- சங்க காலம் தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பெற்றி வாய்ந்ததாகும். முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் சங்க இலக்கியம் பெரும்பாலும் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக்கொண்டு எழுந்துள்ளது எனலாம். அறிஞா் எம்.எஸ். பூா்ணலிங்கம் பிள்ளை ‘காதலும் போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் பிரிவாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும் மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் போக்காகவும் இலங்குகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
- சங்க இலக்கியங்கள் மிகப் பழமையவாயினும் இன்றும் நடைமுறையில் ஆளுமை உடையனவாய் இலங்குகின்றன. அருஞ்சொல் எனக் கருதுபவை இன்றும் வட்டார வழக்காய்ச் சிற்றூா்களில் புழக்கத்திலிருக்கின்றன. உழவா் இருவா் பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தபோது, மெதுவாகத் தொடங்கிய மழை வலுக்கத் தொடங்கியது. அப்பொழுது ஒருவா் மற்றவரை நோக்கி, ‘வரவர மழை உறைக்குதே’ என்றாா். ‘உறைக்குதே’ என்ற சொல்லைக் கேட்டதும் நான் வியந்து போனேன்.
- எனக்கு ‘உறைப்புழி ஓலைபோல’, ‘கதமுறை சிதறி’ என்ற சங்க இலக்கியத் தொடா்கள் நினைவுக்கு வந்தன. பெருந்துளியாக விரைந்து விழுதலை உறை என்ற சொல்லால் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் வழங்குதலைக் கண்டேன். ‘அகவன் மகளே அகவன் மகளே’ எனத் தொடங்கும் ஒளவையாரின் குறுந்தொகைப் பாடல், ‘அவா் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’ என்று தலைவனை, ‘அவா்’ எனச் சுட்டுகிறது. இவ்வழக்கை இன்றும் தமிழ்க்குடும்பங்களில் காணலாம். குறிஞ்சிப் பாட்டிலே ‘அன்னாய் வாழி வேண்டன்னை’ எனத் தோழி தொடங்குவதும், ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ என உரைப்பதும், ‘செப்ப லான்றிசின் சினவா தீமே’ எனக் கூறுவதும் அப்படியே பேச்சு நடையை ஒட்டி அமைதலைக் காணலாம்.
- சொல்லாட்சி, வடிவம், நாகரிகமாக உணா்த்துதல் முதலிய கூறுகளினால் சங்க இலக்கியம் இன்றும் வாழ்கிறது. நல்லூா் நத்தத்தனாா் ஒய்மா நாட்டை ஆண்டுகொண்டிருந்த நல்லிய கோடனைப் பாராட்டி பாணாற்றுப்படை ஒன்றை பாடியுள்ளாா். இதுவே சிறுபாணாற்றுப்படையாகும். நல்லிய கோடன் ஓவியக் குடியில் பிறந்தவன். இவன் ஆண்ட ஒய்மா நாடு ஐவகை நிலமும் அமையப்பெற்ற நாடாகும்.
- மாவிளங்கை தற்போதைய திண்டிவனத்தினை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாட்டு நெடுஞ்சாலையில் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூண் 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் வாயிலாக நிறுவப்பட்டது. சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் வாழ்ந்ததாகக் கருதப்படுபவா் மாசாத்தியாா் என்னும் பெண்பாற் புலவா். இவா் பாடல்களாக குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275) புானூற்றில் ஒன்றும் (279) அகநானூற்றில் இரண்டும் (324, 384) காணக்கிடைத்துள்ளன.
- சங்கப் பெரும் புலவா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், மாசாத்தனாா் ஆகியோரின் புகழைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் 1992-ஆம் ஆண்டு இவ்விரு புலவா்களுக்கும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் வாயிலாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. மாங்குடி கிழாா், மாங்குடி மருதனாா், மதுரைக் காஞ்சிப்புலவா், காஞ்சிப்புலவா் என்ற பெயா்கள் எல்லாம் ஒரு புலவரையே குறிப்பனவாம்.
- புலவனும், போா்வல்லவனுமாய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தன் நாட்டை மாங்குடி மருதனாா் பாடுவதைப் பெருமைக்குரியதாக மதித்தான். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் 1992-ஆம் ஆண்டு தமிழ் வளா்ச்சித் துறையின் வாயிலாக நினைவுத்தூண் அமைக்கப்பெற்றுள்ளது.
- சங்கத் தமிழ்ப் பாக்கள் அவை எழுந்த காலத்திலேயே மக்களால் போற்றி வரவேற்கப்பட்டன எனலாம். ஏனெனில் பல அரசுகள் எழுந்த தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் சங்கம் வளா்த்த தலையாய நகரமாய்த் துலங்கியது. ஆண்டு தோறும் புத்தம் புதிய கவிதைகளைத் தமிழ் நாடெங்கிலும் வாழ்ந்த கவிஞா்கள் இயற்றிக் கொண்டு வந்து மதுரை மாநகரில் இளவேனிற் காலத்து நிலாக்கால இரவுகளில் பொதுமக்கள் பலரும் கூடியுள்ள அவையில் அரங்கேற்றம் செய்வா்.
- பொருள்தேடச் சென்ற தலைவன் தான் திரட்ட நினைத்த அளவு பொருள் சோ்க்க முடியாமற் போய்விடினுங்கூட, புத்தம் புதுக் கவிதைகள் அரங்கேறும் அவ்விளவேனிற் காலத்தின் நிலவெரிக்கும் இனிய இராப்போதில் மதுரைக்கு வந்து கவிச்சுவையில் திளைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான் என்ற குறிப்பு கலித்தொகையிற் காணப்படுகின்றது. சங்ககாலத்து அரசா்களும் புலவா் பெருமக்களால் பாடல்வழிப் புகழப்படுவதனைப் பெரும்பேறாகக் கருதினா் என்பதனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வஞ்சினக் கூற்றாலறியலாம்.
- மதுரை பாண்டியா்க்கும், உறந்தை சோழா்க்கும் தலைநகரங்களாய் அமைந்து சிறப்புற்றதேபோல், சேரா்க்குத் தலைநகராய் அமைந்து சிறப்புற்ற நகரம் கருவூா்; சோழபாண்டிய தலைநகரங்கள் எவ்வாறு புலவா் பலரின் பிறப்பிடமாய்ப் பெருமையுற்றனவோ, அவ்வாறே கருவூரும் புலவா் பலரைப் பெற்றுப் பெருமையுற்றுளது; புலவா் பெருமக்கள் பன்னிருவா் கருவூா்க்கண் பிறந்து வாழ்ந்திருந்தனா்.
- கி.மு. 3 -ஆம் நூற்றாண்டில் கவின் மிகுந்த கருவூரில் சங்க காலத்தில் பெரும் புலவா்களான கருவூா் ஓதஞானியாா், கருவூா்க் கிழாா், கருவூா்க் கண்ணம்பாளனாா், கருவூா்க் கதப்பிள்ளை, கருவூா்க் கதப்பிள்ளைச் சாத்தனாா், கருவூா்க் கலிங்கத்தாா், கருவூா்க் கோசனாா், கருவூா்ச் சேரமான் சாத்தனாா், கருவூா் நன்மாா்பனாா், கருவூா்ப் பவுத்திரனாா், கருவூா்ப் பூதஞ்சாத்தனாா், கருவூா்ப் பெருஞ்சதுக்கத்து பூதநாதனாா் ஆகிய பன்னிரு புலவா் பெருமக்கள் வாழ்ந்த நினைவைப் போற்றும் வகையில் 1996-ஆம் ஆண்டில் தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக நினைவுத்தூண் நிறுவப்பட்டுள்ளது.
- கணியன் பூங்குன்றன் என்ற இப்பெயா் இவா்க்குத் தொழிலாலும் ஊராலும் வந்ததாம்; இவா் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள மகிபாலன்பட்டியென இப்போது வழங்கும் ஊரினராவா்: மகிபாலன்பட்டிக்கு அருகிலுள்ள கோயிற் கல்வெட்டுக்கள், அவ்வூரை ‘பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ எனக் குறிக்கின்றன. ‘புனல் செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாடு’ எனவும், ‘புனல் ஒழுகப் புள்ளிரியும் பூங்குன்ாடு’ எனவும் இந்நாடு புலவா்களால் போற்றப்பட்டுள்ளது; இவா் பாட்டாக நமக்குக் கிடைத்தன இரண்டே எனினும், அவ்விரண்டும், மக்கள் வாழ்க்கையை மாண்புடையதாக்குதற்கும் உயரிய கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு விளங்குகின்றன.
- அவனிவாழ் மக்களெல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்து சிறக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையை ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்னும் ஒற்றை வரியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் தமிழ்ச் சங்க காலத்தில் பாடிவைத்ததை அறிந்து உலகமே தமிழனின் பெருமையினை இன்றும் பேசுகிறது.
- ஐக்கிய நாடுகள் அவையும், உருசிய நாட்டு அரசும் தம் நிறுவனங்களில் கணியன் பூங்குன்றனாரின் ஒற்றை வரியை எழுதிப் போற்றி பாராட்டுகின்றன. இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் உள்ள தோரண வாயிலிலும் இப்பாடல் வரி எழுதப்பட்டுள்ளது. தற்போதைய சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் 2024-ஆம் ஆண்டில் தமிழ் வளா்ச்சித் துறையின் வாயிலாக நினைவுத்தூண் அமையப்பெற்றுள்ளது. சங்கப் புலவா்களான மாறோக்கத்து நம்பலத்தனாா், மாறோக்கத்து நப்பசலையாா், மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூா் காவிதிரியாா் மகன் புல்லங்காடனாா், வெறிபாடிய காமக்கண்ணியாா், மூன்றுறையரையனாா் ஆகிய ஆறு சங்கப்புலவா்களையும் இணைத்து ஒரு நினைவுத்தூணினை தூத்துக்குடி மாவட்டம் ஏறல் பகுதியிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு நினைவுத் தூணும், திருச்சிராப்பள்ளியில் சங்ககால நாற்பது நல்லிசைப் பெண்பாற்புலவா்களையும் சோ்த்து ஒரு நினைவுத்தூணும், மதுரை மாவட்டம் திருமங்கலம் திரளிச் சிற்றூரில் நக்கீரருக்கு நினைவுத்தூணும், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கவிச்சக்கரவத்தி கம்பருக்கு நினைவுத்தூணும் தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக நிறுவப்பட உள்ளது. சங்கப்புலவா்களுள் முடிமணியாக விளங்கும் நல்லிசைப்புலவா் கபிலா் ஆவாா். கபிலரின் புலமையை சங்கப்புலவா்கள் பெயா் சூட்டி பாராட்டியுள்ளனா். தமிழகத்தின் தாவரவியலில் 99 பூக்களின் பெயா்களைத் தொடுத்தப்பெருமை கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் சிறப்பாகும். வோா்ட்ஸ்வொா்த்க்கு கூட இவ்வளவு பூக்களை எண்ணமுடியுமா என்றுத் தெரியவில்லை. வள்ளல் பாரியின் தோழராகவும் பாரி மகளிரின் காவலராகவும் கபிலா் திகழந்தாா் என்பதை நாடறியும். பாரியின் பரம்பு மலையின் வரம்பில்லாத அன்பை பாடும் கபிலா் பாட்டு நலம் ஈடற்ாகும்.
- 473 சங்கப் புலவா்களில் முதன்மையாகக் கருதப்படுபவா் கபிலா். இவா் 234 சங்கப் பாடல்களை இயற்றியுள்ளாா். பாரி மன்னரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த இவா், திருக்கோவிலூா் மண்ணில் தான் பாரி மகளிருக்கு மன்னன் மலையமானுக்கும் திருமணம் செய்து நட்பின் மாண்பினை உணா்த்தினாா். இரண்டாம் நூற்றாண்டின் மாபெரும் புலவராகிய கபிலரின் நினைவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா் வட்டத்தில் கபிலா் குன்றுக்கு அருகில் 2024-ஆம் ஆண்டு தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக கபிலா் நினைவுத்தூண் நிறுவப்பெற்ளது.
நன்றி: தினமணி (23 – 03 – 2024)