TNPSC Thervupettagam

புற்றுநோய்த் தடுப்பே சிறப்பு!

February 4 , 2020 1808 days 1103 0
  • புற்றுநோய் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய்க் கண்டுபிடித்தலை ஊக்குவிக்கவும், தடுக்கவும், சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோய் விழிப்புணர்வு தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 17 பேர் புற்றுநோய் காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 4.2 கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புற்றுநோய்

  • புற்றுநோய் என்பது, நம் உடலில் இயல்பாகக் காணும் செல்களின், உயிரணுக்களின் (டி.என்.ஏ) இயல்பு பிறழ்ந்த கட்டுப்பாடற்ற வளர்ச்சியே. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த புற்றுநோய் இன்றைய காலகட்டத்தில் உணவுமுறை மாற்றத்தாலும், வாழ்வியல் மாற்றத்தாலும் பரவலாகக் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் - அதில் சுவைக்காக சேர்க்கப்படும் சில வேதிப்பொருள்கள், சில குளிர்பானங்களில் சேர்க்கப்படும் சில செயற்கை நிறமூட்டிகள், அடைக்கப்பட்ட  நொறுக்குத் தீனிகள், உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் பென்சோயேட் உப்பு, உண்ணும் உணவில் சேர்ந்து காணும் பூச்சிக்கொல்லி மருந்துகள், புகைப் பிடித்தல், புகையிலை  போடுதல், மது அருந்துதல், உடல் பருமன், கதிர்வீச்சுக்கு உட்படுதல், வைரஸ் கிருமிகள், சில வகை மருந்துகள்  முதலானவை காரணமாக  புற்றுநோய் ஏற்படுகிறது. நோயுடன் தொடர்புடைய குடும்ப வரலாறு காரணமாகவும் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். 
    புற்றுநோயை உண்டாக்குவதில் புகையிலை பெரும் பங்கு வகிக்கிறது.
  • அதில் உள்ள 70 வகை வேதிப் பொருள்கள் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. வாழ்நாள் முழுவதும் புகைப் பிடிப்போரில் இரண்டில் ஒருவருக்கு புற்றுநோய் வருவது உறுதியாக உள்ளது என உலக சுகாதார  நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 10-இல் 9 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் புகையிலை மூலமாகவே ஏற்படுகிறது. "புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்; உயிரைக் கொல்லும்' எனும் வாசகத்தைப் படிப்பதுடன், அதைத் தவிர்ப்பதும் நல்லது. 

நான்கு நிலைகள்

  • புற்றுநோயில் நான்கு நிலைகள் உள்ளன. இந்த நான்காவது நிலைதான் மெடாஸ்டாஸிஸ் எனப்படும் பல்வேறு உறுப்புகளுக்கு பரவிய நிலை. இந்த நிலையில் நோயாளியைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். ஆரம்ப (முதல்) நிலையிலேயே புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டால், சிறந்த சிகிச்சை  மூலம்   வாழ்நாளை நீடிக்க முடியும்.
    புற்றுநோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளைப் பொறுத்து குறிகுணங்கள் ஏற்படும்.
  • பொதுவாக பசியின்மை, உடல் எடை திடீரென குறைதல், காரணமில்லாமல் ஏற்படும் ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுதல், தலைசுற்றல், சில சமயங்களில் வலிப்பு, உடல் சோர்வு, அதிக வியர்வை, அடிக்கடி காய்ச்சல், முக்கியமாக நிணநீர் கோளங்கள் வீக்கம் போன்ற பல குறிகுணங்கள் காணும். அத்துடன் மூளை நரம்பு, வாய், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இரைப்பை, உணவுக் குழல், மார்பகம், சினைப்பை, கணையம், பெருங்குடல், மலக்குடல், எலும்பு, கருப்பை வாய்  போன்ற உறுப்புகள் குறித்து வரும்போது பற்பல குறிகுணங்களை சேர்த்துக் காட்டும். 
  • புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு அன்றாட உணவில் நிறமிச் சத்து நிறைந்த பசுமையான காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்த்தல் அவசியம். வாழை இலையை மறந்து பிளாஸ்டிக் காகிதத்தில் உணவு உண்ண ஆரம்பித்த காலத்திலேயே இந்த நோய் நம்மைத் தாக்க ஆரம்பித்து விட்டது.

காரணங்கள்

  • வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் கெடுதியால் புற்றுநோய் வருவதாகவும், முக்கியமாக வாத மிகுதியால் வரக்கூடிய நோயாகவும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. "வாதமலாது மேனி கெடாது' என்பது நோய்க்கான முதற்காரணம் என்கிறார் தேரையர். எனவே, வாதத்தை நம் உடலில் சரி செய்துகொள்ள சித்தர்களால் அறிவுத்தப்பட்ட பேதி மருத்துவம் எடுத்துக் கொள்வது நோய் வராமல் தடுக்கச் சிறந்தது.
  • புற்றுநோய் சிகிச்சைக்கு பல்வேறு மூலிகைகள் உள்ளன. அவை பல்வேறு நாடுகளில் இன்று பல்வேறு ஆராய்ச்சிகளில் உள்ளன. முக்கியமாக, புற்றுநோய் சிகிச்சைக்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட வின்கிரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் எனும் அல்கலாய்டுகள் நித்ய கல்யாணி தாவரத்திலிருந்து பிரிக்கப்பட்டவையே ஆகும்.  மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் நிறமி வேதிப்பொருள் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறந்ததாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
  • பூண்டு, மிளகு, துளசி, வில்வம், சீந்தில், நெல்லி, கீழாநெல்லி, நிலவேம்பு போன்ற பல காயகல்ப மூலிகைகளை வரும்முன் தடுக்கவும் பயன்படுத்தலாம். நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவும். 

சித்த மருத்துவம்

  • மேலும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள புற்று பதங்கம், காளமேக நாராயண செந்தூரம், தாமிரக்கட்டு செந்தூரம், ரச பதங்கம், பஞ்ச பாஷாண செந்தூரம் போன்ற பல மருந்துகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் வாழ்நாளைக் கூட்ட முடியும். நவீன மருத்துவத்தோடு சேர்த்து சித்த மருத்துவ முறைகளும், யோகாசனப் பயிற்சிகளும் பாதிக்கப்பட்டோருக்குக் கூட்டு மருத்துவமாகக் கொடுத்தால் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆயுள் காலம் நீடிக்கும். 
  • கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலாவும், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகும், சித்தர்கள் கூறிய காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காயும் அன்றாடம் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டால் கொடிய உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்குப் பிரியாவிடை கொடுக்கலாம். 

நன்றி: தினமணி (04-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories