TNPSC Thervupettagam

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏன் இந்தத் தண்டனை?

May 7 , 2020 1717 days 839 0
  • இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்துதான் செய்கிறார்களா? - இந்த ஒரு கேள்விதான் நம்முடைய புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு இந்த கரோனா காலகட்டத்தில் நடத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கையில் திரும்பத் திரும்ப வருகிறது.
  • பிழைப்புக்காகத் தங்கள் சொந்த ஊர், உறவுகளைப் பிரிந்து வெளியூருக்குச் செல்லும் எவரும், முதலில் சிந்திப்பது தங்களுடைய பாதுகாப்பைத்தான். வாய்ப்பிருந்தும்கூட பிழைப்புக்கு வெளிநாடுகளைக் காட்டிலும் வெளிமாநிலங்களைத் தேர்ந்தெடுக்கும் அடித்தட்டுத் தொழிலாளர்கள் இன்று அதிகம். ‘இது நம் நாடு; எல்லா உரிமைகளும் நமக்கும் உண்டு; எப்போது வேண்டுமானாலும் நம் ஊருக்குத் திரும்பிவிடலாம்’ என்கிற எண்ணம்தான் முக்கியமான காரணம்.
  • கரோனாவை ஒட்டிய ஊரடங்கோடு, வெளிமாநிலங்களின் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்குள்ளேயே முடக்கிவைக்கும் முடிவை அரசு எடுத்தபோது, தொடக்கத்தில் இதன் பின்னுள்ள காரணம் முழுமையாக விளங்கவில்லை. பலர் நினைத்தது இதுதான்: ‘இவர்களை இப்போது ஊருக்கு அனுப்பினால், இவர்களிலேயே பலர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகலாம்; மேலும், கிருமியைக் கடத்துபவர்களாகவும் ஆகிவிடலாம் என்கிற எண்ணத்தால் மட்டுமே அரசு இவர்களை அந்தந்த ஊரிலேயே இருக்கச் செய்கிறது.’

சுயநல நோக்கம்

  • விஷயம் அதோடு முடியவில்லை என்பது இப்போது புலப்படுகிறது. தொழில் துறையினர் மிக விரைவில் மீண்டும் உற்பத்திக்குத் திரும்ப விரும்புகிறார்கள். இவர்கள் ஊருக்குப் புறப்படும்பட்சத்தில், உற்பத்தி பாதிக்கப்படும் என்று எண்ணுகிறார்கள்.
  • அவர்களுடைய அழுத்தத்தின் காரணமாகவே அரசு அவர்கள் ஊர் திரும்புவதை விரும்பவில்லை. இதனால்தான், ஐந்து லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பக் காத்திருக்கும் நகரங்களுக்குக்கூட வெறும் ஐந்தாறு ரயில்களை மட்டுமே அனுப்ப ஏற்பாடுசெய்கிறது அரசு.
  • உச்சகட்டமாக, கர்நாடகத்திலிருந்து தொழிலாளர்களை ஊர்களுக்கு அனுப்பும் முடிவைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார் அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா. மாநிலத்திலுள்ள தொழில் துறையினருடனான சந்திப்புக்குப் பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.
  • இது என்ன விளைவை உண்டாக்கும்? எப்படியாவது தப்பித்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தையே தொழிலாளர்களிடம் உருவாக்கும்.
  • மேலும், இனி சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறவே கூடாது என்ற எண்ணத்தையும் உருவாக்கும். ஆக, தொழில் துறையினரும் அரசும் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் முடிவையே எடுக்கிறார்கள். மேலும், இது எந்த விதத்திலும் அறம் அல்ல.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63% நகர்ப்புறங்களிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே, வேலைவாய்ப்பு என்பது நகர்ப்புறங்களோடுதான் பெரிதும் தொடர்புடையதாக இருக்கிறது.
  • குறைவான கூலி, மோசமான தங்குமிடங்கள், சமூகப் பாதுகாப்பற்ற நிலை ஆகியவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு வேலை பார்ப்பதற்குப் படிப்பறிவு குறைந்த, தொழில் திறன்கள் இல்லாத உழைப்புச் சக்தியையே தொழில் துறையினர் விரும்புகிறார்கள்.
  • அவர்கள் வேளாண் பருவங்களுக்கிடையில் சுழற்சி முறையில் வந்துசெல்பவர்களாக இருந்தால், இன்னும் கூடுதலாக மகிழ்ச்சியடைகிறார்கள். அப்போதுதானே தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கேள்வியெழுப்ப மாட்டார்கள்?
  • காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அளித்த சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 43 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் மஹாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே 25 லட்சம் பிஹார் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
  • இந்தியா முழுவதுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது முதலாளிகள் வேலைக்கு வரச்சொல்லிக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அதற்குக் காதுகொடுக்கிற நிலையில் இப்போது தொழிலாளர்கள் இல்லை. ‘ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கணக்கான தடவைகள் முதலாளியைத் தொடர்புகொள்ள முயன்றோம். பேசக்கூட முடியவில்லை. அரசு கொடுத்த கட்டுச்சோற்றைச் சாப்பிட்டு எப்படியோ ஒரு மாதத்தை ஓட்டிவிட்டோம்.
  • இப்போது முதலில் வீட்டாரைப் பார்க்க வேண்டும். வேறு எதுவென்றாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்பதே பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

காத்திருக்கும் வேலைகள்

  • ஆலைகள், கட்டுமானம் ஆகிய துறைகளில் மட்டுமல்ல; இந்தியாவின் வேளாண்மையும்கூட புலம்பெயர் தொழிலாளர்கள் சார்ந்ததாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.
  • பஞ்சாபின் தொழில் நகரமான லூதியானாவிலிருந்து ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்புவதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
  • அதேநேரத்தில், பஞ்சாபுக்கு மீண்டும் எப்போது ரயில்களை இயக்குவார்கள் என்று பிஹாரிலும் உத்தர பிரதேசத்திலும் உள்ள லட்சக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்காக பஞ்சாப் நிலவுடைமையாளர்கள் காத்துக்கொண்டி ருக்கிறார்கள்.
  • பஞ்சாபிலும் ஹரியானாவிலும் இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் தொழிலாளர்களைக் கொண்டுதான் வரும் ஜூன் மாதத்திலிருந்து நெல் நடவு வேலைகளைத் தொடங்க வேண்டும்.
  • ஏப்ரலில் கோதுமை அறுவடை, ஜூன் தொடக்கத்தில் சோளம் அறுவடை, ஜூலை கடைசி வரை நெல் நடவு, அக்டோபர் தொடக்கத்தில் உருளைக்கிழங்கு விதைத்து டிசம்பரில் அறுவடை என்று ஆண்டு முழுவதற்குமான வேலைகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

உழைப்புச் சுரண்டல்

  • சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், கட்டுமானத் துறை, உணவகங்கள், வீட்டு வேலைகள், விவசாய வேலைகள் என அனைத்தும் இப்படி மற்ற மாநிலங்களிலிருந்து குறைவான கூலிக்கு வரும் வேலையாட்களையே நம்பியுள்ளன.
  • அவர்களால்தான் நகரங்களின் மேம்பாடும் நாட்டின் வளர்ச்சியும் இருக்கிறது என்றால் அது தொடரட்டும். ஆனால், அந்தக் கூலிகளுக்குக் குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பையாவது உறுதிசெய்யாமல், இனியும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது ஒருபோதும் நியாயமாகாது.
  • 2015-ல் நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐநா ஏற்றுக்கொண்டுள்ளது. அவற்றில் எட்டாவது இலக்கு, பொருளாதார வளர்ச்சியும் கண்ணியமான வேலைச்சூழலும்; இவ்விரண்டும் வெவ்வேறாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.
  • கரோனாவுக்குப் பிறகு வாழ்க்கைச் சூழல்கள், தொழில் உறவுகள், அரசியல் வரைபடங்கள் என அனைத்திலும் மாற்றங்கள் நிகழக்கூடும். அந்த மாற்றங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கண்ணியமான வாழ்க்கைச் சூழலும் ஒன்றாக இருக்கட்டும்!

நன்றி: தி இந்து (07-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories