TNPSC Thervupettagam

புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் போக்க நான்கு திட்டங்கள்

June 9 , 2020 1686 days 1341 0
  • ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வேலை, வாழ்வாதாரம், திருமணம், புகலிடம் தேடல், தொழில், கூடவே மன அமைதி போன்றவற்றுக்காக மக்கள் புலம்பெயர்கிறார்கள்.
  • இந்தியாவிலிருந்து உலகின் பிற நாடுகளுக்குப் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை இந்தியாவுக்குள் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அது எவ்வளவு குறைவானது என்பது புலப்படும்.
  • இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி என்ற தரவை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டேன். இந்தியாவுக்குள் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடி அதிகரித்திருக்கிறது என்று கடந்த டிசம்பரில் ஒரு பொருளியல் அறிஞர் ஒரு தரவை முன்வைத்தார்.
  • கிட்டத்தட்ட இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு புலம்பெயர்ந்தோர். இவர்களில் பெரும்பாலானோர் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் போன்ற ஏழை மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்பது அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது.
  • ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்தும் கணிசமானோர் புலம்பெயர்கின்றனர். வடகிழக்கிலிருந்தும் சிறுசிறு குழுக்கள் புலம்பெயர்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழில்திறன் அற்றவர்கள், பாதியளவு தொழில்திறன் கொண்டவர்கள்.

கைவிடப்பட்டவர்கள்

  • உலக வங்கியின் பொருளியலரான சுப்ரியோ தேயைப் பொறுத்தவரை, “2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவுக்குள் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை 45 கோடி.
  • 2001-ல் இந்த எண்ணிக்கை 30.9 கோடியாக இருந்தது. ஆகவே, இந்த எண்ணிக்கை 45% அதிகரித்திருக்கிறது. 2001-11-க்கு இடைப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி 18%-தான் எனும்போது புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதைவிட மிகவும் அதிகமாக இருக்கிறது.”
  •  45 கோடி என்பது வங்கதேசத்தின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்; ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவு; அமெரிக்காவின் மக்கள்தொகையைவிட அதிகம்.
  • இந்த மக்கள்தான் தங்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் கண்ணீராலும் இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்கள். அவர்களை மத்திய அரசும், பல மாநில அரசுகளும், நம்மில் பலரும் மிகவும் கொடூரமாகக் கைவிட்டுவிட்டோம்.
  • முதல் பொதுமுடக்கத்துக்கு வெறும் நான்கு மணி நேர அவகாசமே கொடுக்கப்பட்ட மக்கள் அவர்கள்; தொடர்ந்து பொதுமுடக்கம் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுவந்தது.
  • ரயில், பேருந்து என்று எந்தப் போக்குவரத்துமே இல்லாததால் அவர்கள் நடந்தே செல்லத் தீர்மானித்தனர். இரவும் பகலுமாக நெடுஞ்சாலைகளில் நடந்தார்கள்.
  • காவல் துறையினரிடம் அடிவாங்காமல் தப்பிப்பதற்காகக் கரடுமுரடான சாலைகளில் நடந்தார்கள். காலி ட்ரக்குகளிலும் சிமென்ட் டம்ப்பர்களிலும் ஏறிச்செல்ல முயன்றார்கள்.
  • வீண்மீன்களுக்குக் கீழே இரவில் ஓய்வெடுத்தார்கள்; சில சமயம் ரயில் தண்டவாளத்தில். அந்த அளவுக்கு அரசின் மீது அவர்களுக்கு அச்சம்; பிடிபட்டால் தங்களுக்கும் தங்களின் பிரியமானவர்களுக்கும் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்றும் அச்சம்.
  • அதிகாரத்தின் மீது இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு இந்த அளவுக்கு அச்சமும் வெறுப்பும் இருக்கிறது. வீட்டுக்குச் சென்றுசேர வேண்டும் என்ற இந்த ஏக்கம், 16 பேர் அடங்கிய குழுவின் உயிரை ரயில் தண்டவாளத்தில் மிகக் கொடுமையான முறையில் பறித்திருக்கிறது.
  • அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டிய தருணம் இது; கூடவே, முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு அதிக அளவில் தர வேண்டும்.
  • இந்தியா அதன் மாநிலங்களில்தான் வாழ்கிறது, டெல்லியிலோ மாநிலத் தலைநகரங்களிலோ இல்லை. நம் மாநிலங்களுக்கு மேலதிக நிதி வழங்கப்பட வேண்டும்.
  • இந்த கரோனா நெருக்கடியைத் திறம்பட சமாளித்துவரும் கேரளம் போன்ற மாநிலங்களை மத்திய அரசு ஆதரிக்கவும், அவற்றைப் பின்பற்றவும், அவற்றுக்கு வெகுமதி அளிக்கவும் வேண்டும்.
  • ஏற்கெனவே, அதிக அளவு அதிகாரம் குவிக்கப்பட்டு, தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படும் அமைப்பில் மேலும் அதிகாரங்களைக் குவிக்கும் தருணம் அல்ல இது.

செய்தாக வேண்டிய நான்கு விஷயங்கள்

  • ஒன்று: நிதி ஆயோக் அல்லது ரிசர்வ் வங்கி ஆகியவற்றை அல்லாமல் புதுப்பிக்கத்தக்க பொருளாதாரத்தை காந்தியைப் பின்பற்றி மறுபடியும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா இன்னும் கிராமங்களில்தான் இருக்கின்றனவே தவிர நகரங்களில் அல்ல.
  • இரண்டு: குடும்பங்களைக் கட்டமைப்பதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
  • அதுதான் ஆதாரமும் இலக்கும். பெரும் தொழில் துறையால் படுகொலை செய்யப்பட்ட குடிசைத் தொழில்களை வலுப்படுத்த தூய்மை இந்தியா வலைப்பின்னலைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; கிராமப்புற உற்பத்தி யாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்குப் பெரும் தொழில்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கலாம். இதன் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருகும். புலம்பெயர்வும் அதனால் ஏற்படும் துயரமும் இல்லை. ஆகவே, விவசாயத்திலிருந்து கிடைப்பது கூடுதல் வருமானமாக மாறும். கைவினைத் தொழிலாளர்களுக்கு இன்னும் மேம்பட்ட திறன்கள், வடிவமைப்பு, தொழில்நுட்பம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கவும் முதலீட்டுக்கும் சந்தைப்படுத்தலுக்கும் வழிவகைசெய்யவும் வேண்டும்.
  • மூன்று: வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை முறைப்படுத்த வேண்டும்; மக்கள் தங்களின் மாநிலத்திலோ அல்லது தங்களின் கிராமங்களுக்கு அருகிலோ வேலை செய்யும்படி புலம்பெயர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
  • ஆகவே, நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி, அவர்களைக் கைவிட்டு, அரசாங்கம் அவர்களுக்கு ஏதும் செய்யாமல் விட்டுவிட்ட தற்போதைய துயரமான அனுபவத்துக்குப் பிறகு, தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு வெகு தொலைவில் இல்லாதவாறு ஒரு புலம்பெயர்வுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  • நான்கு: பெருநிறுவனங்களுக்கே நிதியுதவி செய்யும் திட்ட முறைகளிலிருந்து மாநிலங்கள், பஞ்சாயத்துகள், ஊராட்சிகளுக்கு நிதி தரும் முறைக்கு மாற வேண்டும்.
  • சுகாதாரம், பெண்கள், குழந்தைகள், மருத்துவத்துக்கு நாட்டின் பட்ஜெட்டில் 20% ஒதுக்குவதுடன் இந்த நிதியை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (09-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories