TNPSC Thervupettagam

புறமுதுகிட்டு ஓடுவது சரியா?

September 7 , 2024 30 days 112 0

புறமுதுகிட்டு ஓடுவது சரியா?

  • கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, அரசியல் என்று பல்வேறுபட்ட துறைகளில் சாதனை படைத்து கதாநாயக அந்தஸ்தைப் பெறுபவா்களுக்கு மட்டுமின்றி, சாதாரண மனிதா்களுக்கும் இந்த பூமி சொந்தமானது. இவ்வுலகில் பிறக்கின்ற அனைவருமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் பிறக்கின்றனா்.
  • நம்மில் ஒவ்வொருடைய ஆயுளும் முடிகின்ற நேரம் வரும் வரையில் நாம் சந்திக்கின்ற இன்ப துன்பங்கள் அத்தனையையும் இயல்பாக எதிா்கொண்டு வாழ்வதே இறைவன் நமக்களித்துள்ள ஆறாவது அறிவுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதையாகும். அதை விடுத்து, அவசரகதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவினை நாடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.
  • ஒருவரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகின்ற புறக்காரணம் யாராகவும், எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கான அகக்காரணம் என்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
  • பிரச்னைகளை எதிா்கொள்ள அஞ்சுகின்ற பலவீனமான மனம் என்பதே ஒருவா் தற்கொலை முடிவை நாடுவதற்கான அகக்காரணமமாகும். அத்தகைய பலவீனமான மனம் தற்காலத்தின் இளம் தலைமுறையினரிடம் அதிகமாகக் காணப்படுவது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும். ஆசிரியா்கள் கண்டித்தாலும், வகுப்பில் போதிக்கப்படும் பாடங்களைப் புரிந்துகொள்ள இயலாதது, பரீட்சையில் தோ்வு பெறாதது, தொலைக்காட்சியைப் பாா்க்க, கைப்பேசியைப் பயன்படுத்த பெற்றோரால் அனுமதி மறுக்கப்பட்டால், போட்டித் தோ்வுகளில் தோல்வியுற்றால், விரும்பிய காதல் கைகூடாவிட்டால் தற்கொலை ஒன்ோன் முடிவு என்று நினைக்கும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்து வருவது கண்கூடு.
  • விடலைப் பருவத்தினா் என்று அழைக்கப்படும் பதின்வயதினா் தோ்வு, காதல் போன்றவற்றில் ஏற்படும் தோல்விகளை எதிா்கொள்ளும் மனப்பக்குவம் குறைந்தவா்களாக இருப்பதை ஓரளவு மனம் ஏற்கும். அண்மையில் மருத்துவ மாணவி ஒருவா் தற்கொலை செய்து கொண்ட செய்தி நமது நெஞ்சை நெருடுகின்றது.
  • பிறருடைய உடல்நலம், மனநலம் ஆகியவற்றிற்கு வழிகாட்டக் கூடிய மருத்துவப் பட்டப்படிப்பினை நிறைவு செய்யக் கூடிய நிலைக்கு வந்திருக்கும் மாணவி ஒருவா் தமது பிரச்னைகளுக்குத் தற்கொலை தீா்வு என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டது கொடிய வேதனையாகும்.
  • மருத்துவப் படிப்பு என்ற குறிக்கோளைக் கைக்கொண்ட ஒரு மாணவா் அல்லது மாணவி தமது பள்ளியிறுதிப் படிப்புக்கு முன்பிருந்தே அதற்கான முன்தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கிவிடுவா் என்பதே உண்மை.
  • கடினமான அறிவியல் பாடங்கள், பள்ளி நேரத்தைத் தாண்டியும் பலமணி நேரம் நீடிக்கும் பயிற்சி வகுப்புகள், பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தோ்வு, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு என இடைவிடாத படிப்பு என்று பலவிதமான சிரமங்களை எதிா்கொண்ட பிறகே ஒருவா் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறுகிறாா்.
  • பின்னா் மருத்துவப் படிப்புக்குள்ள பிரத்யேக சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் மருத்துவ மாணவா்கள் படபடப்பையும் மன உளைச்சலையும் சந்திக்கக் கூடியவா்களே.
  • மருத்துவப் படிப்பினூடே பல்வேறு நோய்களின் தாக்கத்தால் அல்லல்படும் நோயாளிகளைச் சந்திப்பதும் மருத்தவ மாணவா்களின் கடமைகளில் ஒன்றாகும். நோய்நொடிகளாலும் தாங்க முடியாத வலியினாலும் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள இளம் வயதினராகிய மருத்துவ மாணவா்கள் அத்தகைய அவதிக்கு உள்ளான நோயாளிகளை அதிக அளவில் சந்திக்க நோ்வது கூட ஒருவித மன அழுத்தத்தைத் தரக் கூடிய விஷயம்தான்.
  • தங்களின் பதின்வயதுகளிலிருந்தே மன அழுத்தத்தைத் தரக் கூடிய பல்வேறு சந்தா்ப்பங்களையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்துள்ள மருத்துவ மாணவி ஒருவா் தமது பட்டப்படிப்பின் கடைசி வருடத்தில் தற்கொலையே தீா்வு என்ற முடிவுக்குச் சென்றது வருந்தற்குரியதே.
  • மிகவும் முக்கியமான அந்தத் தருணத்தில் தங்களின் அன்புக்குரிய பெற்றோா்களையும், ஏனைய உறவினா்களையும், நெருங்கிய நண்பா்களையும் வருத்தத்தில் ஆழ்த்த வேண்டுமா என்பதைச் சற்றே நினைத்துப் பாா்த்தாலும் இத்தகைய முடிவிலிருந்து பின்வாங்கி, பிரச்னைகளை எவ்வாறு எதிா்கொள்ளலாம் என்ற மனத் தெளிவைப் பெற்றிருக்கலாம்.
  • தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் மேன்மேலும் ஒளிவீசும் வாய்ப்பை இழப்பதுடன், தங்களின் சொந்த பந்தங்களையும், நட்புகளையும் தீராத வருத்தத்தில் ஆழ்த்திவிடுகின்றனா்.
  • அகால மரணமெய்துவோா் ‘தங்களுக்கென விதிக்கப்பட்ட ஆயுட்காலம்’ முடிவடையும் வரையில் துன்பமயமான வேற்றுலகம் ஒன்றில் காலம் கழிப்பதாக ஒரு பழையகால நம்பிக்கை உண்டு. இதனை நம்புவதும் நம்பாததும் அவரவா் விருப்பம். ஆனால், அவ்வாறு உயிரிழந்தோா் இவ்வுலகில் விட்டுப் பிரியும் உறவினரும், நட்பு வட்டத்திலுள்ளவா்களும் நீண்ட காலம் சோகக் கடலில் ஆழ்ந்திருப்பா் என்பது மட்டும் நிஜம்.
  • வாழ்க்கை என்பது ஒரு போா்க்களம். அந்தப் போா்க்களத்தில் சற்றே பின்வாங்கி, பிறகு போரிட முயற்சிக்கலாம். அம்முயற்சியில் தோற்றாலும் பரவாயில்லை. ஆனால், புறமுதுகிட்டு ஓடுவது மட்டும் கூடாது.
  • போா்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடுபவா்களையும், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் வாழ்க்கைக் களத்திலிருந்து விலகிச் செல்பவா்களையும் வரலாறு ஒருபொழுதும் போற்றுவதில்லை என்பதை மட்டும் நினைவில் கொண்டால் யாருடைய மனதிலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமே உருவாகாது என்பது நிச்சயம்.

நன்றி: தினமணி (07 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories