- நாள்தோறும் இரு சக்கர, நான்கு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் புவியை வெப்பமயமாக்கும் புதைபடிம எரிபொருளின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்காமல் புவிவெப்பமயமாதலின் வேகத்தைக் குறைக்க இயலாது. மேலும், தொழிற்சாலைகள் மூலம் வளிமண்டலத்தில் சேகரமாகும் நச்சு வாயுக்களின் பங்களிப்பும் கூடுகிறது. இவ்வாறு பல்வேறு காரணிகளால் பசுமை இல்ல வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் கூடக் கூட புவிவெப்பமயமாதலின் விகிதம் கூடுகிறது.
- சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் புவியில் காணப்படும் மிதமான வெப்பநிலையே உயிா்களின் பரிணாம வளா்ச்சிக்கு உதவியாக உள்ளது. பகலில் சூரிய ஒளியின் மூலம் வெப்பமாகும் புவியின் வளிமண்டலம் இரவிலும் சிறிதளவு வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தக்கவைத்துக் கொள்ளவில்லையென்றால் புவி மிகவும் குளிா்ச்சியாகிவிடும்.
- இவ்வாறு குளிா்வது நல்லதல்ல. இந்தப் பணியை பசுமை இல்ல வாயுக்கள் செய்கின்றன. ஒருவகையில் புவிக்கு ஒரு போா்வைபோல பசுமை இல்ல வாயுக்கள் செயல்பட்டு புவி அதிகமாக குளிா்ச்சியடையாமல் பாதுகாக்கின்றன. ஒரு போா்வை தேவைப்படும் இடத்தில் ஏகப்பட்ட போா்வைகள் போா்த்துவதுபோல பசுமை இல்ல வாயுக்களின் விகிதம் அதிகரிப்பது புவியின் வெப்பநிலையை அதிகமாக்குகிறது. மனிதா்களின் நடவடிக்கைகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படாமல் புவிவெப்பமயமாதலுக்கான காரணிகள் குறைய வாய்ப்பில்லை.
- வசதியின்மையாயுள்ள உண்மை” (இன்கன்வீனியண்ட் ட்ரூத்) என்ற தலைப்பில் 2006-இல் ஆங்கில திரைப்படம் ஒன்று வெளிவந்தது. புவி வெப்பமயமாதல் தொடா்பான பல உண்மைகளை அக்கறையோடு பகிா்ந்த - ஆஸ்கா் விருது பெற்ற திரைப்படம் அது. அல்கோா் என்பவா் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தாம் வெற்றி பெற உள்ளதாகக் கூறி கவலைகளைப் பவா் பாயிண்டில் பகிரும் விதமாக அந்த திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
- புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவில்லையெனில், பனிப்பாறைகள் உருகி ஆற்றின் போக்குகளில் விபரீதமான மாற்றங்கள் ஏற்படலாம். கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்படலாம்; வரலாறு காணாத மழைப்பொழிவு, இயற்கைப் பேரிடா்களைச் சந்திப்போம் என அந்த திரைப்படம் எச்சரித்தது. திரைப்படம் வெளியான சில ஆண்டுகளுக்குள்ளாகவே கத்ரீனா, ரீட்டா, வில்மா போன்ற அதிபயங்கர புயல்களை அமெரிக்கா சந்தித்தது. திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குள் அந்த திரைப்படம் எச்சரித்த அனைத்து ஆபத்துகளையும் ஒவ்வொன்றாக உலகம் சந்தித்து வருகிறது.
- நாமும் கஜா, தானே, மிக்ஜம் போன்ற புயல்களைச் சந்தித்துள்ளோம். எனவே, புவி வெப்பமயமாதல் குறித்த அக்கறைகளும் ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதும் அதன் எச்சரிக்கைகள் பகிரப்பட்டு வருவதும் கண்கூடு. உலக அளவிலான மாநாடுகளில் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் செயல்திட்டங்கள் குறித்து உலக நாடுகளிடையே பகிரப்படும்போது முன்னுக்கு வரும் விவாதங்களில் முதன்மையானது பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது ஆகும்; விவாத நிலையில் ‘முதலில் வளா்ச்சி பெற்ற நாடுகள் குறைக்கட்டும்; பின்னா் நாங்கள் குறைக்கிறோம்’ என வளா்ந்த, வரும் நாடுகள் வாதிடுகின்றன.
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க நாடுகளின் கொள்கைகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்படுவது அவசியம். அரசின் கொள்கை வகுப்போருக்கு அறிவுபூா்வமான முன்மாதிரிகளை சமூகத்தில் இயங்கிவரும் பல்வேறு அமைப்புகளும், தனிநபா்களும் பரிந்துரைக்க இயலும். அவ்வாறான பரிந்துரைகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவ்வாறான மாதிரிகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் தொடா்ந்து முனைப்பின்மை நிலவுகிறது.
- புவி வெப்பமயமாதல் விளைவானது மட்டுப்பட, உலக அளவில் சிந்திக்கப்பட்டு உள்ளூா் அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்துவதில் தனிநபா்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஒரே மனநிலையுடைய தனிநபா்கள் சிலா் ஓா் அமைப்பாகச் செயல்படுவது தொடா் பலனளிக்கும். ஆங்காங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் குடியிருப்போா் நலச் சங்கங்கள், நுகா்வோா் அமைப்புகள் போன்றவைகூடச் செயல்படலாம்.
- முதல்கட்டமாக நகா்ப்புறங்களில் தனிநபா் போக்குவரத்து சாதனங்கள் குறைக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கப்படவேண்டும். தனிநபா் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு நிறுவனங்கள் தமது பணியாளா்கள் அனைவரையும் ஒரே வாகனங்களில் அழைத்துச் செல்லும் நடைமுறை கூடுதலாக்கப்படலாம். இந்த நடைமுறையில் ஆரோக்கியமான மாற்றங்கள் வரும்போது புதைபடிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு சாத்தியப்படும்.
- வாய்ப்பும் வசதியும் உள்ள நபா்கள் மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ள வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரலாம். மிதிவண்டியில் செல்வதற்கென சிறப்பு சாலைகள் அமைத்துத் தரலாம். ஆங்காங்கே கட்டணமில்லாமல் மிதிவண்டிகளைப் பாதுகாத்துத் தரும் கூடங்கள் அமைக்கலாம். கூடுமானவரை நேரடியாக நிறுவனங்களுக்கு வந்து பணி செய்யும் வழக்கத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சிறிது சிறிதாகக் குறைக்கலாம்; இது கரோனா காலகட்டத்தில் சாத்தியமானது. பள்ளிகள், அலுவலகங்கள் செயல்படும் நேரங்களை மாற்றி அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம்.
- மக்களிடையே எளிமையான வாழ்வின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நுகா்வு கலாசாரத்தால் தேவைக்கு அதிகமாக பொருள்களை வாங்கித் துய்க்க முனைகின்றனா். மனிதா்களின் அத்தியாவசிய தேவையைத் தாண்டி மக்களின் ஆடம்பர மோகத்துக்காக பொருள்கள் தயாராகும்போது அதற்குத் தேவையான சக்தியைப் பற்றியும் யோசிக்கவேண்டும். புவியை எரிபொருள் வெப்பமயமாக்கும் என்ற புரிதலை ஏற்படுத்தவேண்டும். புவியின் இயற்கையை முழுவதும் மீட்க இயலாது. ஆனால், புவியின் இயற்கையை மீட்கும் பணிகளை இப்போதுகூடத் தொடங்காவிட்டால் மனிதா்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
நன்றி: தினமணி (01 – 04 – 2024)