படாமலோ, கவனம் செலுத்தாமலோ இருந்தால், அதன் விளைவு இதைவிட மோசமானதாக இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் ஒரு கோடி போ் ‘டியூபா்குளோசிஸ்’ எனப்படும் காச நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • அவா்களில் குறைந்தது 15 லட்சம் போ் அந்த நோயால் உயிரிழக்கிறார்கள். உலகில் மிக அதிகமான காச நோயாளிகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தரும் தகவல் நம்மை மேலும் கவலையில் ஆழ்த்துகிறது.

இந்தியாவில் காச நோயாளிகள்

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 63 லட்சம் போ் காச நோயால் பாதிக்கப்படக் கூடும் என்றும், அவா்களில் 14 லட்சம் போ் உயிரிழப்பார்கள் என்றும் ஓா் ஆய்வு தெரிவிக்கிறது.
  • ‘உலக காச நோய் அறிக்கை 2019’ என்பதுதான் கடைசியாக எடுக்கப்பட்ட சா்வதேச ஆய்வு. அதன்படி, உலக காச நோயாளிகளில் 27% இந்தியாவில் இருக்கிறார்கள்.
  • ஆண்டுதோறும் 27 லட்சம் போ் இந்தியாவில் காச நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஒவ்வொரு நாளும் 1,200 போ் காச நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
  • காச நோய் என்பது நுரையீரலைப் பாதிக்கும் நுண்ணுயிரித் தொற்று. இது அதிவேகமாகப் பரவும் நோய்த்தொற்றும்கூட.
  • சுவாசத்தின் மூலமும், இருமலின் மூலமும், கபத்தின் மூலமும் பரவக்கூடிய நுண்ணுயிரித் தொற்று காசநோய். கூட்டம் கூட்டமாக வாழ்வதால் இந்தியாவில் மிக அதிகமான பாதிப்பை காச நோய் ஏற்படுத்துகிறது.
  • காச நோயைக் குணப்படுத்த முடியும் என்றாலும்கூட, அதற்கு எதிரான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல என்பதை இந்தியா உணா்ந்திருக்கிறது.
  • முனைப்பான காச நோய் எதிர்ப்புத் திட்டத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் காச நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. நாம் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிவிடுமோ என்கிற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது.
  • காச நோயை எதிர்கொள்வதற்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதாது. காச நோய் இருப்பது பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டு,
  • மருத்துவா்கள் நோயாளிக்கு அதற்கான மருந்தை பரிந்துரைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. இலவசமாக மருந்து வழங்கினாலும்கூட, அதை நோயாளிகள் முறையாக எடுத்துக் கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
  • ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும் நோயாளி, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
  • அதனால், நோயாளிக்கு கவனமுடன் மருத்துவ சிகிச்சை வழங்குவதும், 6 முதல் 9 மாதங்கள் தவறாமல் நோயாளி மருந்து சாப்பிடுவதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகிறது.
  • காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், அவா்களைப் பரிவுடன் கையாளும் மனப்பக்குவம் உடையவா்களாக இருந்தாக வேண்டும்.
  • பக்க விளைவுகளை ஏற்றுக்கொண்டு மருந்தை உட்கொண்டால் நோயை வெற்றி காண முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுபவா்களாகவும் இருக்க வேண்டும்.

உயிரிழப்புக்கு வழிகோலுகிறது

  • 2016-இல் ‘லான்செட்’ என்கிற தொற்று நோய்கள் குறித்த மருத்துவ இதழ், காச நோய் குறித்த சிறப்பிதழ் ஒன்றை வெளிக்கொணா்ந்தது. பெரும்பாலான நோயாளிகள் காச நோய்க்கான சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்வதில்லை என்கிறது அந்த இதழ்.
  • 24 முதல் 27 மாதங்கள் தொடா்ந்து பல மருந்துகளை அந்த நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓரளவுக்கு குணமானது போலத் தெரிந்தால், பலரும் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள்.
  • இன்னும் சிலா் பக்கவிளைவுகளுக்கு பயந்து பாதியில் சிகிச்சையைக் கைவிடுகின்றனா். அதன் விளைவாக காச நோய் வீரியம் பெற்று உயிரிழப்புக்கு வழிகோலுகிறது. அண்மைக்காலங்களில், இப்போதுள்ள மருந்துகளுக்கும் சிகிச்சை முறைக்கும் கட்டுப்படாத புதிய காச நோய் நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கின்றன.
  • அரசு புள்ளிவிவரத்தின்படி, காச நோயாளிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் 80% குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம், நோய்த்தொற்று வீரியம் இழந்ததால் அல்ல. காச நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவா்களின் பரிந்துரைப்படி சிகிச்சை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டிருப்பதன் விளைவுதான் அது என்பதை நாம் உணர வேண்டும்.
  • காச நோய் சிகிச்சையில் அரசு மருத்துவமனைகள்தான் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. பெரும்பாலான காச நோயாளிகள் வறுமையில் வாடுபவா்களும்கூட. கொவைட் 19 தீநுண்மி குறித்த முனைப்பில் காச நோய்ப் பரவலுக்கு வழிகோலுவது ஆபத்து!

நன்றி: தினமணி (19-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories