- இந்தியாவில் 1973இல் புலி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தற்போது 50 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டது. இந்தியக் காடுகளில் புலிக் காப்பகங்கள் தொடங்கப்பட இது காரணமாக இருந்தது.
- 1972ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியக் காடுகளில் 1,827 புலிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. 2022 நிலவரப்படி, 3,167-3,925 புலிகள் உள்ளன. உலக அளவில் காட்டில் வாழும் புலிகளில் 4இல் 3 பங்கு புலிகள் இந்தியாவில்தான் வாழ்கின்றன. இன்றுவரை கானுயிர் நிர்வாகத்தில் புலிக் காப்பகங்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் விளங்குகின்றன. ஆனால் இதற்கு மிகப் பெரிய விலை கொடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழ்ந்து வந்த மக்கள், பல தலைமுறைகளாகத் தாங்கள் வசித்துவந்த இடங்களை இழக்க வேண்டியிருந்தது.
- 1973இல் 9 காப்பகங்கள் 9,115 ச.கி.மீ பரப்பளவில் இருந்தன. தற்போது அவை 18 மாநிலங்களில் 54 காப்பகங்கள், 78,135.956 ச.கி.மீபரப்பளவுக்கு விரிவடைந்துள்ளன. புலிகளின் முக்கிய வாழிடங்கள் என அறிவிக்கப்பட்டவை (Critical Tiger Habitats), 42,913.37 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளன. இவை தேசியப் பூங்காக்களும் தேசியச் சரணாலயங்களும் அமைந்துள்ள பரப்பில் 26%ஐக் கொண்டுள்ளன.
- 1972இல் இந்தியக் கானுயிர் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. காடுகள் தேசியப் பூங்காக்களும் சரணாலயங்களுமாக வகைப்படுத்தப்பட இச்சட்டம் வழிவகுத்தது. இங்கெல்லாம் காட்டுயிர்களையும் தாவர வகைகளையும் மனிதக் குறுக்கீடுகளிலிருந்து பாதுகாக்கும் போக்கில், அதுவரை காட்டில் வசித்துவந்த மக்களின் உரிமைகள் விலக்கி வைக்கப்பட்டன. அதற்கான உரிமைகளும் அதிகாரமும் மாநில அரசுகளிடம் குவிக்கப்பட்டன. இந்தச் சட்டங்களின் விளைவுதான் புலி பாதுகாப்புத் திட்டம்.
- இந்தியக் காடுகளின் சில பகுதிகளைப் புலிகள் தொடர்பான திட்டங்களுக்காகவே ஒதுக்கீடு செய்து புலிகளுக்கான முக்கிய வாழிடங்களை அரசு ஏற்படுத்தியது. இத்தகைய பகுதிகளை ஒட்டி காடும் காடு அல்லாததும் கலந்த ஒரு பகுதி, நடுநிலை மண்டலமாகச் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டது. எனினும், மக்களைக் காட்டிலிருந்து முற்றிலும் விலக்கி வைப்பதன் மூலமாக மட்டுமே கானுயிரைப் பாதுகாக்க முடியும் என்கிற அணுகுமுறையால், பல தலைமுறைகளாகப் புலிகளுடன் ஒத்திசைவாக வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்களது வாழிடத்திலிருந்து இடம் மாற்றப்பட்டனர். இது பல சிக்கல்களுக்கு அடித்தளம் அமைத்தது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகப் பகுதியில் புலிகள் அழித்தொழிக்கப்பட்டுவிட்டதாக 2005இல் கண்டனக்குரல்கள் எழுந்தன. இந்தியாவின் மற்ற வனப்பகுதிகளில் பாதுகாப்புக்காக ஒரு புலிக்கு 24 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டு வந்த நிலையில், சரிஸ்காவில் ஒரு புலிக்கு 2 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அங்கு புலிகள் இருப்பதாகக் கணக்கெடுப்பு கூறினாலும், உண்மையில் சரிஸ்கா புலிகள் அனைத்தும் வேட்டைக்கு இரையாகிவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து மன்மோகன் சிங் அரசு, 2005இல் 5 பேர் கொண்ட புலிகள் பாதுகாப்புக்குழுவை உருவாக்கியது.
- புலிகளைப் பாதுகாக்கத் துப்பாக்கி ஏந்திய காவலர்களையும் வேலிகளையும் உள்ளடக்கிய ஏற்பாடுகள் இருப்பினும், அவை பலன் அளிக்கவில்லை; வனத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்துக்கும் புலிகள் வாழும் காட்டிலேயே வசித்துவரும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை இக்குழு கண்டறிந்தது.
- புலிகளின் பாதுகாப்பும் அவை வாழும் காட்டின் பாதுகாப்பும் பிரிக்க இயலாதவை. அதுபோலவே, காட்டின் பாதுகாப்பும் அங்கு வாழும் மக்களின் நலன்களும் பிரிக்க இயலாதவை எனக் குழு உறுதிபடக் கூறியது. அதன் பரிந்துரைகளின்படி, இந்தியக் கானுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்பு ஆணையமும் புலிகளைப் பேணுவதற்கான ஒரு திட்டமும் உருவாக்கப்பட்டன. எனினும் புலிகளுக்கான முக்கிய வாழிடங்கள், அதே அதிகாரங்களுடன் பராமரிக்கப்பட்டன. காட்டில் வாழும் மக்கள், அதுவரை பெற்றுவந்த பயன்பாடுகள், மாற்றியமைக்கப்பட்டன. தேவைப்பட்டால், அவர்களை இடமாற்றம் செய்யவும் குழு பரிந்துரைத்தது.
- எனினும், புலிகள் வசிக்கும் பகுதியில் வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றுவதை இதன் பரிந்துரைகள் தடுக்கவில்லை. மனிதர்களுக்கு ஆபத்து விளைவிப்பவையாக புலிகள் மாற நேர்ந்தால், அவற்றைக் கொல்லவும் இவை அனுமதித்தன.
- பழங்குடிகள் மற்றும் மரபாகக் காடுகளில் வசிக்கும் பிற மக்கள் (வன உரிமை) சட்டம், 2006ஐ அரசு இயற்றியது. புலிக்காப்பகங்கள் உள்பட அனைத்துக் காடுகளிலும் மக்களுக்கு உள்ள உரிமைகளை இச்சட்டம் அங்கீகரித்தது. தனிமனிதராகவும் சமூகமாகவும் அவர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
- கிராமப் பஞ்சாயத்து அமைப்பு, தங்கள் எல்லைக்கு உள்பட்ட காட்டில் தங்களுக்கான உரிமைகளைத் தீர்மானிக்கவும் வரையறை செய்யவுமான ஜனநாயகச் சூழல் இச்சட்டம் மூலம் ஏற்பட்டது. கானுயிர்கள், பல்லுயிர்ச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதிகார அமைப்பாகக் கிராமப் பஞ்சாயத்து மாறியது. இதன் மூலம் 1.79 லட்சம் கிராமங்களில் வாழ்ந்த குறைந்தபட்சம் 20 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரங்களைக் காட்டு உரிமைச் சட்டம் பாதுகாக்க முடிந்தது. இவர்களில் பாதிப் பேர் பழங்குடிகள்.
- கானுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் புலிகளுக்கான முக்கிய வாழிடம் உருவாக்கப்பட்டதைப்போல, காட்டு உரிமைகள் சட்டத்தின்கீழ் கானுயிர் முக்கிய வாழிடம் (Critical Wildlife Habitat) என்பது உருவாக்கப்பட்டது. கானுயிர் முக்கிய வாழிடமாக ஒருமுறை அறிவிக்கப்பட்ட பகுதியை, காடு தொடர்பற்ற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்பது இதில் இருந்த முக்கியமான விதிமுறையாகும்.
- பழங்குடி நல அமைப்புகளும், இச்சட்டப் பிரிவு வேண்டும் என்றுதான் ஏற்கெனவே வலியுறுத்தி வந்திருந்தன. வன உரிமைச் சட்டத்தின்படி, 4 கோடி ஹெக்டேர் காட்டு நிலம், கிராம நிர்வாக அமைப்புகளுக்கு மாற்றப்பட வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மதிப்பிட்டது. காடு தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டியிருந்தது.
- இந்திய அரசு, காட்டு உரிமைகள் சட்ட விதிமுறைகளை ஜனவரி 1, 2009இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டது. ஆனால் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், நவம்பர், 16, 2007இல் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, நாடு முழுவதும் இருந்த தலைமை கானுயிர் வார்டன்களுக்கு 13 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு, அதற்குள் புலிகளுக்கான முக்கிய வாழிடங்களை வரையறுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. வாழிடம் ஒவ்வொன்றும் 800-1,000 ச.கி.மீ. பரப்பில் அமைய வேண்டும்.
- இந்த அவசர நடவடிக்கையால் 12 மாநிலங்களில் 26 புலிகளுக்கான முக்கிய வாழிடங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டன. வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் 38(5)ஆம் பிரிவின் கூறுகள் இவற்றில் பின்பற்றப்படவுமில்லை. அறிவிக்கப்பட்ட மொத்தப் பரப்பில் 91.77 சதவீத நிலம், புலிகளுக்கான முக்கிய வாழிடப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
- புலிகளுக்கான முக்கிய வாழிடங்களை ஒட்டியுள்ள இடைநிலைப் பகுதிகள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் - பண்பாட்டு உரிமைகளை அங்கீகரித்து, புலிகள்-மக்கள் ஒன்றாக வாழ்வதை மேம்படுத்துவதாக இருந்திருக்க வேண்டும். அதன் எல்லைகளை நிர்ணயிக்கும் நெறிமுறைகள், அந்தந்தக் கிராம சபை, நிபுணர் குழு ஆகியவற்றின் நடுநிலையான கருத்துகளால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
- இவற்றைக் கருத்தில் கொள்ளாமலேயே புலிக் காப்பகங்கள் வரையறுக்கப்பட்டன. காட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள் அல்லது மரபுவழிப்பட்ட சமூகங்களின் ஒப்புதல் பெறப்படவே இல்லை. இதன் விளைவாக, புலிகளும் மக்களும் பரஸ்பரம் மோதிக்கொள்ளும் வகையில் ஒரே சூழலில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இம்மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் இடமாற்றங்களை மட்டுமே கானுயிர் பாதுகாப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. வன உரிமைச் சட்டத்தின்படி இவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும்போது, நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் ஆகியவற்றுக்கான நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை ஆகிய உரிமைகள் ஆகியவற்றைச் சட்டப்படி அரசு அங்கீகரிக்கிறது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதம் இன்றி இடமாற்றம் இருக்காது. இச்சட்டம், பொருளாதார இழப்பீடு, வாழ்வாதாரங்கள் ஆகியவற்றைக் கொண்ட மறுவாழ்வு வழிமுறைகளின் தொகுப்பை அவர்களுக்கு அளிக்கக் கோருகிறது.
- ஒவ்வொரு குடும்பமும் வீடு, நிலம் ஆகியவற்றைப் பெற வேண்டும். எனினும், மத்திய அரசும் மாநில அரசுகளும் திருத்தப்பட்ட வழிகாட்டல்கள்-2008இன்படி ரூ. 15 லட்சம் வழங்குவதுடன் இழப்பீட்டை நிறுத்திக்கொள்கின்றன.
- மக்கள், தங்களது விருப்பப்படியே இடம்பெயர்வதைத் தெரிவிக்கும்வகையில் அவர்களிடமிருந்து அதிகாரிகள் கையெழுத்துப் பெறுகின்றனர். நடைமுறையில், சட்டத்துக்கு இதுவே போதுமானதாக உள்ளது.
- காடுவாழ் மக்களின் உரிமைகள், இக்காப்பகங்களில் பொருள்படுத்தப் படுவதில்லை. உதாரணமாக, 2017இல் கானுயிர் முக்கிய வாழிடத்தை அறிவிப்பதற்கான வழிகாட்டல்கள் இல்லாதபோது, வன உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் உரிமைகளைத் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அங்கீகரிக்கவில்லை.
- புலிகளும் மக்களும் மோதலின்றி வாழ முடியுமா என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அது சாத்தியமில்லையெனில், அவர்களது உரிமைகளை மாற்றியமைக்கவோ, அவர்களை இடமாற்றம் செய்யவோ அரசு முன்வர வேண்டும். இவை அந்தந்தப் பகுதியைச் சார்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், சமூக அறிவியலாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, அம்மக்களின் விருப்பங் களையும் கருத்தில் கொண்டு நடைமுறைக்கு வர வேண்டும்.
நன்றி: தி இந்து (30 – 03 – 2024)